“வடகொரியாவுடன் போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது. இதற்கான நட்ட ஈட்டை அந்நாடு கடும் தீச்சுவாலைகளால் செலுத்தும்” என்று வடகொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை விடாமல் அதிகரித்து வருகிறது. அண்மைய வாரங்களில் வடகொரியா ஏழு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்ததும், ஹைட்ரஜன் குண்டு ஒன்றைப் பரிசோதனை செய்ததும் அமெரிக்காவைக் கடுமையாகச் சீண்டியுள்ளது.

இதையடுத்து, வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள வடகொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரி யோங் ஹோ, வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் பற்றிக் கலந்துரையாடுவதற்கு ஒன்றுமில்லை என்றும், அத்திட்டத்தால் பிராந்தியத்தில் நிலவும் அமைதிக்கு எந்தப் பங்கமும் வந்துவிடாது என்றும் தெரிவித்துள்ளார்.

“எவ்வாறெனினும், ஐ.நா.வில் அமெரிக்க ஜனாதிபதி பேசிய பேச்சு அந்நாட்டுடனான போரின் திரியைப் பற்றவைத்துவிட்டது. இனி நாம் வார்த்தைகளால் பதில் சொல்லப் போவதில்லை. தீக்குவியல் மூலமே பதில் கூறுவோம்” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் பலத்துக்கு நிகரான பலத்தை அடைய இன்னும் ஒரு சிறு முயற்சியே செய்யப்படவேண்டியிருப்பதாகவும், தமது அணுவாயுத பலத்தை விட்டுத் தரும் எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் நாம் சம்மதிக்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.