ஸ்மார்ட்போன் சந்தையில் தனது தயாரிப்பான விண்டோஸ் 10 கையடக்கத்தொலைபேசியானது பெரிதும் வரவேற்பைப் பெறாததால் அதனை மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசொப்டின் இந்த அறிவிப்பையடுத்து, விண்டோஸ் கையடக்கத்தொலைபேசி பயனாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த ஒருவருடத்திற்கு மேலாக விண்டோஸ் கையடக்கத்தொலைபேசி குறித்து குறிப்பிடத்தக்க வகையில் எவ்வித மேம்பாட்டையும் அறிவிக்காத மைக்ரோசொப்ட் நிறுவனம், தனது நிலைப்பாடு தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் அமைதி காத்து வந்தது.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளங்கள் மற்றும் சாதனங்கள் பிரிவின் துணைத்தலைவரான ஜோ பெல்ஃபியோர், 

பயனாளி ஒருவரின் விண்டோஸ் போனின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், 

"நிச்சயமாக நாங்கள் இந்த தளத்தை ஆதரிப்போம். பிழை திருத்தங்கள், பாதுகாப்பு மேம்படுத்தல்கள், முதலியனவற்றை தொடர்ந்து அளிப்போம். ஆனால் புதிய அம்சங்களை உருவாக்குவதிலும் ஹார்ட்வேயர் என்னும் வன்பொருள் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தப்போவதில்லை." என்று தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரொய்ட் மற்றும் iOS இயங்குதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட தொடர் சிறப்பம்சங்களையும், மென்பொருள் மேம்பாடுகளையும் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களும் விரைவில் ஆண்ட்ரொய்ட் அல்லது iOS போன்ற வேறு இயங்குதளங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 கையடக்கத்தொலைபேசி, வாடிக்கையாளர்களின் கணினி மற்றும் கையடக்கத்தொலைபேசிகளில் ஒரே மாதிரியான செயலிகளை பயன்படுத்தும் வகையில் வசதிகளை அளித்து அவர்களை ஈர்க்க முயன்றது. ஆனால், அந்த முயற்சி எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை.

விண்டோஸின் இந்த முடிவு கடந்த சில காலமாகவே பேசப்பட்டு வந்ததாக சந்தை கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.