எம்மில் பெரும்பான்மையோருக்கு மயக்கமும் தலைச்சுற்றலும் ஒன்றே என கருதுகின்றனர். ஆனால் இவையிரண்டும் வேறு வேறு.

மூளையின் இயக்கத்திற்கு தேவையான அளவிற்கு ஓக்சிஜன் கிடைக்காத போதும், இரத்த ஓட்டத்தின் அளவோ அல்லது வேகமோ குறையும் போதும் ஏற்படும் தற்காலிக நினைவிழப்பிற்கு தான் மயக்கம் என்று பெயர். ஆனால் தலைச்சுற்றல் என்பது இதிலிருந்து மாறுபட்டது. காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் அதீத சோர்வின் காரணமாகவும், அதீத வியர்வை சுரப்பதன் காரணமாகவும், வலிப்பு நோய் காரணமாகவும், கட்டுப்பாடற்ற மிகு உணர்ச்சியின் காரணமாகவும் ஏற்படும் மிகக்குறுகிய கால நினைவிழப்பே தலைச்சுற்றல் எனப்படும்.

அதே போல் மயக்கம் என்பதை, மூளை மற்றும் நரம்பு தொடர்பானவை, இதயம் தொடர்பானவை, மன நலம் தொடர்பானவை என மூன்று வகையாக பிரித்தறியலாம். அதே சமயத்தில் பெரும்பாலான பெண்களும், குழந்தைகளும் ஏனைய இரண்டு காரணங்களைக் காட்டிலும் கவலை, இறப்பு, இழப்பு, சோகம், அதிர்ச்சி என மன நலம் சார்ந்த உளவியல் காரணங்களாலேயே மயக்கமுறுகின்றனர். ஆனால் எந்த காரணத்தால் பாதிக்கப்பட்டாலும் தலைச்சுற்றலுக்கும், மயக்கத்திற்கும் உரிய  நிவாரணமும், முழுமையான சிகிச்சையும் உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

டொக்டர் கோட்டீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்