காலநிலை மாற்றத்தால் சவாலுக்குட்பட்டுள்ள உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்திற்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் அமுல்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்திப் புரட்சி வாரத்தின் அரசாங்க ஊழியர் தினம் இன்று இடம்பெறுகிறது.

இது தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு கொழும்பு ஜனாதிபதி மாவத்தையிலுள்ள செமா கட்டிடத்தில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் தலைமையில் இடம்பெற்றது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் த சில்வா, பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஏ ஜே ரத்ணசிறி, மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சுஜான் நாணயக்கார ஆகியோரினால் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசாங்க ஊழியர் தினத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சு மற்றும் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களும் இணைந்து இன்றையதினம் சப்ரகமுவ மாகாணத்தை மையப்படுத்தியவகையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அந்தவகையில் அரசாங்க ஊழியர்கள் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம் சப்ரகமுவ மாகாணசபை கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்காக அரசாங்க ஊழியர்களை நேரடியாகப் பங்குபற்றச் செய்தல், இச்செயற்பாட்டுக்கு பொதுமக்களின் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட அரசாங்க ஊழியர் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து அரசாங்க ஊழியர்களினாலும் ஆயிரம் மரக்கன்றுகளை நடுதல், அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை ஆரம்பித்தல், போதுமான காணிகள் உள்ள அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களில் வீட்டுத்தோட்டங்களை ஆரம்பித்தல், அரசாங்க அலுவலர்கள் வீட்டுத்தோட்டங்களை ஆரம்பித்தல் போன்ற இலக்குகளை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிறந்த உணவுப் பழக்கங்கள் தொடர்பாக அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய உணவுகளைப் பயன்படுத்துதல், உணவு விரயமாவதைக் குறைத்தல், நச்சுத்தன்மையற்ற உணவுப்பொருட்களைப் பயன்படுத்துதல், போசனை உணவு வேளையொன்றை ஏற்படுத்தல் போன்றவை குறித்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது.