இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க இளைஞர்களுக்கு தேசிய புத்தாக்க சவால்

19 Aug, 2026 | 10:47 AM
image

(வீ.பிரியதர்சன்)

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) ஆகியன இணைந்து “உலக உணவு தினம் 2026 இளையோருக்கான புதுமைப் படைப்பாற்றல் சவால்” என்ற தேசிய போட்டியை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளன.

“இன்றைய எமது புதிய கண்டுபிடிப்புக்களே நாளைய உலகை வளமாக்கும்!” என்ற உலக உணவு தினம் 2026ஆம் ஆண்டின் கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்தப் போட்டி, இலங்கையின் விவசாய – உணவுக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்கு நடைமுறைக்கு சாத்தியமான மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளை உருவாக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

விவசாயம், கடற்றொழில், கால்நடை, சுற்றாடல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட துறைகளில் காணப்படும் நிஜ உலகப் பிரச்சினைகளுக்கு புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்குவதற்கான தேசிய தளமாக இந்தச் சவால் அமையும்.

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகள், வினைத்திறனற்ற நீர் பயன்பாடு, பூச்சி மற்றும் நோய்த்தாக்கங்கள், பலவீனமான சந்தை இணைப்புகள், கடற்றொழில் உற்பத்திகளின் பழுதடைதல், மீன்பிடி உபகரணங்களின் இழப்பு மற்றும் குறைந்த செலவில் நீர்வாழ் உயிரின வளர்ப்பை மேற்கொள்வதில் காணப்படும் தடைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இளைஞர்களின் அறிவும் படைப்பாற்றலும் பயன்படுத்தப்படவுள்ளன.

“எமது நாட்டின் முக்கிய சவால்களுக்கு தீர்வு காணும் படைப்பாற்றல், அறிவு மற்றும் மனஉறுதியைக் கொண்ட திறமையான இளைஞர்களின் மையமாக பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன,” என பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் ஆராய்ச்சி அறிவை நிஜ உலகப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவதற்கும், உயர்கல்வித் துறையில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த முயற்சி உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டன் நெஷனல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த, இளைஞர்களின் சிந்தனைகளை சமூகத்திற்கு நிலையான பெறுமதியை உருவாக்கும் நடைமுறைத் தீர்வுகளாக மாற்றும் ஆற்றல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி விம்லேந்திர ஷரண், இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்பின் எதிர்காலம் புத்தாக்கம், இளைஞர்களின் ஆற்றல் மற்றும் படைப்பாற்றலில் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டி பல கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் திட்ட விளக்கக் குறிப்புகள் (Concept Notes) கோரப்படவுள்ளன. ஆரம்ப மதிப்பீட்டின் பின்னர் சுமார் 25 குழுக்கள் இணையவழி விளக்கக்காட்சிக்கு தெரிவு செய்யப்படும். அவற்றிலிருந்து சிறந்த 10 குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் துறைசார் பங்காளர்களின் வழிகாட்டலுடன் மாதிரி வடிவங்களை உருவாக்கும் வாய்ப்பைப் பெறும்.

இறுதிச்சுற்றுக்கு தெரிவாகும் குழுக்கள், உலக உணவு தினம் 2026 கொண்டாட்டங்களின்போது தமது புத்தாக்கங்களை காட்சிப்படுத்தவுள்ளன. இதில் முதல் ஐந்து இடங்களைப் பெறும் குழுக்கள் நடுவர் குழு மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்கள் முன்னிலையில் தமது தீர்வுகளை முன்வைப்பர். முதல் மூன்று இடங்களைப் பெறும் குழுக்களுக்கு பணப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இப்போட்டிக்கு பல அரச நிறுவனங்களுடன், TRACE Expert City, IEEE, இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழு (SLIC), இலங்கை விவசாய தொழில்முனைவோர் மன்றம் (SLAF), இலங்கை உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IFSTSL), தேசிய புத்தாக்க முகவர் நிலையம் (NIA) மற்றும் Square Hub ஆகிய நிறுவனங்களும் தொழில்நுட்ப மற்றும் கூட்டாண்மை ஆதரவை வழங்குகின்றன.

பல்கலைக்கழகங்கள், அரச நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கல்விசார் ஆராய்ச்சிகளை நடைமுறைத் தீர்வுகளாக மாற்றுவதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 16ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக உணவு தினம், உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் நிலையான விவசாய–உணவுக் கட்டமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கான கூட்டு நடவடிக்கைகளையும் ஊக்குவித்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10