கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே

Published By: Vishnu

19 Aug, 2026 | 06:13 PM
image

"கடற்றொழிலாளர்களுக்கு எமது அரசாங்கம் அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்கும். நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் கடற்றொழில் துறையின் பங்களிப்பு மிக முதன்மையானது. எனவே, நீங்கள் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்க வேண்டும்," என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (19) கொழும்பில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

"ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று எமது அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. நானும் எனது அமைச்சரும் கடந்த 20 மாதங்களாக இப்பதவிகளை வகித்து வருகிறோம். உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதே எமது பிரதான இலக்குகளுள் ஒன்றாகும். இதில் கடற்றொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, இக்காலப்பகுதியில் நாம் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கியுள்ளோம் என நம்புகிறோம்.

மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையிலேயே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்றோம். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசாங்கம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

எனினும், அண்மைய நாட்களில் பல்வேறு பிரச்சினைகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முதலில் சிறைச்சாலை விவகாரம் குறித்துப் பேசப்பட்டது, அடுத்து நீதித்துறைப் பிரச்சினை, தற்போது 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பற்றிப் பேசப்படுகிறது. 22-ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து முழுமையாக ஆராயாமல், அதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு பலர் விமர்சித்து வருகின்றனர்.

உண்மையில், இது ஒட்டுமொத்த நீதித்துறை மறுசீரமைப்பின் ஓர் அங்கமாகும். ஆனால், நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது பற்றி மட்டுமே பேசுகிறார்களே தவிர, நீதித்துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட ஏனைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்துப் பேசுவதில்லை.

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நியமனம் ஒரு தூதுவர் பதவியைப் போன்றது. அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நீங்கள்தான் மக்கள் மத்தியிற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல, மீனவர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து வர வேண்டும். எனவே, ஒரு சிறந்த தூதுவராக நீங்கள் செயல்பட வேண்டும்.

இத்துறையில் மேலும் பல விடயங்களைக் கற்று அனுபவங்களைப் பெறுங்கள். மக்கள் தொடர்பாடல் மிகவும் அவசியமானது. மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தொழில் செய்கின்றனர். எனவே, அவர்கள் தங்களது குறைகளைக் கூறும்போது பொறுமையுடன் செவிமடுங்கள். அவ்வாறு செவிமடுத்தாலே அவர்களின் 50 சதவீத மன அழுத்தம் குறைந்துவிடும்.

அதேவேளை, கடல்வளங்கள் தொடர்பான தரவுகளுடன் கூடிய அறிவியல் பூர்வமான அறிக்கைகளை நாரா (NARA) நிறுவனத்திடம் கோரியிருந்தோம். நாளை அந்த அறிக்கை கிடைக்கப்பெறும். அதனை அடிப்படையாகக் கொண்டு கடல் மீன் வளத்தை அதிகரிப்பது குறித்து ஆராயப்படும்.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட்டது. இதுவரை 3,000 மில்லியன் ரூபாய் அளவிற்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக இத்தகைய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அனைத்து வழிகளிலும் நாம் மீனவர் சமூகத்திற்கு என்றும் உறுதுணையாக நிற்போம்," என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்...

2026-09-11 18:37:52
news-image

"பசுமைப் பாதை" ; "நாட்டிற்கு ஒரு...

2026-09-11 17:38:46
news-image

முகநூல் களியாட்ட விருந்துகளைக் கண்காணிக்க விசேட...

2026-09-11 17:37:03
news-image

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட...

2026-09-11 16:39:30
news-image

வத்தேகமவில் கார் மோதி நபரொருவர் உயிரிழப்பு...

2026-09-11 16:33:19
news-image

முதலையிடம் போராடி உயிர் தப்பிய இளைஞர்:...

2026-09-11 16:20:52
news-image

செம்மணி உள்ளிட்ட அனைத்து மனித புதைகுழிகள்...

2026-09-11 16:30:28
news-image

2015 பிட்டிகல கொலை வழக்கு: குற்றவாளிக்கு...

2026-09-11 16:24:04
news-image

வற்றாப்பளை சந்தியில் இராணுவப் பயன்பாட்டிலிருந்த அர,...

2026-09-11 15:48:12
news-image

மாகாணசபைத் தேர்தல் விசேட பாராளுமன்ற செயற்குழுவின்...

2026-09-11 15:43:29
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளுங்கள்...

2026-09-11 15:31:38
news-image

பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி 21வது...

2026-09-11 15:30:51