மாணவியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தந்தை, பாட்டன் மற்றும் மைத்துனர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவியின் பாட்டியார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட மாணவி 15 வயதுடைய ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மாணவியின் தாயார் வெளிநாடு சென்றுள்ளமையால், அவரது மூத்த சகோதரியுடன் மாளிகாவத்தையிலுள்ள பாட்டனார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வீட்டில் பாதிக்கப்பட்ட மாணவி, பல முறை பாட்டனார் மற்றும் மைத்துனரினால் பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாணவி, தனது தந்தையினாலும் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே மாணவியின் பாட்டியார் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் ஆகியோரை நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.