(செ.சுபதர்ஷனி)
வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சமீபநாட்களாகப் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.
இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள், ஆரம்பத்தில் தொலைபேசி அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பில் உள்ள பண விபரங்கள் குறித்து வினவுகின்றனர். தாம் இலக்கு வைக்கும் நபர்களின் வங்கி வைப்புத் தொகைகள் பற்றிய முன் தகவல்களை ஏற்கனவே அறிந்து வைத்துள்ள இவர்கள், குறித்த பணம் மோசடியான முறையில் ஈட்டப்பட்டது எனப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து, இது தொடர்பில் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்துகின்றனர்.
அதன்பின்னர், மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் இடப்பட்ட போலி ஆவணங்களை அனுப்பி பொதுமக்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்குகின்றனர். தொடர்ந்து, குறித்த பணத்தை வேறு நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவரின் தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு அறிவுறுத்துவதுடன், அதற்காக ஒரு வங்கிக் கணக்கு இலக்கத்தையும் வழங்குகின்றனர்.
அவ்வாறு பணத்தை வைப்பிலிட்டதை உறுதிப்படுத்தும் வங்கிச் சீட்டையும் பரிசீலனைக்குப் பின்னர் அப்பணத்தை மீண்டும் பழைய கணக்கிற்கு மாற்றுமாறு பொலிஸ் அதிகாரியிடம் கோரும் கடிதம் ஒன்றையும் வழங்குமாறு பாதிக்கப்பட்ட நபர்களிடம் கோருகின்றனர். இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவோர் மிகவும் சாமர்த்தியமான முறையில் செயற்படுவதுடன், அவர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகளும் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர்கள் மோசடி காரர்களால் இலக்குவைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
ஆகையால் பொதுமக்கள் விபரமறியாத போலி இணைய இணைப்புகளில் உள்நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் எனத் தெரிவிக்கும் நபர்களிடம் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். அவ்வாறு சந்தேகத்திற்குரிய அழைப்புகள் ஏதும் கிடைக்கப்பெறும் பட்சத்தில், உடனடியாக உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM