அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 19 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், வவுனியா நீதிமன்றில் உள்ள அரசியல் கைதிகளின் வழக்கை அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றவேண்டாம் என தெரிவித்தும் தமிழர் தாயக பகுதிகள் எங்கும் இன்று முழுமையான ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கபட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டமும் ஹர்த்தாலால் பூரணமாக முடங்கியது.

முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியில் முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அரச தனியார் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.

முல்லைத்தீவுநகரம், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான், மாங்குளம், மல்லாவி துணுக்காய், விசுவமடு, பாண்டியன்குளம் போன்ற பிரதேசங்களில் வணிக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது .

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அரச பேரூந்துக்களும்  போக்குவரத்து பணிகள் அனைத்தையும் நிறுத்தி ஆதரவு வழங்கியுள்ளார்கள்.