தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 33 ஆவது அகில இலங்கை விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாவது நாளான இன்றைய தினம் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களையும் வட மாகாண பாடசாலைகள் சுவீகரித்து முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தின.சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன்  4.50 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதே போட்டியில் 4.00 மீற்றர் உயரத்தைத் தாவிய அளவெட்டி அருணோதயா கல்லூரி வீரர் எஸ். யதுசன் வெள்ளிப் பதக்கத்தையும் 3.90 மீற்றர் உயரம் தாவிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீரர் கே. கேதுசன் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த மண்டூர்  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் பரமேஸ்வரன் குகேந்திரன் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். அவர் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் போட்டியில் 12.99 மீற்ற்ர் தூரம் குண்டை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.