இந்தியாவின் ஒருங்கிணைக்கப்பட்ட பண பரிமாற்ற இடைமுகம் எனப்படும் யுபிஐ (UPI) கடந்த ஐந்தாண்டுகளில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. உலகளவில் 12க்கும் மேற்பட்ட நாடுகள் இத்தொழில்நுட்பத்தைத் தழுவியுள்ள நிலையில், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதார நிலப்பரப்பில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள இந்தியா, தனது டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜதந்திரத்தை சர்வதேச அளவில் வலுவாக நிலைநிறுத்தி வருகிறது.
சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா மூலமாக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் சேவை நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சாதாரண நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு யுபிஐ பயன்பாட்டிற்கு எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படாது என்றும், குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வர்த்தகம் செய்யும் பெரிய வணிகர்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு உடனடி விளக்கமளித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 திகதி அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2021-22 நிதியாண்டில் 4,595 கோடி பரிவர்த்தனைகளாக இருந்த நிலை மாறி, 2025-26 நிதியாண்டில் 24,161 கோடிகளுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல, வெளிநாடுகளில் செய்யப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளும் இருபது மடங்குக்கும் மேல் உயர்ந்துள்ளன. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சில்லறை பணப்பரிவர்த்தனைகளைக் கையாளும் அமைப்பாக யுபிஐ-ஐ சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்துள்ளதுடன், உலகின் ஒட்டுமொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதியை இந்தியா மட்டுமே மேற்கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) உருவாக்கிய இந்த கட்டமைப்பு, ஒரு பொதுப் பயன்பாட்டு அமைப்பாகச் செயல்படுவதால் உலக நாடுகளுக்கு எளிதில் மாற்றி அமைக்கக்கூடிய மாதிரியாக அமைந்தது. இந்தியா தனது டிஜிட்டல் திறனை 'இணைத்தல், உருவாக்குதல், பகிர்தல்' என்ற மூன்று முக்கிய வியூகங்கள் மூலம் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது.
முதலாவதாக, ஏற்கனவே பணப்பரிவர்த்தனை அமைப்புகளைக் கொண்டுள்ள சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்புகளை யுபிஐ உடன் இணைக்கும் பணிகளை இந்தியா மேற்கொள்கிறது. இரண்டாவதாக, சொந்தமாக டிஜிட்டல் கட்டமைப்பு இல்லாத நமீபியா, பெரு போன்ற நாடுகளுக்குப் புதிய அமைப்பை உருவாக்க இந்தியா உதவுகிறது. மூன்றாவதாக, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குத் தேவையான திறந்தநிலை வழிமுறை மற்றும் தரநிலைகளை மட்டும் பகிர்வதன் மூலம் அந்நாடுகள் சுயசார்பு பெற வழிவகுக்கிறது.
தற்போது உலகம் முழுவதும் 24 நாடுகளுடன் இந்தியா டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தனது கடுமையான தரவு பாதுகாப்பு விதிகளை சந்தைப் பலத்தின் மூலம் பிற நாடுகளின் மீது திணிக்கும் பாணியைப் பின்பற்றாமல், இந்தியா எந்தவித நிபந்தனையுமின்றி எளிய மற்றும் திறந்தநிலை டிஜிட்டல் கட்டமைப்பை வழங்கி ஒரு புதிய வழியைக் காட்டியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் தங்களின் சொந்த டிஜிட்டல் இறையாண்மையை அடையும் வகையில் தொழில்நுட்பத்தையும் அதை இயக்கும் அறிவையும் இந்தியா வழங்கி வருவது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் (Global South) இந்தியாவின் இராஜதந்திர மற்றும் தலைமைத்துவ நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM