(க.சிவலிங்கமூர்த்தி)
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு ஆதரவாகவும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவும் அன்று எம்முடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராடிய அநுர குமார திசாநாயக்க இன்று காணாமல் போய்விட்டார். தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அவர் தம்மால் பாதுகாக்கப்பட்ட நீதித்துறையின் சுயாதீனத்தைச் சிதைக்க முற்படுகின்றார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டினார்.
கொழும்பில் சனிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இயற்கை விதிகளுக்கு அமைவாக மனிதனின் வயதையோ அல்லது ஆயுட்காலத்தையோ எவராலும் நீடிக்க முடியாது. அது இயற்கையின் நியதியாகும். ஆனால், இங்கு உயர் நீதிமன்ற மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அல்லது பதவிக் காலத்தை நீடிப்பது குறித்தே அரசாங்கம் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றது. நாட்டின் நீதிமன்றங்களில் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகக் கூறி, அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தைக் கொண்டுவர அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.
நிலுவையில் உள்ள பெருமளவிலான வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இருக்குமாயின், உயர் நீதிமன்றங்களில் தற்போது வெற்றிடமாக உள்ள சுமார் 8 நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை நிலவரம் அவ்வாறிருக்க, அந்த வெற்றிடங்களை நிரப்பாமல் தமக்கு விருப்பமான நீதிபதிகளின் பதவிக் காலத்தை மட்டும் நீடிக்க முனைவது அரசாங்கத்தின் உண்மையான நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.
நாட்டிலுள்ள வழக்குகள் அதிகளவில் தேங்கிக் கிடப்பது மேல் நீதிமன்றங்களில் அன்றி நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயாகும். கீழ் நீதிமன்றங்களில் கடமையாற்றும் நீதிபதிகள் கூட அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்துத் தமது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை, போதுமான ஊழியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் இல்லாமை, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் கால தாமதமாக வருகை தருதல், போதிய கட்டட மற்றும் ஆசன வசதிகள் இல்லாமையே வழக்குத் தாமதத்துக்கு முதன்மையான காரணங்களாகும். இந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமல், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க முயல்வது மக்களை ஏமாற்றும் வெறும் நாடகமாகும்.
கடந்த காலத்தில் நீதித்துறையின் சுயாதீனத்துக்காகத் தோளோடு தோள் நின்று போராடிய அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, இன்று நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்துகொண்டு அதே நீதித்துறையின் சுயாதீனத்துக்குப் பாதகமான தீர்மானங்களை எடுப்பது மிகவும் வேதனைக்குரியது. அன்று நீதிக்காகக் குரல் கொடுத்த அநுர குமார திசாநாயக்க என்ற அரசியல்வாதி இன்று முற்றிலும் காணாமல் போய்விட்டார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் மீது மக்களுக்குப் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. தமக்குச் சாதகமான நீதிபதிகளை உயர் பதவிகளில் தொடர்ந்தும் அமர்த்தி, தமது அரசியல் சுயநலன்களையும் மறைமுக நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ளவே அரசாங்கம் முற்படுகின்றது என மக்கள் பகிரங்கமாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
நாட்டின் உச்சக் கட்ட அமைப்பான மகாநாயக்க தேரர்கள் கூட இந்தத் திட்டத்துக்குத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதுடன், இதனை உடனடியாகக் கைவிடுமாறு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதேபோன்று, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிபதிகள் அமைப்பும் இதற்குத் தமது பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இது வெறும் அரசியல் எதிர்க்கட்சிகள் மட்டும் செய்யும் போராட்டமோ அல்லது விமர்சனமோ அல்ல. நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க விரும்பும் அனைத்துத் தரப்பினரின் குரலாகும். அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், கொழும்பு மாநகர சபை தொடர்பான சில சட்டச் சிக்கல்கள் நிலவுவதாலுமே அரசாங்கம் இவ்வாறான குறுக்கு வழிகளைத் தேடி வருகின்றது. எனவே, நாட்டின் நன்மதிப்புக்கு மேலும் களங்கம் ஏற்படுத்தாமல், மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ள இந்த அரசியலமைப்புத் திருத்த யோசனையை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM