பாகிஸ்தான் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 482 ஓட்டங்களைப்பெற்று வலுவான நிலையிலுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி டுபாயில் இடம்பெற்று வருகின்றது.

முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரில் 1-0 என முன்நிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் 2 ஆவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 482 ஓட்டங்களைக் குவித்தது.

இப் போட்டி இலங்கை அணிக்கு முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.

இப் போட்டியில் இலங்கை அணிசார்பாக துடுப்பெடுத்தாடிய திமுத்து கருணாரத்ன இரட்டைச் சதம் பெறும் வாய்ப்பை 4 ஓட்டங்களால் தவறவிட்டார். அவர் 196 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது வகாப் ரியாஸின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் சந்திமல் 62 ஓட்டங்களையும் டிக்வெல்ல 52 ஓட்டங்களையும் டில்ருவான் பெரேரா 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 482 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை இன்றை 2 ஆம் நாள் ஆட்டத்தின் இரவுணவின் பின்னர் அடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் யசீர் ஷா 6 விக்கெட்டுகளையும் மொஹமட் அப்பாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் இன்றைய 2 ஆம்நாள் ஆட்டத்தின் இரவு உணவு வேளையின் பின்னர் தனது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் ஷான் மஷூட் 15 ஓட்டங்களுடனும் சமி அஸ்லம் 30 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர். நாளை போட்டியில் 3 ஆம் நாளாகும்.