(எம்.எப்.எம்.பஸீர்)

மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்து மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்ப்ட்டுள்ளார்.

வாதுவை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பிரகீத் சாணக குணதிலக எனும் முன்னாள் பொலிஸ் கான்பிஸ்டபிளே தேடப்பட்டுவந்த நிலையில், இன்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரம்பேபொல ரத்னசார தேரரை கைது செய்ய தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைது செய்யப்ப்ட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள், பாணந்துறை நீதிவான் நீதிமன்றினால் மூன்று வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபராவார். 

அதில் இரண்டு வழக்குகள் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தககுதல் குறித்தவை என்றும் மற்றையது மகளிர் பாடசாலையொன்றின் பெண் அதிபரை அச்சுறுத்தியமை தொடர்பிலானது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிசை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில், ஒன்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.