அநுராதபுரம், விஹாரை -ஹல்மில்லகுளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், ஆண் மற்றும் பெண் ஆகியயோரின் சடலங்கள் இன்று அதிகாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தன.

தற்போது அவர்களின் மரணங்களுக்கான காரணம் வெளியாகியுள்ளது.

பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைய குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது, 

தற்கொலை செய்து கொண்ட நபர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை வெளிநாட்டிற்கு வேலைக்காக அனுப்பிவைத்துள்ளார். இதன் பின்னர் தம்புள்ளை நாயகும்புர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் இவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்த குறித்த பெண்ணை அநுராதபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து இருவரும் ஒன்றாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். குறித்த நபருக்கு 13 வயதுடைய மகனொருவனும் இருக்கும் நிலையில் மகனும் அவர்களுடனேயே வசித்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் நபருக்கும் இடையில் நீண்ட நாட்களாக முரண்பாடுகள் காணப்பட்டதாக  தெரிவிக்கப்படுவதுடன், அவர்களுடன் வசித்து வந்த மகன் வீட்டிலிருந்து வெளியேறி தந்தையின் அக்காவின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதேவேளை, தற்கொலை செய்துக்கொண்ட குறித்த நபர் தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது மூத்த சகோதரியை சந்தித்து தான் அதிக நாட்கள் உயிருடன் இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதாக சகோதரி தெரிவித்துள்ளார்.

தான் மரணித்தால் தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது மகனுக்கு வழங்குமாறு தன்னிடம் தெரிவித்ததாக சகோதரி தெரிவித்துள்ளார்.

தனக்கும் தனது மகனிற்கும் நேர்ந்த கொடுமையினாலேயே தன்னுடன் வாழந்த இரண்டாவது மனைவியை கொலை செய்ததாகவும், தனக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்துக்களை தனது மகனுக்கு உரிமையாக்குமாறும் உயிரிழந்த நபர் எழுதி வைத்திருந்த கடிதமொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் , தற்கொலை செய்துகொண்ட நபர் 42 வயதுடையவரெனவும் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதன் பின்னர் அவர் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாமெனவும் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.