இலங்கையின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகையான ‘வீரகேசரி’ தனது மேலான சேவைப் பயணத்தில் 96ஆவது அகவையை இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) கண்டு, சாதனை படைத்திருக்கிறது. தமிழ்ப் பேசும் மக்களின் உணர்வுகளுக்கான, உரிமைகளுக்கான குரலாக விளங்கும் வீரகேசரியின் இந்த வரலாற்றுப் பயணக் கொண்டாட்டம், தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் அனைத்துத் தமிழ் மக்களுக்குமே பெரும் மகிழ்வைத் தருகிறது.
இந்த நீண்ட நெடிய பயணத்தில் வீரகேசரி கண்ட வெற்றிகளும், சந்தித்த சவால்களும் சாதாரணமானவை அல்ல.
1927ஆம் ஆண்டு இந்திய நாட்டின் “தேசப்பிதா” என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் இலங்கைக்கு விஜயம் செய்து ஆற்றிய உரைகள் பத்திரிகைகளில் சரியாக இடம்பெறாததையும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்வை வெளிப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் சிந்தித்த, கொழும்பில் வர்த்தகம் செய்துவந்த பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், தமிழ் மக்களுக்காக ஒரு தமிழ்ப் பத்திரிகை இல்லாததையிட்டு பெரும் வேதனையடைந்தார்.
வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் பல இடங்களிலும் பரந்து வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் அறிவுத் தேடலுக்கான ஊடகமாக ஒரு பத்திரிகை இல்லாதது, பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியார் அவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த, அதன் விளைவாக உருவானதே “வீரகேசரி”.
1930 ஆகஸ்ட் 6ஆம் திகதி தோற்றம் பெற்ற வீரகேசரியில், அதன் ஆசிரியராகவும் பத்திரிகை நிறுவனத்தின் ஸ்தாபகராகவும் செயற்பட்ட பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியார், முதலாவது ஆசிரியத் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்:
“தன்னால் இயன்ற அளவு பொது ஜனங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற அவாவினால் தூண்டப்பட்டே வீரகேசரி தோன்றுகிறான். அசாதாரண காரியங்களைச் செய்து முடிக்கும் திறன் பெற்றவனென அவன் வீறு பேசுத் தயாராயில்லை. நியாய வரம்பை எட்டுணையும் மீறாமல், நடுநிலைமையிலிருந்து, உலகத்தின் முன்னேற்றத்திற்கான இயக்கங்களையும் பிரச்சினைகளையும் பரிவுடன் ஆராய்ந்து, பொதுஜன அபிப்பிராயத்தை நல்ல முறையில் உருவகப்படுத்த வேண்டியதையே வீரகேசரி தன்னுடைய முதற்கடனாகக் கொண்டுள்ளான். இராஜீய, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை வீரகேசரி அவ்வப்போது ஆராய்வதிலிருந்து இவ்வுண்மையை நண்பர்கள் அறிந்துகொள்ளட்டும்.
தாராள சிந்தனையும், பரந்த நோக்கும், சமரஸ உணர்ச்சியும் பெற்ற வீரகேசரி, சமயச் சண்டைகளில், சாதிச் சமர்களில், வீண்கிளர்ச்சிகளில், கலந்துகொள்ள மாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம், அவனது அபிப்பிராயங்கள் நீதியையே அடிப்படையாகப் பெற்றிருக்கும். பொதுஜனங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் தளராத ஊக்கமும், சலியாத உழைப்பும் அசைக்க முடியாத உறுதியும் காட்டி நமது கேசரி திகழ்வான்........................................................
மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக்கொண்டு, உயர்ந்த நோக்கங்களுடன் வெளிவரும் வீரகேசரி, தமிழ் மக்களின் ஆதரவையும், அன்பையும் நாடுகிறான்.”
அன்று அவர் விதைத்த அந்த நடுநிலைமைச் சிந்தனை, இன்றளவும் வீரகேசரியால் விசுவாசத்துடன் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் கொட்டாஞ்சேனை புதுச்செட்டித் தெருவில் இயங்கிய இப்பத்திரிகைத் தாபனம், பின்னர் கொழும்பு, கிராண்ட்பாஸ் வீதி 185ஆம் இலக்கத்துக்கு மாறியது. இடையில் குறுகிய காலம் ஏக்கலைக்கு மாற்றப்பட்டபோதிலும், மீண்டும் கிராண்ட்பாஸ் தலைமை அலுவலகத்துக்கே திரும்பியது.
கோல்புறூக் ஆணைக்குழு காலம் முதற்கொண்டு, 1948 ஆங்கிலேயர் ஆட்சியின் விடுதலைக்குப் பின்னரும் தமிழ்ப் பேசும் மக்கள் மற்றும் மலையக மக்களின் ஜனநாயக, சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இப்பத்திரிகை தாபனத்தின் நிர்வாக அதிகாரிகளாக பி.கேசவன், ஹரோல்ட் பீரிஸ், ஆர்.ஏ. நடேசன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி. வென்சஸ்லாஸ் ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது பாரிஸ்டரும் இலங்கை பத்திரிகையாளர் சங்கத் தலைவருமான குமார் நடேசன் நிர்வாகப் பணிப்பாளராகச் சீரிய முறையில் வழிநடத்தி வருகின்றார்.
இவ்விதழின் முன்னாள் பிரதம ஆசிரியர்களான ஹெச். நெல்லையா, வ.ரா (தமிழக எழுத்தாளர் வ.ராமசாமி), கே.பி. ஹரன், கே.வி.எஸ். வாஸ் (ரஜனி), எஸ்.டி. சிவநாயகம், கே.சிவப்பிரகாசம், ஆ.சிவனேசச்செல்வன், எஸ்.நடராஜா ஆகியோர் வீரகேசரியை செதுக்கிய முதன்மைச் சிற்பிகளாவர்.
இந்த வரலாற்றுப் பயணத்தில் சில வருட காலங்களுக்கு முன், வீரகேசரியின் ஆசிரியராகப் பணிபுரிந்த இ.பிரபாகன், பின்னர் சிறிது காலம் வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியராகவும் சேவையாற்றி, பின், தற்போது மின்னிதழாக வெளிவரும் வீரகேசரி சர்வதேசப் பதிப்பின் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.
தற்போது வீரகேசரி நாளிதழ் மற்றும் வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியராக எஸ்.ஸ்ரீகஜன் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1980களுக்குப் பின் சுமார் 30 வருட காலம் நீடித்த கொடூரப் போர்ச்சூழல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது, எதிர்கொண்ட இடையூறுகளை, தமிழ் பேசும் மக்களின் பேராதரவோடு வீரகேசரி வெற்றிகரமாக கடந்து, இன்று 96ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்ட நாளினையும் சந்தித்திருக்கிறது.
மேலும், 2020இல் ஏற்பட்ட கொவிட்-19 தொற்றுநோய், நாட்டு முடக்கம், அச்சுக் கடதாசிப் பற்றாக்குறை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காலங்களிலும், பல்வேறு தடைகளைத் தாண்டி, இப்பத்திரிகையானது அதன் சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
நிலவும் சவால்களுக்கு மத்தியில் நாளிதழ், ஞாயிறு வெளியீடு மற்றும் 'விடிவெள்ளி' இதழ்கள் அச்சுப் பதிப்பாகக் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிவரும் அதேவேளை, 'மித்திரன் வாரமலர்' மற்றும் 'வீரகேசரி சர்வதேசப் பதிப்பு' ஆகியன மின்னியல் இதழ்களாக (E- -Paper) வாசகர்களைச் சென்றடைகின்றன.
இவற்றை விட முன்பு வெளியான மெட்ரோ நியூஸ், சுகவாழ்வு, கலைக்கேசரி, சோதிடகேசரி, நாணயம், ஜீனியஸ், சுட்டி கேசரி, ஜூனியர் கேசரி போன்ற சஞ்சிகைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டதையும் குறிப்பிடவேண்டியிருக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்து பயணிக்கும் வீரகேசரி
1990களின் பின் கணினி தொழில்நுட்பம் அறிமுகமானதைத் தொடர்ந்து, Weekend Express, விடிவெள்ளி, Metro News, ஜோதிட கேசரி, சுகவாழ்வு, கலைக்கேசரி எனப் பல துணை வெளியீடுகள் அறிமுகமானதும் கால நகர்வில் சில சஞ்சிகைகள் நிறுத்தப்பட்டதும் வாசகர்கள் அறிந்த விடயமே.
வீரகேசரியின் நூற்றாண்டை நோக்கிய இந்த உன்னத பயணத்தில், இந்த அச்சு ஊடகமானது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்து புதிய புரட்சிகரமான முன்னேற்றங்களையும் தற்காலத்தில் கண்டு வருகின்றமையும் மற்றுமொரு வளர்ச்சிப் பரிமாணமாகும்.
நவீன ஊடகங்களின் ஆதிக்கம் நிறைந்த தற்போதைய காலச்சூழலில், புற்றீசல் போல் எண்ணற்ற ஊடகத்தளங்கள் வெளிக்கிளம்பி வருகின்றன. அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையிலும் அதேசமயம் ஊடக அறத்தினின்று விலகாமலும் அச்சுருப்பெற்ற பல்வேறு செய்திகள், நேர்முகங்கள், விரிவான விவரணங்கள் போன்றவை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் துணையோடு காணொளிகளாக (Video) யூடியூப், முகப்புத்தகம், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற நவீன ஊடகங்களில் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று பத்திரிகைக்கு நிகராக Virakesari.lk இணையத்தளமும் செய்திகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கலை கலாசார அம்சங்கள், ஜோதிடம், சினிமா எனப் பல்வேறு பிரிவுகளில் வாசகர்களின் தேடல்களுக்கு விருந்தளித்து, வீரகேசரி என்கிற ஊடகத்தின் மற்றுமொரு ரூபமாகப் பிரகாசிக்கிறது.
இவ்விதமாக, 96ஆவது அகவையைக் கண்டு, நூற்றாண்டை நோக்கி கம்பீரமாக காலத்தோடு கைகோர்த்துச் சென்றுகொண்டிருக்கும் வீரகேசரி, தமிழ் பேசும் மக்களின் பேராதரவோடும் நம்பிக்கையோடும் நூற்றாண்டு விழாக் காணப்போகும் பூரிப்போடு தொடர்ந்து பயணிப்போம்!
வீரகேசரிக்கு ஏகோபித்த வரவேற்பும் ஊக்கமும் பேராதரவும் அளித்து வரும் அன்பார்ந்த வாசகர்களுக்கு நன்றி!














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM