கிளிநொச்சி ஏ9 வீதி, ஆனையிறவு, உமையாள்புரம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று இரவு சொகுசுப் பேருந்து ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்துச் சாரதியின் நித்திரையே இந்த விபத்துக்குக் காரணம் என்று அறியப்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரவு நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமையால், குறித்த பேருந்து உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், இன்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, மேற்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் மோதியதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் பலியானார்.

வீதிப் போக்குவரத்து பொலிசார் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.