வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் ஆலயத்திற்கு சென்ற மாணவர்கள் மீது இன்று நண்பகல் 12.30 மணியளவில் இளைஞர் குழுவொன்று தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு மாணவனும் 5 மாணவிகளும் இணைந்து  பாலமைக்கல் கிராமத்திலுள்ள ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் எங்கே செல்கின்றீர்கள்? என வினாவியுள்ளனர். இதன்போது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்குமிடையே சில கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளது.

பின்னர், அந்த மாணவர்கள் மீது குறித்த இளைஞர் குழு தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.  

இதனையடுத்து அங்கிருந்து தப்பித்த மாணவர்கள் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தினுள் நுழைந்துள்ளனர். அதன் போது குறித்த இளைஞர் குழு கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது குறித்த இளைஞர் குழு மோட்டார் சைக்கிளில் தப்பித்து செல்ல  முயன்றனர். இதன்போது பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

வவுனியா பாலாமைக்கல் பகுதியில் இவ்வாறான இளைஞர்கள் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.