எனது தந்தை ராஜீவ் காந்தியின் மரணத்துக்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை பார்த்த போது மகிழ்ச்சியடைவில்லை,வேதனைப் பட்டோம். எங்களுக்கு குற்ற உணர்வு ஏற்பட்டதென காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

வதோதராவில் நேற்று அவர் தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில் அவர் அங்கு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

“நான் உங்களுக்கு தனிப்பட்ட ஒரு விடயத்தை சொல்கிறேன். என்னுடைய தந்தையை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொன்றார்.

ஆனால் இலங்கை கடற்பகுதியில் அவர் கொல்லப்பட்டு கிடந்த காட்சியை பார்த்து எனக்கு துக்கமாக இருந்தது. நான் மிகவும் வேதனைப்பட்டேன்.

உடனடியாக பிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் அதையே என்னிடம் தெரிவித்தார்.

 என்னுடைய அப்பாவைக் கொன்றவர் இறந்து கிடக்கிறார் ஆனால் எங்களுக்கு துக்கமாக இருந்தது, எங்களுக்கு ஒரு குற்றஉணர்வு ஏற்பட்டது என்று கூட சொல்லாம்.

இவை என் குடும்பத்தின் மதிப்புகளாகும். ஒரு கொலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியும்”. என ராகுல் காந்தி தெரிவித்தார்.