அன்னலட்சுமி இராஜதுரை
2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதியாகிய இன்றைய தினம், இலங்கையின் முன்னணித் தமிழ்த் தினசரியான வீரகேசரி, தமிழ்ப் பேசும் மக்களது உரிமைக்குரலாக, இதயக்குரலாக, வழிகாட்டியாக, தோழனாக விளங்குகின்ற தனது மேலான சேவைப் பயணத்தில், 97ஆவது அகவையில் காலடி வைக்கும் அதேவேளை, தனது சிறப்பான பயணத்தை மேலும் தொடர, இப்பொன்னாளை மகிழ்வுடன் கொண்டாடுகின்றது என்பது, தமிழ்ப் பேசும் மக்கள் அனைவருக்கும் மனப்பூரிப்பு தரும் ஒன்றாகும். இதில் புலம்பெயர்ந்து உலகெங்கனும் வாழ்ந்திருக்கும் எம்மவர்களும் அடங்குவர்.
96 வருடங்கள் என்னும் நீண்ட பயணத்தினை கடந்து வந்த வீரகேசரி, அதன் பெயருக்கேற்ப, வீறுநடை போட்டு, வெற்றிகளைக் கண்ட அதேவேளை, சந்தித்த சோதனைகளும், சவால்களுங்கூட, கொஞ்ச நஞ்சமல்ல என்பதனையும் இவ்விடத்தில் நினைவில் கொள்ளுதல் பொருத்தமான ஒன்றேயாகும்.
குறிப்பாக, 1980களுக்குப் பின், சுமார் 30 வருடகாலம் நீடித்த ஈழப்போர், சுனாமி உட்பட இயற்கை அனர்த்தம் ஆகியவற்றின் தாக்கங்களை, மக்கள்தம் ஆதரவுடன், வெற்றிகரமாகச் சமாளித்து நின்ற வீரகேசரி, 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின், எதிர்பாராத, சமூக, பொருளாதார, அரசியல் சவால்களுக்கும், துணிகரமாக முகங்கொடுத்து நின்ற பாங்கும் கருத்திற்கொள்ளத்தக்கது.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் நாட்டில் உட்புகுந்த கொவிட் 19 தொற்றுநோயின், கொடூர தாக்கத்தினை, அதற்குள் நாம் எளிதில் மறந்துவிடமுடியாது. இப்பயங்கர தொற்று நோய்க்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானதும் பாதுகாப்பு நடவடிக்கையாக நாட்டுமுடக்கம், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், தொழில் முடக்கம் என்பன ஏற்படுத்தப்பட்டதையடுத்து, சாதாரண பொதுமக்கள், வாழ்க்கையைச் சீராக நடத்த முடியாமல் அவதியுற்றதும், இத்தகையதோர் அவல நிலை சில காலம் அவ்விதமே தொடர்ந்து மக்களை வாட்டியதும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி, உணவுப் பற்றாக்குறையால், பெரும் பட்டினி நிலையைத் தோற்றுவித்ததும் மறக்கக்கூடியதல்ல.
இத்தகையதோர் கவலைக்குரியதாக விளங்கிய ஒரு சூழ்நிலையின் பின்னணியில் அச்சுக்குரிய கடதாசிப் பற்றாக்குறை மற்றும் கடுமையான பிரயாணக் கஷ்டங்களோடும், வீரகேசரி, அன்று, தனது வழமையான சேவைகளை வழங்கமுடியாது எதிர்நோக்கிய கஷ்டங்கள் மிகப் பல. எனினும், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும், வீரகேசரி, தான் முன்னர் பெற்றிருந்த அனுபவங்களைக் கொண்டு, தன்னால் முடிந்த வரை முயற்சிகளை மேற்கொண்டு, முன்னேற்றப் பாதையில் மீண்டும் அடி எடுத்து வைத்ததை நினைவில் கொள்ளலாம்.
அந்த வகையில் வீரகேசரி தினப் பதிப்பு, ஞாயிறு பதிப்பு, விடிவெள்ளி ஆகியன மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிவருகின்ற அதேவேளை, மித்திரன் வாரமலர் மின்னியல் இதழாக (E- Paper) வாசகர்களைச் சென்றடைந்து வருகின்றது. மேலும், வீரகேசரி சர்வதேசப் பதிப்பும் மின்னியல் இதழாக வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட நிலைமைகள் காரணமாக, சுகவாழ்வு, கலைக்கேசரி, சோதிடகேசரி ஆகிய சஞ்சிகைகளை தொடர்ந்தும் வெளியிட முடியாமல் நிறுத்தப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே.
மேலும், இவ்விடத்தில் வீரகேசரியின் ஆரம்பம் குறித்தும், இந்த ஒன்பது தசாப்த காலத்தில், அதன் வரலாறு மற்றும் வளர்ச்சி, தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்க்கைப் பாதையில் நண்பனாய், வழிகாட்டியாய் ஒன்றிணைந்துவிட்ட பாங்கு ஆகியன குறித்தும் சிறிது நோக்குவது பொருத்தமானதே.
இற்றைக்கு 95 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில், கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செல்வந்தரான பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியார் மனதில், கொழும்பில் ஒரு தமிழ்ப்பத்திரிகை ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் ஆழ வேரூன்றிப்படர ஆரம்பித்தது. அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, 1927ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியடிகள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயமாகும். அவர் நாட்டின் பல பகுதிகளில் நடந்த கூட்டங்களில் உரையாற்றிச் சென்றார். ஆனால், அவரது உரைகள் பத்திரிகைகளில், இடம்பெறாத நிலையில், பெரிதும் வருத்தமுற்ற பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியார், ஒரு தமிழ்ப்பத்திரிகையின் அவசியத்தைப் பெரிதும் உணரலானார். மேலும், தமிழ்நாட்டில் இருந்து கூட்டிவரப்பட்டு, தோட்டங்களில் தொழிலாளிகளாக அமர்த்தப்பட்ட மக்களின் உரிமையற்ற அவல வாழ்வினை வெளிப்படுத்துவதும் அவசியம் எனவும் உணர்ந்தார். இத்தகைய நோக்கங்களின் பயனாக, வீரகேசரி பத்திரிகை 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி தோற்றம் பெற்றது.
இவ்வகையில், வீரகேசரிப் பத்திரிகையின் முதலாவது இதழில், செட்டியார் வரைந்த தலையங்கம் மிக முக்கியமானது.
“தன்னால் இயன்ற அளவு பொதுமக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற அவாவினால் தூண்டப்பட்டே வீரகேசரி தோன்றுகின்றான். அசாத்தியமான காரியங்களைச் செய்து முடிக்கும் திறன் படைத்தவன் என்று வீறு பேசத் தயாரில்லை. நியாய வரம்பை மீறாமல், நடுநிலையில் இருந்து, உலகத்தின் முன்னேற்றத்துக்கான இயக்கங்களையும் பிரச்சினைகளையும், பரிவுடன் ஆராய்ந்து, பொதுமக்கள் கருத்தை, நல்ல முறையில் உருவாக்கவேண்டும் என்பதையே வீரகேசரி, தன் முதல் கடனாகக் கொள்கிறான்.
தாராள சிந்தையும் பரந்த நோக்கும் சமரச உணர்வும் பெற்ற வீரகேசரி, சாதி, சமயச் சண்டைகளில் கலந்துகொள்ள மாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம். அவனது கருத்துக்கள் நியாயத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பொறுப்பை தாங்கிக்கொண்டு, உயர்ந்த நோக்குடன் வெளிவரும் வீரகேசரி, தமிழ் மக்களின் அன்பையும், ஆதரவையும் நாடுகிறான்” என்றவாறாக அவர் எழுதிய தலையங்கம் அதன் துணிவான பயணத்தைப் பணிவாக முன்வைப்பதை இங்கு நோக்கலாம்.
அன்று, செட்டியார் தெரிவித்த மேலான கருத்துகள் இற்றைவரை முற்றுமுழுதாக விசுவாசத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சிறப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
செட்டியார் பத்திரிகையின் உரிமையாளராக விளங்கிய அதேவேளை, சிறிது காலம் அதன் ஆசிரியராகவும் செயற்பட்டார். பின் எச். நெல்லையா என்ற அறிஞரை நியமித்தார். 1930களில் மிகச் சிறிய அளவில் தனது பிரசாரக் கடமைகளை மேற்கொண்ட இத்தாபனம், பின்னர் சிறிதுகாலம், கொட்டாஞ்சேனை புதுச்செட்டித் தெருவில் இயங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பின், கொழும்பு, கிராண்ட்பாஸ் வீதி, 185ஆம் இலக்கத்தில் அமைந்த கட்டடத்தில் சிறப்பாக இயங்கி வருகின்றமை யாவரும் அறிந்ததே. அதேவேளை இப்பத்திரிகை 2019இல் இருந்து, மிகக் குறுகியதோர் காலம் ஏக்கலை, ரஜ மாவத்தை, 267ஆம் இலக்கத்தில் அமைந்த தனது கட்டடத்தில் தனது பணிகளை நடத்தி, சில தவிர்க்க முடியாத காரணங்களினால் மீண்டும் கிராண்ட்பாஸில் உள்ள பணிமனைக்கு ஆசிரிய பீடப் பணிகள் உட்பட நிர்வாகம் சம்பந்தப்பட்ட பணிகளுக்காக திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.
கோல்புறூக் ஆணைக்குழு செயற்பட்ட காலத்தில் இருந்து கடமையாற்றத் தொடங்கிய வீரகேசரி, தமிழ்ப் பேசும் மக்களது அரசியல் உரிமைகளுக்காக, அவர் தம் சுதந்திரக்குரலாக ஒலித்து, வழிகாட்டி, பக்கபலமாக விளங்கியது. அவ்விதமே 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், 4ஆம் திகதி, ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, எந்தவொரு சவாலுக்கும் அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுத்து, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும், சமூக, பொருளாதார, கல்வி, கலாசார, அபிவிருத்திக்காகவும் அயராது குரல் கொடுத்தும், வழி நடத்தியும் ஆலோசனை வழங்கியும் பெரும்பணி புரிந்து, தமிழ்ப் பேசும் மக்களின் அரிய நண்பனாகவும், தொண்டனாகவும், அவர்தம் மனங்களை வென்று நிலைப்பது வரலாறாகும்.
இவ்வகையில் மலையக மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு வீரகேசரி காட்டிவரும் ஆதரவும் வழிநடத்தலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு தேசியப் பத்திரிகையினதும் பிரதம ஆசிரியருடைய பணி மகத்தானது என்பதனை யாவரும் அறிவர். ஆசிரியரின் மேதாவிலாசம் பத்திரிகையைத் தூக்கி நிறுத்தும். இதனை பரிச்சயமான வாசகன் புரிந்துகொள்வான்.
இந்த வகையில் வீரகேசரியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் பணியாற்றிய ஆசிரியர்கள் பற்றியும் குறிப்பிடுதல் அவசியமானதே.
எச்.நெல்லையா, வ.ரா (தமிழகத்தின் பிரபல இலக்கியவாதி வ.ராமசாமி), கே.பி.ஹரன், கே.வி.எஸ்.வாஸ், எஸ்.டி. சிவநாயகம், கே.சிவப்பிரகாசம், ஆ.சிவனேசச்செல்வன், எஸ்.நடராஜா ஆகியோர் திறம்படப் பணிபுரிந்து பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினர்.
அத்துடன், பத்திரிகையில் வாசகர்களின் ஈடுபாட்டினை மேலும் அதிகரிக்கச் செய்யும் நோக்கில், எச்.நெல்லையா, கே.வி.எஸ்.வாஸ் (ரஜனி) ஆகியோர் தினமும் பத்திரிகையில் வெளிவரும் வகையில் தொடர்கதைகளை எழுதியதும் அவற்றினை வாசகர்கள் விரும்பி வாசித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் ஹரனின் “ஊர்க்குருவி” என்னும் பத்தி எழுத்தும் பிரபலமானது.
“ரஜனி”யின் நந்தினி, பத்மினி, தாரிணி, “குந்தளப் பிரேமா” ஆகிய தொடர்கதைகள் பின்னர் நூல்களாக வெளிவந்ததும் தெரிந்ததே.
இந்த வரலாற்று நீட்சியில் சில வருட காலங்களுக்கு முன், வீரகேசரியின் பிரதம ஆசிரியராகப் பணிபுரிந்த இ.பிரபாகன், பின்னர் சிறிது காலம் வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியராகவும் பணிபுரிந்த பின், தற்போது வீரகேசரி சர்வதேசப் பதிப்பின் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் நாளிதழின் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், தாம் எழுதிய சிறப்பான தலையங்கங்களைத் தொகுத்து, “தரிசனம்” என்னும் தலைப்பில் அறிஞர்களின் மதிப்புரைகளோடு, வீரகேசரி பிரசுரமாக, நூலாக வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது வீரகேசரி தினசரி மற்றும் வார இதழின் பிரதம ஆசிரியராக, எஸ்.ஸ்ரீகஜன் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார்.
அதேவேளை 1950களில் வீரகேசரி ஞாயிறு பதிப்பின் ஆசிரியராக விளங்கிய எஸ்.லோகநாதன் “லோகு” என்னும் பெயரில், தொடர்கதைகளை எழுதியதையும் குறிப்பிடவேண்டும்.
1960களில் இருந்து 1980கள் வரை ஆசிரியர் குழாமில் சிறப்பாகப் பணிபுரிந்த டேவிட் ராஜூ (செய்தி ஆசிரியர்), கார்மேகம் (பிரதம உதவி ஆசிரியர்), பொன். இராஜகோபால் (ஆசிரியர் ,வீரகேசரி வார வெளியீடு) பி.தியாகராஜா (அரசியல் நிருபர்), எஸ்.தில்லைநாதன் (பாராளுமன்ற நிருபர்) எஸ்.விஸ்வரட்ணம், எஸ்.எட்வேர்ட், கே. நித்தியானந்தன் (மித்திரன் –பொறுப்பாசிரியர்) ஆகியோரையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
ஒரு தேசியப் பத்திரிகை எதிர்நோக்கக்கூடிய சவால் என்ற வகையில், நிர்வாக அதிபராக பி.கேசவன் பணிபுரிந்த வேளையில், (1960களின் முற்பகுதி) ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியதில், பத்திரிகை சில மாதங்கள் வெளிவராமல் போனதும் பின்னர் 1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சிக்காலம், 1983ஆம் ஆண்டு இனக்கலவர காலம், மற்றும் 1990களில் இருந்து ஆரம்பித்த போர்ச்சூழல் ஆகியவற்றின் விளைவாகவும், பத்திரிகை சில சவால்களுக்கு முகம் கொடுத்து மீண்டது என்பதனையும் மறக்கமுடியாது.
டி.பி.கேசவனை அடுத்து நிர்வாக மாற்றத்தையடுத்து, ஹரோல்ட் பீரிஸ், ஆர்.ஏ.நடேசன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.வென்சஸ்லாஸ் ஆகியோர் நிர்வாக பணிப்பாளர்களாக பத்திரிகை வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது, பத்திரிகைத்துறை நிபுணரும் பாரிஸ்டரும், இலங்கை பத்திரிகையாளர் சங்கத் தலைவருமான குமார் நடேசன் மிகச் சிறப்பாகச் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி காலத்துக்குக்காலம் மேற்கொண்ட புதிய இதழியல் பரிசோதனை முயற்சிகளும் பலவாறாக இருந்துள்ளதையும் ஈண்டுக் குறிப்பிடலாம்.
இப்பரிசோதனை முயற்சியின் தொடக்கப் புள்ளியாய் 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “ஜோதி” என்னும் குடும்ப வார இதழ் அமைகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பு, பத்திரிகையாளரான எம்மிடம் (இக்கட்டுரையாளர்) கையளிக்கப்பட்டது. இப்பத்திரிகை சுமார் இரண்டரை வருடகாலம் வெளிவந்து, எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்தது.
அதே ஆண்டில்தான் “மித்திரன்” என்னும் மாலைத் தினசரியும் வெளியானது. அரசியல், திகில், மர்மம் போன்ற செய்திகளை முக்கியமாகக் கொண்டு வெளிவந்த இம்மாலைத் தினசரி, அவ்வேளை பெரும் வரவேற்பினை இளையோரான வாசகர்களிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு, பத்திரிகையாளரான ஜி.நேசன் தொடர்ந்து எழுதிவந்த திகில் தொடர்கதைகளும், வாசகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்ததையும் மறக்கமுடியாது. ஆயினும் இப்பத்திரிகை 1983ஆம் ஆண்டுக்குப் பின் சில காரணங்களினால் நின்றுபோனது.
மித்திரன் மாலைத்தினசரி ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில ஆண்டுகளுக்குப் பின், மித்திரன் வாரமலர் என்னும் பத்திரிகை வெளியானது. எஸ். தியாகராஜா இப்பத்திரிகையைச் சில காலம் நடத்தியதைத் தொடர்ந்து, 1973ஆம் ஆண்டு, அதனை நடத்தும் பொறுப்பு எம்மிடம் தரப்பட்டது. நாவல்கள், சிறுகதைகள், இலக்கிய விடயங்கள், நேர்முகங்கள் எனப் பல அம்சங்களோடு இப்பத்திரிகை வெளிவந்தமை வாசகர்கள் அறிந்ததே. 1984ஆம் ஆண்டு வரை இதனை நாம் பொறுப்பேற்று நடத்தினோம். தற்போது மித்திரன் வாரமலர் ஒரு பெண்கள் பத்திரிகையாக, ஓர் மின்னியல் இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
வீரகேசரியின் படிப்படியான வளர்ச்சிக்கும், அது தமிழ்ப் பேசும் மக்களிடையே முக்கியமானதோர் இடத்தைப் பிடிக்கவும், ஆதாரசுருதியாக விளங்கிய ஆசிரியர் குழாத்தின் தளராத, அதிசிறப்பான பணிகளையும் மறந்துவிட முடியாது. அத்துடன் இவ்விடத்தில் மேலும் ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிடவேண்டும். அதாவது, 1950களின் இறுதிப் பகுதி வரை வீரகேசரியில் பெண் ஊழியர்களின் பணி குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருக்கவில்லை என்றே கூறலாம். ஆயின் 1960ஆம் ஆண்டுத் தசாப்தத்தில், இந்நிலை மாறி பெண்கள் ஆசிரியபீடத்துக்கும் மற்றும் பகுதிகளுக்கும் படிப்படியாகச் சேர்க்கப்பட்டு, அவர்களின் பங்களிப்பு வரவேற்கப்பட்ட நிலையில், தற்போது கணிசமான அளவில் பெண்கள் பணியாற்றுவதும் தெரிந்த ஒன்றே.
மாதம் ஒரு நாவல் வெளியீடு
மேலும் கூறுவதானால், நம் நாட்டு எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் முகமாகவும், இந்நாட்டு வாசகர்களின் வாசிப்பு ரசனைக்குத் தீனிபோடும் முகமாகவும் வீரகேசரி 1970களில் நடத்திய மாதம் ஒரு நாவல் வெளியீடு மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதையும் மறக்கமுடியாது.
எம்.ஜி.வென்சஸ்லாஸ் நிர்வாகப் பணிப்பாளராகப் பணிபுரிந்த அக்காலகட்டத்தில் அன்று நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்த எஸ்.பாலச்சந்திரன் அன்றைய காலகட்ட ஆசிரியர்களான கே.வி.எஸ்.வாஸ் மற்றும் கே.சிவப்பிரகாசம், விளம்பர முகாமையாளர் ரி.சிவப்பிரகாசம் ஆகியோரின் அனுசரணையோடு, பதிப்பாளராக நின்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை வெளியிட்டார். இது ஈழத்து பத்திரிகை உலகில் ஒரு தனித்துவ இலக்கியச் செயற்பாடாக விளங்கியது என்றே கூறலாம்.
1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் பின் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியான அரசியல் சூழல்கள் குறிப்பிடத்தக்கன. தமிழ்மக்களைப் பொறுத்தவரை இடப்பெயர்வு, புலப்பெயர்வு, நெருக்கடியான வாழ்க்கை நிலை என்பன அவர்தம் வாழ்க்கைப் போக்கினைப் பிரதிபலித்து நின்ற வீரகேசரியையும், ஸ்தாபனப் பத்திரிகைகளையும் ஓரளவு பாதித்தன என்றே கூறலாம்.
ஊழியர்களின் இடைவிலகல்கள், புலப்பெயர்வுகள், அதிலும் குறிப்பிடக்கூடிய போரின் விளைவாக ஏராளமான தமிழ் மக்களின் முகாம் வாழ்க்கை நிலைமை போன்றவையும் மறக்கக்கூடியதல்ல. எனினும், வீரகேசரி ஸ்தாபனத்தின் தளராத பொதுப்பணிக்கு, 1990களில் அறிமுகமாகி எம்மிடையே நடைமுறைக்கு வந்த எண்ணும தொழில்நுட்பம் (Digital Technology) ஒரு புதிய உத்வேகத்தைத் தந்ததை மறக்கமுடியாது. இப்புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட இளையோர் பலர் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டியவர்களாயினர். இதனால் கையால் அச்சுக் கோர்க்கும் பணியினை மேற்கொண்டு வந்த பல பழைய ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படும் ஒரு சூழ்நிலை தோன்றியதும் ஒரு வரலாறாகும்.
இந்நிலையில் புதிய நூற்றாண்டுப் புலர்வுடன் (2000ஆம் ஆண்டு ஆரம்பம்) எண்ணும தொழில்நுட்பத்தின் வாய்ப்பினால், பல புதிய பத்திரிகைகளைப் பிரசுரிக்கும் நிலைமை தோன்றியது. இதற்கு அப்போது நிர்வாகப் பணிப்பாளராக இருந்த வென்சஸ்லாஸை அடுத்து நிர்வாக பணிப்பாளராக பதவி ஏற்ற குமார் நடேசன் பெரும் ஊக்கம் அளிப்பவராக இருந்தார். இவற்றிற்கெல்லாம் மிகப் பெரிய விளம்பர அனுசரணைகள் பெரும் ஆதரவாக இருந்தன என்பதனையும் கருத்தில் கொள்ளலாம்.
Weekend Express, விடிவெள்ளி, Metro News, ஜோதிட கேசரி, சுகவாழ்வு, கலைக்கேசரி, சூரியகாந்தி எனப் பல்வேறு துறைப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளிவந்து, மக்களின் வாசிப்பு இரசனையையும் தகவல் அறியும் ஆர்வத்தினையும், அறிவுத் தேடலையும் மேம்படச் செய்தன. (மேற்குறிப்பிட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகளில் ஒருசில தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன என்ற விடயம் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.)
மேலும், அச்சு ஊடகத்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பெரும் சவால் தோன்றியிருப்பதும் நாமறிந்ததே. இத்தாபனமும் இந்நிலையை கருத்தில்கொண்டு, இணையத் தொடர்புகளை விஸ்தரித்துள்ளதோடு, காணொளிகளைப் பதிவேற்றி நவீன ஊடகங்களையும் செயற்படுத்தி வருவதையும் வாசகர்கள் அறிவர். இவ்விதமே ஏனைய பத்திரிகைகளும் இணையத் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக விளங்குகின்றன. எவ்வித வேறுபாடுகளுமின்றி, கடந்த 95 வருடங்களாக சேவை புரிந்து, தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் வீரகேசரி, நூற்றாண்டைக் கொண்டாடவும் அவர்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை என்னும் மூலதனத்தைக் கொண்டு எதிர்வரும் காலங்களிலும் செயற்பட்டு, பெருமை பெற்றுத் திகழவும் மனப்பூர்வமாக வாழ்த்துவோம்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM