கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ; ஆடிவேல் வெள்ளி ரத பவனித் திருவிழா - 2026

29 Jul, 2026 | 11:32 AM
image

- உருத்திரா

முருகன் என்றால் வேல்.... வேல் என்றால் முருகன்... மனிதக் கண்களுக்கு ஆயுதமாகத் தோன்றும் வேலானது அறிவின் அடையாளம்.  ஞானச்சுடர், அருளொளி என்றெல்லாம் சான்றோர்கள் பரவசம் மேலிட வர்ணிக்கின்றனர். சீவகசிந்தாமணியில் அதன் ஆசிரியர் திருத்தக்கதேவர், ஒரு காட்சியை விபரிக்கிறார். மயக்கமுற்று கீழே விழுந்த ஒரு பெண், மீண்டும் மயக்கம் தெளிந்து எழுவதை, 'வேல்பெற்று எழுந்தாள்..." என்று அவர் கோர்த்த இத்தொடர், “அவள் அறிவு பெற்று எழுந்தாள்" எனும் பொருளில் அமைக்கப்பட்டதே. அறியாமை இருளை கிழித்தெறிய முருகன் ஏந்திய ஞானச்சுடரே “வேல்".  அறிவே வடிவான அவ்வேலாயுதத்தைத் தன் திருக்கரங்களில் பற்றியவாறு காட்சியளிக்கும் கதிர்வேலாயுத சுவாமியைச் சிரமேற்கொண்டு இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் மஹோன்னதம் பொருந்திய பெருந்திருவிழாவாக 'ஆடிவேல் திருவிழா' விளங்குகிறது.

இலங்கையின் ஆன்மிக வரலாற்றிலும் தமிழரின் பண்பாட்டுப் பயணத்திலும் ஆழமாக தடம் பதித்த மகத்தான திருவிழாக்களில் மிகவும் இன்றியமையாதது, 'கொழும்பு ஆடிவேல் வெள்ளி ரத பவனி".

கொழும்பு செட்டியார் தெரு மற்றும் பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் இந்த ஆடிவேல் வெள்ளி ரத பவனி உற்சவமானது, இம்முறை 152வது ஆண்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

பக்தி, கலை, பரம்பரை அறப்பணி ஆகியவற்றின் சங்கமமாகத் திகழும் இவ்விழா, இலங்கை நாட்டில் ஒரு முக்கியத்துவம் பெற்ற ஆன்மிக நிகழ்வாகவும் சிறப்பு பெறுகிறது.

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் இந்த ஆடிவேல் உற்சவமானது, வரலாற்றுப் பிரசித்தி பெற்று விளங்கும் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை போற்றும் ஆன்மிக கலாசார பண்பாட்டுத் திருவிழாவாகும்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் முருகக்கடவுளுக்கென அமையப்பெற்றுள்ள அறுபடை வீடுகளிலும் குறிப்பாக, திருச்செந்தூரிலும் வேல் வழிபாடு எத்தகைய முக்கியத்துவத்தினைப் பெறுகிறதோ, அத்துனை மகத்துவத்தை, இலங்கையில், கதிர்காமம் திருக்கோயிலில் வீற்றிருக்கும் கதிர்காமக் கந்தன் வழிபாடும் வேல் பூஜையும் பெற்றிருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

பல ஆண்டுகளுக்கு முன்பு... பிரித்தானிய காலனித்துவ அரசு நாட்டில் செல்வாக்கு பெற்றிருந்த 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலும், கொழும்பு வாழ் மக்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் வசித்த பெருந்திரளான பக்தர்கள் தென் பகுதியில் உள்ள கதிர்காமத்துக்குப் பாதயாத்திரையாகச் சென்றே முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். ஆனால், கால நகர்வில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்தனர்.

1847இல் நாட்டில் கொலரா தொற்றுநோய் பரவத் தொடங்கியது. அப்போது மக்களை மிக மோசமாக அச்சுறுத்திய இந்நோய் நிலைமை, பாதயாத்திரைக்கு பெருந்தடையை ஏற்படுத்தியது. இதனால் அன்றைய பிரித்தானியர் அரசு மக்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் கதிர்காமம் செல்ல முடியாமல் யாத்திரீகர்கள் தவித்தனர்.

கதிர்காமக் கந்தனை தரிசிக்க வழியின்றி கொழும்பு வாழ் பக்தர்கள் மனச்சோர்வுற்றிருந்த சந்தர்ப்பத்தில், அவர்கள், கதிர்காம ஆடிவேல்  பூஜை முறைகளையும் உற்சவத்தின்  முக்கியமான அம்சங்களையும் தலைநகரில் இருந்தவாறே கண்டு, மகிழ்ந்து, வழிபட்டு, பக்தப் பெருமக்கள் தங்கள் பிரார்த்தனைகளை கந்தனிடம் சேர்க்கவேண்டும் என்பதற்காகவே, நாட்டுக்கோட்டை நகரத்தாரால் இந்த ஆடிவேல் வெள்ளி ரத பவனித் திருவிழா தொடங்கப்பட்டது.

பல நூறாண்டுகளுக்கு முன்னதாகவே, தென்னிந்தியாவின் செட்டிநாட்டை தாயகமாகக் கொண்ட நாட்டுக்கோட்டை நகரத்தார், அப்பகுதியிலிருந்து இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்று, அங்கெல்லாம்கூட  வணிகத் துறையில் சிகரம் தொட்டனர். அதுமட்டுமன்றி, தாங்கள் கால்பதித்த இடங்களிலெல்லாம் சைவ சமயத்தையும் தமிழ் மொழியையும் வளர்க்கும் நோக்கில் பல்வேறு ஆலயப் பணிகளையும் சமூகச் சேவைகளையும் முன்னெடுத்தனர். அவர்களது இறை நம்பிக்கையின், அரும்பெரும் திருத்தொண்டின் அடையாளமாக, 1874ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாலயம் கொழும்பில், சைவத்தின் மரபையும்  பாரம்பரியத்தையும் இந்துக்களின் சமய பண்பாட்டு கலாசாரத்தையும் பேணிக் காத்து நிற்கும் தலமாக இன்றளவில் விளங்கி வருகிறது.

இந்த ஆலயத்தில் நடைபெறுகிற ஆடிவேல் வெள்ளி ரத பவனி உற்சவமானது வழிபாட்டுக்கும் பக்திக்கும் ஆன்மிகத்துக்குமான தேடலுக்கு உகந்த திருவிழாவாக மட்டுமன்றி, இன ஒற்றுமையையும் மனித மாண்புகளையும்கூட கட்டிக்காக்கும் பெருமைமிகு விழாவாகவும் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒன்றுகூடலில் பேதமின்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், அக்காலத்தைய பிரித்தானிய ஆட்சியின்போது ஏற்பட்ட தடைகளையும், காலப்போக்கில் நேரிட்ட பல்வேறு சவால்களையும் கடந்து, தலைமுறை தலைமுறையாக இத்திருவிழா, அதன் பாரம்பரியம் குறையாமல் நடத்தப்பட்டு வருகிறது.

இன்றைக்கு, கொழும்பில் நடைபெறுகிற இந்த ஆடிவேல் வெள்ளி ரத பவனி உற்சவத்தினை, செட்டியார் தெரு மற்றும் பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயங்களின் பிரதம அறங்காவலர் ராஜேந்திரன் செட்டியாரின் தலைமையில், விழாக் குழுவினரும் தொண்டர்களும் மிக நேர்த்தியாகச் செய்து வருகின்றனர்.

செட்டியார் தெரு புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துக்கும், பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்துக்கும் இடையேயான ஆன்மிகத் தொடர்பைப் பேணும் வகையில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் ஆடிவேல் ரத பவனி உற்சவப் பெருவிழாவின் தனித்த சிறப்புக்குரியதாகக் காட்சியளிப்பது, வீதியில் உலா வரும் வெள்ளி ரதமே.

நுட்பமான, கலையம்சம் பொருந்திய வேலைப்பாடுகளினாலும், ஆசியாவில் உள்ள இந்து ஆலயங்களிலேயே மிக உயரமானது எனும் விதத்தில், பிரம்மாண்டமான உயரத்தினாலும் வடிவமைக்கப்பட்ட வெள்ளி ரதம், சூரியனின் ஒளி பட்டு ஜொலிக்க, பகற்பொழுதில் வீதியில் அசைந்து வருகிற காட்சி பரவசமளிக்கிறது.

கொழும்பு செட்டியார் தெரு மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலய பிரதம குருக்கள் ஜெகநாத ஐயர் நாகராஜா குருக்கள் கூறுகிறார், “ஆடிவேல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம்முறை வெள்ளி ரதம் வீதி உலா வருகிறது. ரத பவனியின்போது வெள்ளி ரதம், தங்க ரதம் என இரு ரதங்கள் மாறி மாறி வருவது வழமை. இரட்டைப்படை வருடங்களில் வெள்ளி ரதமும் ஒற்றைப்படை வருடங்களில் தங்க ரதமும் வீதி உலா வரும். அவ்வகையில் இந்த ஆண்டு வெள்ளி ரத பவனி உற்சவத்தில் பங்கேற்று, வழிபட்டு, முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக, இலங்கையின் பல இடங்களிலுமிருந்து மட்டுமன்றி, உலகெங்கிலுமிருந்தும் மக்கள் தலைநகருக்கு வருகைதருகிறார்கள்.”

தொடர்ந்து ஆடிவேல் திருவிழா மகிமை குறித்துப் பேசிய அவர், “கதிர்காமத்துக்கு சென்று கதிர்காமக் கந்தனை நேரடியாக தரிசிக்க முடியாத அடியார்களுக்காக கொழும்பு நகரில் ஆடிவேல் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஆடிவேல் உற்சவத்தின்போது வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள். இன்றைக்கும் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் கொடியேற்றப்படும் வேளையில், பள்ளிவாசல் உட்பட எல்லா மத ஸ்தலங்களிலும்கூட கொடியேற்றப்படுகிறது.

அத்துடன், திருவோண நட்சத்திரத்துடன் கூடிய ஆடிப் பூரணைத் திதியில் முருகப்பெருமான் கதிர்காமத்தில் தீர்த்தமாடுவதைப் போல, கொழும்பிலும் இந்து மகா சமுத்திரத்தில் தீர்த்தமாடுவார்கள். அல்லது இந்து மகா சமுத்திரத்திலிருந்து கலசத்து நீர் எடுத்து வரப்பட்டு, அந்நீரைக் கொண்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து, தீர்த்தோற்சவம் நிகழ்த்தப்படும்.

இந்த ஆடி உற்சவ காலத்தில் முருகப்பெருமானை நோக்கி வழிபட்டால், நினைத்த சகல நற்காரியங்களும் கைகூடும் என்பது அடியார்களின் நம்பிக்கை...." என்கிறார்.

ஆடிவேல் நாயகன் முருகன், அன்பர்களுக்கு வாழ்வில் பல நலன்களும் வெற்றிகளும் கிட்டுவதற்கு வழிகாட்டட்டும்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னோர்கள் ஆசிர்வதிக்கும் ஆடி அமாவாசை விரதம்

2026-08-12 12:15:37
news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12
news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05