பிரதம நீதியரசருக்கு எதிராக அவதூறு ; BASL எதிர்ப்பு தெரிவிக்காதிருப்பது கவலையளிக்கிறது - செயற்குழு உறுப்பினர் ஜகத் அபேநாயக்க

10 Aug, 2026 | 07:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசரை தனிப்பட்ட ரீதியில் இலக்கு வைத்து மிகவும் கீழ்த்தரமான முறையில் அவதூறுகளை சுமத்தியுள்ளனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதனை முழு நீதித்துறைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் விடுக்கப்பட்ட கடுமையான அச்சுறுத்தலாகக் கருதி, அத்தகைய கூற்றுக்களுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கும். ஆனால், பதவியிலிருக்கும் பிரதம நீதியரசரை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்த இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என்ற ரீதியில் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காதிருப்பது கவலைக்குரியது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜகத் அபேநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரியவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனத்திற்காக பொதுவான முறையிலும் முன்வந்து உரிய முறையில் செயற்படுவது எமது சங்கத்தின் பாரம்பரியம் என்பதில் எவ்வித விவாதமும் இல்லை. இவ்வாறான பின்னணியில், அண்மைக்கால கருத்துக்கள் மூலம் தற்போதைய பிரதம நீதியரசருக்கும், அப்பதவிக்கும், நீதித்துறைக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜகத் அபேநாயக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பான கலந்துரையாடல்களின்போது, சில தரப்பினரால் தற்போதைய பிரதம நீதியரசரை தனிப்பட்ட ரீதியில் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும்  வெறுக்கத்தக்க கூற்றுக்கள் தொடர்பில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து நீதிபதிகளின் அதிகபட்ச ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைவாக, 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் முன்மொழியப்பட்ட நீதித்துறை அமைப்பு திருத்தச் சட்டமூலம் ஆகியன வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டமூலங்கள் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் இச்சட்டமூலங்களின் அரசியலமைப்பு இணக்கப்பாட்டை கேள்விக்குட்படுத்த விரும்பும் எந்தவொரு தரப்பினருக்கும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதையும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பின்னணியில், இத்திருத்தங்கள் பிரதம நீதியரசருக்கு வழங்கப்படும் ஒரு சேவை நீடிப்பு என எமது சங்கத்தின் சில உறுப்பினர்கள் உட்பட்ட பல்வேறு அரசியல்வாதிகள் கருத்துத் தெரிவித்து வருவதை கடந்த நாட்களில் அவதானிக்க முடிந்தது. இது பொதுமக்களையும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களையும் தவறாக வழிநடத்தும் ஒரு பிரசாரமாகும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக ஆதரவாகவும் எதிராகவும்  நடுநிலையானதாகவும் பல தரப்பினர் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், உங்களது தலைமையிலான சட்டத்தரணிகள் சங்கம் இத்திருத்தங்களுக்கு எதிராக பகிரங்கமாக ஒரு நிலைப்பாட்டை  அறிவித்துள்ளது. 

எப்படியிருப்பினும், நான் இதுவரை நம்பியதும், இனிமேலும் நம்புவதும்  முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தங்களுக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இருப்பது கொள்கை ரீதியான விமர்சனம் மட்டுமே தவிர, அது தற்போதைய பிரதம நீதியரசர் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் காட்டப்படும் எதிர்ப்பு அல்ல என்பதாகும்.

இருப்பினும், அண்மையில் பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசரை தனிப்பட்ட ரீதியில் இலக்கு வைத்து மிகவும் கீழ்த்தரமான முறையில் அவதூறுகளைச் சுமத்தியதை நான் அவதானித்தேன்.

வேறு எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது பதவியிலிருக்கும் ஒரு நீதிபதியை தனிப்பட்ட முறையில் இலக்குவைத்து இதுபோன்ற அவதூறுகள் சுமத்தப்பட்டிருந்தால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதனை முழு நீதித்துறைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் விடுக்கப்பட்ட கடுமையான அச்சுறுத்தலாகக் கருதி, அத்தகைய கூற்றுக்களுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கும் என்பது எனது கருத்தாகும்.

ஆனால், பதவியிலிருக்கும் பிரதம நீதியரசரை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்த இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என்ற ரீதியில் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காதிருப்பது, எனது நீண்டகால சட்டத்தரணி வாழ்க்கையில் நான் எதிர்பாராத ஒரு சூழ்நிலையாகும்.

சட்டத்தரணிகள் சங்கம் என்ற ரீதியில் எமது விளக்கிச்சொல்ல முடியாத இந்த அமைதியின்மை காரணமாக, சட்டத்தரணிகள் சங்கமும் அக்கருத்துக்களை அங்கீகரித்து அவற்றுக்கு வெளிப்படுத்தப்படாத உடன்பாட்டைத் தெரிவிக்கின்றதோ என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் உருவாவதைத் தடுக்க முடியாது.

எமது உறுப்பினர் சட்ட வல்லுநர்கள் போன்று நீதி பீடத்திலிருக்கும் நீதிபதிகளுக்கும் எமது சங்கத்தின் ஆதரவும் பாதுகாப்பும் பிரதிநிதித்துவமும் அவசியமான சந்தர்ப்பங்களில் தயக்கமின்றியும் நடுநிலையாகவும் வழங்குவது எமது பாரம்பரியம் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். 

மேலும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது எமது சங்கத்தின் முதன்மையான மற்றும் வெளிப்படையான நோக்கங்களில் ஒன்றாகும் என்பதோடு, அது நாம் மிகவும் உயரிய முறையில் பேணி வரும் ஒரு பாரம்பரியம் என்றும் கூற வேண்டும்.

குறிப்பாக, அவதூறான கூற்றுக்கள் மூலம் தனக்கு தனிப்பட்ட முறையிலும் பொதுவில் நீதித்துறைச் செயற்பாட்டுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்குப் பதிலளிப்பதற்கு ஒரு நீதிபதிக்கு இருக்கும் இயலாமை காரணமாக, அத்தகைய சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நீதிபதிக்காக சிறப்பான முறையிலும், நீதித்துறையின் சுயாதீனத்திற்காக பொதுவான முறையிலும் முன்வந்து உரிய முறையில் செயற்படுவது எமது சங்கத்தின் பாரம்பரியம் என்பதில் எவ்வித விவாதமும் இல்லை. இவ்வாறான பின்னணியில், அண்மைக்கால கருத்துக்கள் மூலம் தற்போதைய பிரதம நீதியரசருக்கும், அப்பதவிக்கும், நீதித்துறைக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக நீங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.

இச்சூழ்நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான உரையாடலிலும், அது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கும் விமர்சனங்களின் போதும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு சங்கமாக தொழிலும்சார் கண்ணியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதையும், என்னையும் சேர்த்து எமது சங்கத்தின் பல உறுப்பினர்களுக்குத் தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் இருக்கலாம் என்ற போதிலும், எமது தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது உணர்ச்சிகள் சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்தாக வெளிப்படுவதோ அல்லது சில விடயங்கள் தொடர்பாக சங்கமாக அமைதி காப்பதன் மூலம் ஒரு கருத்தைச் சமூகத்திற்கு மறைமுகமாக உணர்த்த இடமளிப்பதோ சங்கத்தின் கௌரவத்திற்கும் மதிப்பிற்கும் பெரும் பாதகமாக அமையும் என்பது எனது கருத்தாகும்.

எனவே, நடைபெறவிருக்கும் செயற்குழு கூட்டத்தில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என்ற ரீதியில் நான் முன்வைக்கும் இக்கருத்துக்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கித் தருமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10