புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலையிலும், சில புகையிரத சேவைகளைத் தாம் நடத்தி வருவதாக இலங்கை புகையிரதச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது பற்றிப் பேசிய புகையிரதத் திணைக்களக் கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க, மாத்தறை, அவிசாவளை, மஹாவை மற்றும் பொல்கஹவலை ஆகிய பகுதிகளில் இருந்து கோட்டை வரை நடத்தப்படும் புகையிரத சேவைகள் இயக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய பயிலுனர் என்ஜின் சாரதிகளைப் பணியில் இணைத்துக்கொண்ட செயற்பாட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை எதிர்த்து நேற்று (11) இரவு சுமார் ஒன்பது மணியளவில் புகையிரத என்ஜின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

தற்போது வரை தொடரும் இந்த வேலை நிறுத்தத்தால், பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.