துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு ; தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை - அமைச்சர் ஆனந்த விஜயபால

19 Aug, 2026 | 02:09 PM
image

(செ.கவிஷனா)

நாட்டில் பதிவாகும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கடந்த ஆண்டை விட கணிசமாகக் குறைந்துள்ளதுடன், அவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை. இதனிடையே, பாதாள உலகக் குழுக்களின் சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக ஒழித்து, வெளிநாடுகளில் உள்ள முக்கிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், விசாரணைகளின் நலன் கருதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உத்திகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்படாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (18) அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய சந்தேக நபரான ஷிரான் பாசிக் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். 

விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை உடனடியாக முழுமையாக உறுதிப்படுத்த முடியாது. இந்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்போது, அவர் சேர்த்த சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அவருக்கு இருந்த இரகசியத் தொடர்புகள் குறித்த முழுமையான உண்மைகள் வெகுவிரைவில் வெளிச்சத்திற்கு வரும் என நம்பப்படுகிறது. 

இதன் வாயிலாக, பாதாள உலகக் குழுவினருக்கும் அரசியல் களத்திற்கும் இடையேயான தொடர்புகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, பாதாள உலகக் குழுவின் முக்கிய நபராகக் கருதப்படும் கஞ்சிபானை இம்ரான் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றாலும், நாட்டில் பாதாள உலகக் குழுவினரின் சட்டவிரோதச் செயற்பாடுகளை முழுமையாக ஒழிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. 

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள பாதாள உலகத் தலைவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், 'கஞ்சிபானை இம்ரான்' உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என உறுதியாக நம்பப்படுகிறது. இத்தகைய பாதாள உலகத் தலைவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் பணி மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உத்திகள் குறித்த தகவல்களைத் தற்போதைய நிலையில் விசாரணைகளின் நலன் கருதி ஊடகங்களுடன் பகிரவேண்டிய அவசியம் இல்லை.

மேலும், தற்போது பொலிஸ் துறை அரசியல் தலையீடுகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின்போது பாதாள உலகக் குழுவினரிடமிருந்தோ அல்லது அரசியல்வாதிகளிடமிருந்தோ வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பொலிஸார் ஒருபோதும் அடிபணியாமல், எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் தங்களது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் பல்வேறு பாதாள உலகக் குழுவினரையும் போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வெற்றிகரமாகக் கைது செய்துள்ளதை இதற்குச் சான்றாகக் கொள்ள முடியும்.

நாட்டில் அண்மைக்காலமாக ஆங்காங்கே பதிவாகி வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 102 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அந்த எண்ணிக்கை 35ஆகக் குறைந்துள்ளதுடன், குற்றச் செயல்கள் புள்ளிவிபர ரீதியாக கணிசமாகக் குறைந்துள்ளதை இது உறுதிப்படுத்துகிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பெரும்பாலும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய தனிப்பட்ட மோதல்களின் விளைவாகவே ஏற்படுவதால், இத்தகைய சட்டவிரோத வர்த்தகத்தை முற்றாக முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தனிப்பட்ட சில சம்பவங்கள் இடம்பெற்றாலும், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அத்தகைய குற்றவாளிகளைக் கண்டறிந்து துரிதமாகச் சட்டத்தின் முன் நிறுத்தி வருகின்றனர். பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் இடமளிக்காது. எந்தவொரு வன்முறைச் சம்பவங்களையும் அல்லது உயிரிழப்புகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. 

போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலகக் குழுக்களையும் சமூகத்திலிருந்து முற்றாக ஒழிப்பதே தங்களின் இலக்காகும். எனவே, இச்சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், நிலைமை முழுமையாக பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20