மலேசியாவை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட இலங்கை இன்று இந்தியாவை சந்திக்கிறது

11 Aug, 2026 | 12:38 PM
image

(நெவில் அன்தனி)

ஹொங் கொங் காய் டெக் ஸ்போர்ட்ஸ் அரினா உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற மிகவும் முக்கிய ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் பிரதான கிண்ணப் பிரிவு போட்டியில் மலேசியாவை 66 - 52 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இலங்கை, அரை இறுதி வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது.

இந் நிலையில் இன்று நடைபெறவுள்ள தனது நான்காவது போட்டியில் இந்தியாவை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

சிங்கப்பூருக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் துலங்கி வன்னிதிலக்க, கயஞ்சலி அமரவன்ஷ ஆகியோர் இழைத்த ஏகப்பட்ட தவறுகளால் 51 - 62 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

ஆனால், மலேசியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிறந்த வியகங்களுடன் விளையாடிய இலங்கை அவ்வப்போது தவறுகளை இழைத்தபோதிலும் இறுதியில் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொண்டது.

கயஞ்சலி அமரவன்ச, ஆடுகளத்தின் மத்தியிலிருந்து பந்து பரிமாற்றங்களில் அவ்வப்போது தவறுகளை இழைப்பதால் இலங்கை அணி பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது.

அவரும் துலங்கியும் பந்து பரிமாற்றங்களில் இழைக்கும் தவறுகளைத் திருத்திக்கொண்டு விளையாடுவது மிகவும் அவசியமாகும்.

போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை அப் பகுதியை 16 - 15 என தனதாக்கிக்கொண்டது.

தொடர்ந்து இரண்டாவது ஆட்ட நேர பகுதியின் ஆரம்பத்தில் மீண்டும் சிற்சில தவறுகளை இழைத்த இலங்கை, அதன் பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடி இரண்டாவது பகுதியை 16 - 11 என தனதாக்கி இடைவேளையின்போது 32 - 26 என முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை, அப் பகுதியை 18 - 10 என தனதாக்கிக் கொண்டு 50 - 36 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியில் இரண்டு அணிகளும் சளைக்காமல் விளையாடின. இலங்கை அணி தவறுகளை இழைத்ததால் அப் பகுதி 16 - 16 என சமநிலையில் முடிவடைந்தது. எனினும் ஒட்டுமொத்த நிலையில் இலங்கை 66 - 52 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பூரண திருப்தி அடைந்தது.

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சிட்னி 2027 உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிக்கான ஆசிய தகுதிகாண் சுற்றாகவும் ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் அமைகின்றது.

இந்தப் போட்டியில் சம்பியனாகும் மற்றும் உப சம்பியனாகும் அணிகள் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் விளையாட தகுதிபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right