(க.சிவலிங்கமூர்த்தி)
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) ஸ்தாபகரும் எனது தந்தையுமான ரோஹண விஜேவீர கைது செய்யப்பட்ட பின்னர் சட்டவிரோதமாகப் படுகொலை செய்யப்பட்டமைக்கும், 1988 - 1989 காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என இரண்டாம் தலைமுறை அமைப்பின் தலைவரும், ரோஹண விஜேவீரவின் மகனுமான உவிந்து விஜேவீர வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக வெள்ளிக்கிழமை (14) ரோஹண விஜேவீரவின் படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நீதிக்கோரி ஜனாதிபதிக்கு விசேட மகஜர் ஒன்றை கையளிக்க வந்த பின்னர் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
1988-89 சம்பவங்கள் தனித்து இடம்பெற்ற நிகழ்வுகள் அல்ல. 1980 ஆம் தசாப்தத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சியினால் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டது.
1978 அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை உருவாக்கி, 1980 பொது வேலைநிறுத்த அடக்குமுறை, 1981 யாழ். நூலக எரிப்பு போன்ற செயற்பாடுகளால் குற்றவியல் அரசாங்கத்துக்கான அடித்தளம் இடப்பட்டது.
1982 ஜனாதிபதித் தேர்தலில் எனது தந்தை ரோஹண விஜேவீர 2,73,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதால், அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு பெரும்பான்மை கிடைக்காது என உணர்ந்த ஜே.ஆர். அரசாங்கம், மோசடி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடித்தது.
இந்த மோசடிக்கு எதிராக எனது தந்தை மட்டுமே நீதிமன்றத்தை நாடினார். அவ்வழக்கில் அரசாங்கம் தோல்வியடையும் நிலை உருவானதாலேயே 1983 கருப்பு ஜூலை உருவாக்கப்பட்டு மக்கள் விடுதலை முன்னணி தன்னிச்சையாகத் தடை செய்யப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியில் இருந்த தோழர்களால் ஆன தற்போதைய திசைகாட்டி அரசாங்கம் இந்த வரலாற்றுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இதற்காக முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்
- 1982 சர்வஜன வாக்கெடுப்பு வழக்கு: ரோஹண விஜேவீர தாக்கல் செய்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய விசேட ஆணைக்குழுவை நியமித்தல்.
- பாராளுமன்றச் செல்லுபடித் தன்மை: 1982-1989 பாராளுமன்றம் சட்டப்பூர்வமானது அல்ல எனின், அக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்தல்.
- கைதின் பின்னரான படுகொலைகள்: ரோஹண விஜேவீர, உபதிஸ்ஸ கமநாயக்க, சமன் பியசிறி பெர்னாண்டோ, சாந்த பண்டார, உப்பாலி ரணவீர, உப்பாலி ஜெயவீர உள்ளிட்ட தலைவர்கள் கைதின் பின் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்துதல்.
மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பாதுகாப்புப் படைகள் என உயிரிழந்த 60,000 க்கும் மேற்பட்ட அனைவருக்காகவுமே நாங்கள் குரல் கொடுக்கின்றோம்.
முறையான ஆணைக்குழு விசாரணை மூலம் உண்மை வெளிக்கொணரப்பட்டால், பாதிக்கப்பட்ட ஏனைய குடும்பங்களிடம் வருத்தத்தைத் தெரிவிக்க நான் தயார். சஜித் பிரேமதாசவும் தனது தந்தையின் காலத்து அநீதிகளுக்கு வருத்தம் தெரிவிக்கத் தயாரா? எனக் கேட்க விரும்புகின்றேன் என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM