சொத்து பிரகடனப் பரிசீலனையிலிருந்து பொதுமக்களை விலக்க அரசாங்கம் நடவடிக்கை

05 Aug, 2026 | 06:25 PM
image

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட முக்கிய வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் சீர்திருத்தங்களில் ஒன்றான சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை பொதுமக்கள் அணுகும் உரிமையை பலவீனப்படுத்தும் வகையிலான முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) வலியுறுத்துகிறது.

பொது அதிகாரப் பதவிகளில் உள்ளவர்கள் தங்களது சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் நிதி விபரங்களை வெளிப்படுத்துவதை சொத்துப் பிரகடனம் கட்டாயமாக்குகிறது. சட்டவிரோத சொத்துக்குவிப்பு, விருப்புசார் முரண்பாடுகள் மற்றும் ஊழல் சொத்துக்களை மறைத்தல் ஆகியவற்றை தடுக்கும் முக்கிய அரணாக இது திகழ்கிறது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைய, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவே (CIABOC) இவற்றை நிர்வகிப்பதற்கும், அத்தியாவசியத் திருத்தங்களுடன் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடுவதற்கும் பொறுப்பான முதன்மை அதிகாரசபையாகும்.

சொத்துப் பிரகடனங்களை பொதுமக்கள் பார்வையிடும் வாய்ப்பை ஏற்படுத்தியமையானது இலங்கையின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு மைல்கல்லாகும். பொது அதிகாரத்தை பயன்படுத்துவோர் வெளிப்படைத்தன்மையுடன் இயங்கவேண்டும் என்பதை இது உறுதி செய்கிறது. இத்தகைய அணுகல் உரிமை மூலமே ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சட்டவிரோத சொத்துக்குவிப்பு மற்றும் விருப்புசார் முரண்பாடுகளைக் கண்டறிந்து கேள்வி எழுப்ப முடியும். இத்தகைய பரிசீலனை சாத்தியப்படாவிட்டால், சொத்துப் பிரகடனம் என்பது பொறுப்புக்கூறலுக்கான கருவியாக இல்லாமல் வெறும் பெயரளவிலான நிர்வாக நடைமுறையாக சுருங்கிவிடும்.

2026 ஜூலை 24ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலமானது, எட்டப்பட்ட இந்த முக்கிய சீர்திருத்தத்தை பின்னோக்கி தள்ளும் வகையில் அமைந்துள்ளது.

பொதுவெளியில் கிடைக்கக்கூடிய தகவல்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த இந்தச் சட்டமூலம் முயல்வது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். ஒரு சொத்துப் பிரகடனத்தின் பயன்பாட்டை இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அல்லது அதிகாரியிடம் சமர்ப்பிப்பதற்கு மட்டுமே என வரம்பிற்குட்படுத்துவதன் மூலம், பொதுமக்களின் கண்காணிப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் விவாதங்களுக்கான ஒரு கருவியாக இருக்கும் அதன் பரந்த நோக்கத்தை பறிக்கிறது.

சட்டப்படி பொதுமக்களுக்கு கிடைக்கும் தகவல்களை பயன்படுத்துவதை குற்றமாக்குவது, தகவலறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை கடுமையாகப் பாதிக்கும் செயலாகும். இது அதிகாரிகளின் மறைமுக சொத்துக்கள், விருப்புசார் முரண்பாடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை வெளிக்கொணரும் பொதுமக்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை முற்றாக முடக்கிவிடும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

தெளிவான வழிகாட்டுதல்கள் இன்றி, தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் என்ற பெயரில் எந்தவொரு தகவலையும் தன்னிச்சையாக மறைக்கும் அதிகாரத்தை இச்சட்டமூலம் மத்திய அதிகாரசபைக்கு வழங்குகிறது. இதனால், பொதுப் பரிசீலனைக்கு தேவையான அத்தியாவசிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்படும் அபாயம் உருவாகியுள்ளது. பொது அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களின் நிதிப் பின்னணியை அறிய முடியாதவாறு தகவல்கள் நீக்கப்படுமானால், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அணுகல் உரிமையால் எந்தப் பலனும் இல்லை.

பிரகடனப்படுத்துபவருடன் ஆறு மாதங்களுக்கு மேல் ஒன்றாக வாழ்பவர்களின் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை புதிய சட்டமூலத்தில் நீக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் தாங்கள் அனுபவிக்கும் சொத்துக்களை, தம்முடன் வாழும் நபர்களின் பெயரில் மறைத்து வைப்பதற்கு இது வழிவகுக்கும். இத்தகைய திருத்தங்கள் மூலம் சட்டவிரோத சொத்துக்குவிப்பைக் கண்டறிவதிலும், உண்மையான சொத்து உரிமையாளர்களை அடையாளம் காண்பதிலும் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது.

ஊழலை ஒழித்து, வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்துவோம் என்ற உறுதியான வாக்குறுதியுடனேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றது. ஊழலுக்கு வழிவகுக்கும் இரகசியத்தன்மை மற்றும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரத்தை ஒழிப்பதே அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையாகும். இத்தகைய பின்னணியில், முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தங்கள் மிகுந்த கவலையளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சொத்துப் பிரகடனக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்துவது மக்கள் வழங்கிய ஆணைக்கு முற்றிலும் எதிரானதாகும். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், சொத்துக்களை மறைப்பதை எளிதாக்கும் வகையிலும், அதிகாரிகளின் நிதி நிலைமையை பரிசீலிப்பதை கடினமாக்கும் வகையிலும் செயல்படக் கூடாது. மேலும் பொதுவெளியில் உள்ள தகவல்களை பயன்படுத்தும் குடிமக்களுக்கு சிறைத்தண்டனை அபாயத்தை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

எனவே TISL அரசாங்கத்திற்கு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

சொத்துப் பிரகடனப் படிவங்களை பொது நலன் கருதி முறையான வழிகளில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் விதிகளையும், அதனை குற்றவியல் குற்றமாக்கும் சட்டப் பிரிவையும் உடனடியாக நீக்க வேண்டும்.

சொத்துப் பிரகடனத்தை செய்பவருடன் இணைந்து வாழும் நபர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் வெளிப்படுத்தாமல் பாதுகாக்கும் அதேவேளை, அவர்கள் தொடர்பான சொத்து விபரங்களை வெளிப்படுத்தும் சட்டத் தேவையை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

எந்தத் தகவல்களை மறைப்பது என்பதை தீர்மானிக்கும் பரந்த அதிகாரத்தை மத்திய அதிகாரசபைக்கு வழங்குவதைத் தவிர்த்து, மறைக்கப்படக்கூடிய தகவல்கள் எவை என்பதை சட்டத்தின் வாயிலாக தெளிவாகவும் துல்லியமாகவும் வரையறுக்க வேண்டும்.

பொதுப் பதவிகளில் இருப்பவர்கள் ஒரு சமூக ஒப்பந்தத்திற்கு உட்பட்டவர்கள், பொது நம்பிக்கை கோட்பாட்டின்படி அதிகாரத்தை பயன்படுத்தும் அவர்கள், கடுமையான மக்கள் கண்காணிப்பையும் பரிசீலனையையும் எதிர்கொள்ள கடமைப்பட்டுள்ளனர். எனவே அரச அதிகாரிகளை பொதுமக்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்துவது முற்றிலும் நியாயமானதும் கோட்பாட்டு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றுமாகும்.

தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அதை எதிர்கொள்வதற்கு அவதூறு மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான தற்போதைய சட்டங்களே போதுமானவையாகும். எனவே, சட்டப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. அரசியலமைப்பினால் உறுதிசெய்யப்பட்டுள்ள தகவலறியும் உரிமையை அனைத்து சட்டங்களும் ஆளுமை கட்டமைப்புகளும் பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர, அதை கட்டுப்படுத்தவோ பலவீனப்படுத்தவோ கூடாது.

2023ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் எட்டப்பட்ட முன்னேற்றங்களை அரசாங்கமும் நாடாளுமன்றமும் அரச நிறுவனங்களும் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டத்திருத்தமும் அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கும் பொதுமக்களின் உரிமையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, அதை பலவீனப்படுத்தக் கூடாது. சொத்துப் பிரகடனங்கள் அர்த்தமுள்ள விபரங்களை கொண்டிருப்பதோடு, அவற்றை மக்கள் சுதந்திரமாக ஆய்வு செய்ய முடியும்போதே பயனுள்ளவையாக அமையும். இல்லையெனில், பாடுபட்டு பெறப்பட்ட இந்தச் சீர்திருத்தம் பெயரளவு நடைமுறையாக மட்டுமே எஞ்சும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21
news-image

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல் ;...

2026-08-15 19:09:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

2026-08-15 19:07:06
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்த விரைவில் புதிய...

2026-08-15 18:42:19
news-image

போதைப்பொருள் வழக்குகளில் 9,000 இரசாயன பகுப்பாய்வு...

2026-08-15 18:30:34
news-image

கடந்த 6 ஆண்டுகளில் சிறையிலிருந்து தப்பிய...

2026-08-15 15:50:46
news-image

மரண தண்டனைக்குத் தடை, பயங்கரவாதத் தடைச்...

2026-08-15 17:37:21
news-image

ஜனாதிபதியுடனான சந்திப்பின் முழு காணொளியையும் வெளியிடுக...

2026-08-15 18:35:26
news-image

22வது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு...

2026-08-15 18:00:56
news-image

கொஸ்லந்தையில் காட்டுயானை தாக்குதலில் தென்னந்தோப்புக் காவலாளி...

2026-08-15 18:59:23