சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து தெற்காசியாவின் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் உச்சிமாநாட்டில் ஆராய்வு

19 Aug, 2026 | 09:30 AM
image

(வீ. பிரியதர்சன்)

புவிசார் அரசியல் மாற்றங்கள், காலநிலை அவசரநிலைகள், அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மாறிவரும் உலகளாவிய சுகாதார முன்னுரிமைகள் ஆகியவற்றுக்கு மத்தியில், மனிதாபிமான நடவடிக்கைகளின் எதிர்காலம் குறித்து ஆராயும் வகையில் தெற்காசியாவின் எல்லைகளற்ற மருத்துவர்கள் ( Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF) South Asia) அமைப்பின் 4ஆவது தெற்காசிய சுகாதாரம் மற்றும் மனிதாபிமான உச்சிமாநாடு கொழும்பில் நடைபெற்றது.

‘Envisioning the Future of Humanitarianism’ – ‘மனிதாபிமானத்தின் எதிர்காலத்தைக் கற்பனை செய்தல்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இவ்வுச்சிமாநாட்டில், தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், பொது சுகாதார நிபுணர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

மனிதாபிமான நடவடிக்கைகள் பெருகிவரும் பன்முனை உலகில் எவ்வாறு கொள்கைப்பிடிப்புடனும், சமத்துவத்துடனும், திறம்படவும் தொடர முடியும் என்பது தொடர்பில் உச்சிமாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது. 

இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற முந்தைய உச்சிமாநாடுகளின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு நிகழ்வு தற்போதைய நெருக்கடிகளுக்கு பதிலளிப்பதைத் தாண்டி, எதிர்கால மனிதாபிமான கட்டமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது.

நடுநிலைமை, சுதந்திரம் மற்றும் பாரபட்சமின்மை போன்ற மனிதாபிமான அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்துக்கொண்டே, மாறிவரும் உலகளாவிய சூழலுக்கு மனிதாபிமான அமைப்புகள் எவ்வாறு தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் கலந்துரையாடப்பட்டது.

தெற்காசியாவின் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் பணிப்பாளர் பார்த்தசாரதி ராஜேந்திரன், உச்சிமாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது, அரசியல், புவியியல் அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவருக்கும் சரியான நேரத்தில் தரமான சுகாதாரப் பாதுகாப்பைப் பெறுவதற்கான உரிமை உள்ளதாக வலியுறுத்தினார்.

மேலும், எதிர்கால மனிதாபிமானக் கட்டமைப்பு அனைவரையும் உள்ளடக்கியதாகவும், உள்ளூர் அளவில் வழிநடத்தப்படுவதாகவும், பாலினப் பாகுபாடற்றதாகவும், உலகளாவிய ஒற்றுமையில் வேரூன்றியதாகவும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மருத்துவர் மற்றும் உலகளாவிய சுகாதார அமைப்பு நிபுணரான பேராசிரியர் வைத்தியர் டி. சுந்தரராமன் சிறப்புரையாற்றினார். இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் உள்ளிட்ட தெற்காசியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிபுணர்களும் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.

உச்சிமாநாட்டின் முக்கிய அமர்வுகள் மூன்று பிரதான கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருந்தன. முதலாவது, ‘மனிதாபிமான மற்றும் சுகாதாரக் கட்டமைப்பைக் கற்பனை செய்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப மனிதாபிமான நிதியளிப்பு மற்றும் நிர்வாக முறைகளை மாற்றியமைப்பது குறித்து ஆராயப்பட்டது.

இரண்டாவது அமர்வு, ‘உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனிதாபிமானத்தில் பெண்களின் தலைமைத்துவத்தின் எதிர்காலத்தைக் கற்பனை செய்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் மனிதாபிமான அமைப்புகளில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கு, அவர்களின் தலைமைத்துவத்தை கட்டுப்படுத்தும் கட்டமைப்புத் தடைகள் மற்றும் முடிவெடுக்கும் நிலைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மூன்றாவது அமர்வு, ‘சுகாதாரத் துறை இறையாண்மை மற்றும் அணுகலின் எதிர்காலத்தைக் கற்பனை செய்தல்’ என்ற தலைப்பில் இடம்பெற்றது. மருந்துகள், நோயறிதல் கருவிகள், தடுப்பூசிகள் மற்றும் சுகாதாரத் தொழில்நுட்பங்களுக்கான சமமான அணுகலை உறுதி செய்வதில் பிராந்திய ஒத்துழைப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றம், அறிவுசார் சொத்துரிமை மற்றும் பிராந்திய உற்பத்தியின் முக்கியத்துவம் ஆராயப்பட்டது.

அத்துடன், மனிதாபிமான சட்டபூர்வத்தன்மை, உள்ளடக்கிய முடிவெடுத்தல், பாலினம் மற்றும் பராமரிப்புப் பணிகள், இடம்பெயர்வு, சமூக அடிப்படையிலான பதிலளிப்பு, மருந்துகளுக்கான சமமான அணுகல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய விடயங்களும் உச்சிமாநாட்டில் கவனம் பெற்றன.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, தெற்காசியாவின் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு மாணவர்களுடன் இணைந்து முன்னெடுக்கும் ‘Friends of MSF’ முயற்சியின் உள்ளூர் கிளையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மனிதாபிமான நடவடிக்கை, உலகளாவிய சுகாதாரம், சமூக நீதி மற்றும் அவசரகால நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.

உச்சிமாநாட்டின் மூலம், அதிகரித்து வரும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப மேலும் பிரதிநிதித்துவம் மிக்க, பொறுப்புக்கூறக்கூடிய மற்றும் மக்களின் தேவைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கக்கூடிய மனிதாபிமான அமைப்பை உருவாக்குவதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

70க்கும் மேற்பட்ட நாடுகளில் மோதல்கள், தொற்றுநோய்கள், பேரழிவுகள் மற்றும் சுகாதார சேவைகளிலிருந்து விலக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிவரும் சர்வதேச சுயாதீன மருத்துவ மனிதாபிமான அமைப்பாக தெற்காசியாவின் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு ( Doctors Without Borders(MSF) ) செயல்பட்டு வருகிறது. அதன் பணிகள் மருத்துவ நெறிமுறைகள் மற்றும் பாரபட்சமின்மை, சுதந்திரம், நடுநிலைமை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10