கம்பளை பகுதியில் காணாமல் போன 45 லட்சம் பெறுமதியான டிப்பர் லொறியை நிட்டம்புவ, உடாம்பிட்டிய  பிரதேச குடியிருப்பு பகுதியொன்றில் வைத்து நேற்று மாலை மீட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே மாதம் 2ஆம் திகதி கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணாமல் போன வாகனங்களில் சில  பூண்டுலோயா பொலிஸாரினால் மீட்கப்பட்டதுடன் கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடைய சில சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலமே குறித்த டிப்பர் லொறியை நிட்டம்புவ பகுதியிலிருந்து நேற்று மீட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட டிப்பர் லொறியின் செசி, எஞ்சின் உட்பட லொறியின் இலக்கம் ஆகியன மாற்றப்பட்டு மோட்டார் வாகன திணைக்களத்தில் போலி இலக்கங்களில் பதிவு செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த லொறியை 40 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயார் நிலையில் வைத்திருந்த போதே பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் லொறி மீட்கப்பட்டதாகவும் குறித்த லொறியை மேலதிக விசாரணைகளுக்காக கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பூண்டுலோயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சுரவீர தெரிவித்தார்.