நடிகர் ரஜினிகாந்த் உட்பட மூன்று பேர் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இணை இயக்குனர் முன்பு ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான தி ஆஸ்ரம் மெட்ரிகுலேசன் பள்ளி நிலம் கு‌றித்து வெங்கடேசவரலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, வெளியான உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வெங்கடேசவரலு புகார் தொடர்பாக, நேரில் வந்து விளக்கம் தருமாறு நடிகர் ரஜினிகாந்த், லதா ர‌ஜினிகாந்த், மற்றும் அந்தப்பள்ளியின் முதல்வர் வந்த‌னா ஆகியோருக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தியிருந்தது.‌

ஆனால், அதற்கு தடைகோரி பள்ளியின் முதல்வர் வந்தனா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நிதிமன்ற நீதிபதி எம்.எம். ‌சுந்தரேஷ், நேரில் ஆஜராகி வி‌ளக்கம் அளிப்பதற்கு எந்த தடையும் விதிக்கமுடியாது என தீர்ப்பளித்தார்.