“இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டம்” வடமாகாணத்தில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் முன்னெடுப்பு

By Priyatharshan

13 Oct, 2017 | 02:27 PM
image

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டமானது வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 40 பாடசாலைகளில் மன்னார், கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 10 பாடசாலைகளின் விகிதம் மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இதுவரை 27 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சுமார் 15, 650 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இத்திட்டம் சென்றடைந்துள்ளது. இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டமானது வேற்றுமைகளுக்கு முறையான மதிப்பளித்து இலங்கையர் என்னும் கூட்டான அடையாளமொன்றை அமைத்துருவாக்குவதில் ஆக்கத்திறன் விமர்சன ரீதியில் சிந்திக்கும் ஆற்றல், புத்தாக்க யோசனைகள் மற்றும் சுதந்திரமான கருத்து வெளிப்பாடு என்பவற்றைத் தம்மகத்தே கொண்டுள்ளது.

இந்த அனுமானத்தின் பிரகாரம் இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டமானது சிறுவர்களையும் இளைஞர்களையும் ஆரம்பப் பயனாளிகளாகக் கருதிச் செயலாற்றுகின்றது.

இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் நான்காம் கட்டமானது இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தினால் அமுல்படுத்தப்பட்டது. வயதுவந்தோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் (16-19 வயதுடையோர்) ஆகியோருக்கு மத்தியில் அகிம்சைக் கலாசாரத்தினையும் சகிப்புத்தன்மை வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளல் வேறுபாடுகளுக்கு மதிப்பளித்தல் சமத்துவம்ரூபவ் நீதி, சமூகப் பிரச்சினைகளைக் கையாளுதல் வன்முறையற்ற விதத்தில் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தல் போன்ற பன்மைத்துவ விழுமியங்களையும் ஊக்குவிப்பதை இது குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

இளம் அரங்கக் கலைஞர்கள் பன்மைத்துவ விழுமியங்களை அகவயப்படுத்தி ஊக்குவிப்பதற்கும் சிறுவர்களும் இளைஞர்களும் முரண்பாடுகளை அகிம்சை முறையில் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு தமது சுதந்திரமான பேச்சு, விமர்சன ரீதியிலான சிந்தனை மற்றும் புத்தாக்கத் திறன்களை வடிவமைத்துக்கொள்வதற்கும் உதவுவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

வடமாகாணத்தில் கிளிநொச்சி வவுனியா மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பாடசாலைகளில் மக்கள் அரங்கச் செயற்பாடுகளை செயலாற்றுகை செய்வதற்கென சுமார் 48 இளம் மக்கள் அரங்கக் கலைஞர்களைப் (ஆண்கள்: 32 பெண்கள் 16) பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் அரங்கக் கலைஞர்கள் என்போர் சமூகத்தைப் பாதுகாப்பானதும் சம்பூரணமானதுமான இடமொன்றாக உருவாக்கும் பொருட்டு தங்களுடைய நேரங்களையும் ஆற்றல்களையும் அர்ப்பணிப்பதற்கென முன்வந்துள்ள கொள்கைப்பிடிப்புள்ள தனிநபர்களாவர்.

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றமானது இச்செயற்றிட்டத்தை அமுல்படுத்தும் பொருட்டு வட மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம் (வடக்கு),  கட்புல மற்றும் அரங்கக் கலைகள் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.

மேலும் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றமானது (SDJF) இலங்கையிலுள்ள சிறுவர்களினதும் இளைஞர்களினதும் நலன்களுக்காகவென மக்கள் அரங்கின் ஊடாக இளைஞர்களும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் பற்றிய கையேடொன்றை தயாரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதற்காக நியமிக்கப்பட்ட 6 நிபுணர்கள் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இதன் அடிப்படையில் மக்கள் அரங்க செயற்திட்டத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ கையேடு ஒன்று வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்