அநுராதபுர சிறைச்சாலையில் மரணதண்டனை கைதிகளோடு சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி வவுனியா இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று காலை 9 மணி முதல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிவில் சமூகம், மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள இப் போராட்டத்தில் “உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பதில் கூறு” “பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே ரத்து செய்” “அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லையா” “சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்” “நீதி அமைச்சரே பதில் கூறு” “தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பிரஜைகளா” “காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் என்ன?” “தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன் வை” “நாட்டில் நடப்பது நல்லாட்சியா? பேயாட்சியா?” “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” “அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்” “உயிர் ஊசலாடுகிறது நல்லாட்சி நாடகமாடுகிறது” போன்ற வாசகங்கள் பொதிந்த பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் உணர்ச்சி மிகு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப் போராட்டத்தில் சிவில் சமூகத்தினர் பொது அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள் தனியார் அரச ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.