முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வின்றேல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் - புகையிரத நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை

Published By: Vishnu

13 Aug, 2026 | 06:22 AM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத சேவையில் நிலவும் குறைப்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு நியாயமான காலப்பகுதிக்குள் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்கங்களுடனும் கலந்தாலோசித்து எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிப்போம் என இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவித்துள்ளது.

எமது நோக்கம் புகையிரத சேவையை சீர்குலைப்பது அல்ல, மாறாக நிலவும் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, பொதுமக்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான புகையிரத சேவையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நிர்வாக மற்றும் சேவைத் தீர்மானங்களை விரைவாகப் பெற்றுக்கொள்வதாகும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத நிலைய அதிபர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

புகையிரத திணைக்களத்தினுள் தற்போது நிலவிவரும் நிர்வாகம், சேவை மற்றும் கணக்காய்வு நடைமுறைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினால் பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்ட போதிலும், அவற்றுக்கு போதுமான மற்றும் விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

புகையிரத நிலையங்களில் வருகை மற்றும் புறப்படுதலை பரிசோதிப்பது அலுவலக மற்றும் நிர்வாக நடவடிக்கையின் ஒரு பகுதி மட்டுமே என்பதுடன், பல வருடங்களாக உரிய கணக்காய்வுக்கு உட்படுத்தப்படாத புகையிரத நிலையங்கள் உள்ள பின்னணியில், ஒட்டுமொத்த கணக்காய்வு நடவடிக்கையும் உரிய முறைமையின் கீழும், உரிய அதிகாரங்களைக் கொண்ட அதிகாரிகளின் மூலமும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

குறிப்பாக, உரிய பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்ட போதிலும், மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் பதவிகளுக்கான நியமனங்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தாமதப்படுத்தப்படுவதன் காரணமாக, ஒழுக்கக் கட்டுப்பாட்டு விசாரணைகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய நிர்வாகப் பணிகள் தேக்கமடைந்துள்ளன.

அத்துடன், புகையிரத போக்குவரத்து சேவை நாளுக்கு நாள் சீர்குலைந்து வரும் நிலைமை, புகையிரத நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளில் உள்ள பிரச்சினைகள், பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள புகையிரத வளங்கள்,சேவைத் தேவைகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காமை மற்றும் புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வளங்களைச் சரியாகப் பயன்படுத்தாமை குறித்தும் எமது சங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.

புகையிரத நிலைய அதிபர்கள் சேவைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் சேவைப் பிரமாணம் சார்ந்த விடயங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான இடைக்கால ஏற்பாடுகள் மேலும் தாமதமடைவதும் பாரதூரமான பிரச்சினையாகும். அதேநேரம், சேவை நேரக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது புகையிரத நிலைய அதிபர்கள் சேவை மட்டுமே அநியாயமாக இலக்கு வைக்கப்படுமானால், அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

இப்பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதே எமது முதன்மை எதிர்பார்ப்பாகும். அதற்காக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பங்களைக் கோரிய போதிலும், இதுவரை போதுமான பதில் கிடைக்கவில்லை என்பது குறித்து எமது பலத்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு நியாயமான காலப்பகுதிக்குள் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்கங்களுடனும் கலந்தாலோசித்து எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீர்மானிக்க புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதை அறிவித்துக் கொள்கின்றோம்.

எமது நோக்கம் புகையிரத சேவையை சீர்குலைப்பது அல்ல, மாறாக நிலவும் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, பொதுமக்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான புகையிரத சேவையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நிர்வாக மற்றும் சேவைத் தீர்மானங்களை விரைவாகப் பெற்றுக்கொள்வதே ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்...

2026-09-11 18:37:52
news-image

"பசுமைப் பாதை" ; "நாட்டிற்கு ஒரு...

2026-09-11 17:38:46
news-image

முகநூல் களியாட்ட விருந்துகளைக் கண்காணிக்க விசேட...

2026-09-11 17:37:03
news-image

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட...

2026-09-11 16:39:30
news-image

வத்தேகமவில் கார் மோதி நபரொருவர் உயிரிழப்பு...

2026-09-11 16:33:19
news-image

முதலையிடம் போராடி உயிர் தப்பிய இளைஞர்:...

2026-09-11 16:20:52
news-image

செம்மணி உள்ளிட்ட அனைத்து மனித புதைகுழிகள்...

2026-09-11 16:30:28
news-image

2015 பிட்டிகல கொலை வழக்கு: குற்றவாளிக்கு...

2026-09-11 16:24:04
news-image

வற்றாப்பளை சந்தியில் இராணுவப் பயன்பாட்டிலிருந்த அர,...

2026-09-11 15:48:12
news-image

மாகாணசபைத் தேர்தல் விசேட பாராளுமன்ற செயற்குழுவின்...

2026-09-11 15:43:29
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளுங்கள்...

2026-09-11 15:31:38
news-image

பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி 21வது...

2026-09-11 15:30:51