(எம்.நியூட்டன், கே.குமணன்)
பாதிக்கப்பட்டவர்களாகிய நீங்கள் எமக்கு அளித்த மகஜரானது வெறும் காகிதம் அல்ல. அதனை எனது உள்ளத்தால் ஏற்றுக்கொள்கின்றேன். உங்களின் துன்ப, துயரங்களை நாங்கள் அறிவோம் உங்கள் பிரச்சினைகளை எம்மால் முடிந்தவரை ஐ.நா சபையிலும், மனித உரிமைகளை பேணம் நாடுகளிடமும் எடுத்துக் கூறுவோம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான துதுவர் கார்மென் மொரேனோ தலையையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையில், ஜேர்மனுக்கான தூதுவர் பெலிக்ஸ் நியூமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பேர்ட், இத்தாலி தூதுவர் டொமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் வீபே டி போர் ஆகியோர் அடங்கிய குழுவினர் வடக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த குழுவில்,அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் டாக்டர் யோஹான் ஹெஸ்ஸே மற்றும் தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் சாரா பொன்சேகா சில்வா ஆகியோரும் இந்த பங்கேற்றுள்ளனர்.
செம்மணிக்கு நேரடி விஜயம்
குறித்த குழுவினர் நேற்றையதினம் செம்மணி மனிதப்புதைகுழியில் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அகழாய்வு பணிகளை பார்வையிடுவதற்காக அகழாய்வு தளத்திற்கு நேரடியாக விஜயம் செய்திருந்தனர்.இந்த விஜயத்திற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் முன்னதாக அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழாய்வு பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பார்வையிட்டு, அகழாய்வுப் பணிகளின் செயல்முறைகள் தொடர்பாக அதிகாரிகளிடமிருந்து விளக்கங்களையும் தூதுவர்கள் பெற்றுக்கொண்டனர். அத்துடன் அகழ்வுக் களத்தில் கடமையாற்றிவரும் யாழ்.நிதிமன்ற நிதிபதி, யாழ்.போதனாவைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி ,மற்றும் சட்டதரணிகளிடம் கலந்துரையாடினார்கள்.
கவனயீர்ப்பு போராட்டம்
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வு தளத்தைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வருகை தந்திருந்த நிலையில், சமகாலத்தில் வட,கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கண்டி–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தின் போது, செம்மணி மனிதப்புதைகுழி உள்ளிட்ட இலங்கையில் கண்டறியப்பட்ட அனைத்து மனிதப்புதைகுழிகளுக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறையூடாக சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும், இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையை நிராகரிப்பதாகவும், சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாகவே நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
கண்காணிப்புக்குள் போராட்டக்காரர்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் தலைமையிலான குழுவினர் வருகை தந்தபோது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உட்பட அவ்விடத்தில் கூடியிருந்த அனைவரையும் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் காண்காணிப்புக்குள் வைத்திருந்ததோடு அவர்களை அடக்கும் வகையிலும் சில செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்த குறித்த தரப்பினர் விரைந்து கலைந்து செல்லுமாறும் தொடர்ச்சியாக வலியுறுத்தியவண்ணமிருந்தனர்.
பாதிக்கப்பட்ட தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தை
இதனையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற வட,கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் கனகரஞ்சினி உட்பட இரு பிரதிநிதிகளை சித்துபாத்தி இந்து மயான வளாகத்திற்குள் அழைத்த ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் தலைமையிலான குழுவினர் அவர்களுடன் உரையாடினார்கள். அச்சமயத்தில் நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல என்பது எமக்கு தெரியும். இதனை எனது உள்ளத்தால் ஏற்கின்றோம். நாம் உறுதி மொழிதர முடியாது. ஆனால் உங்களின் துன்ப துயரங்களை அறிவோம் உங்கள் பிரச்சினைகளை எம்மால் முடிந்தவரையும் ஐ.நா சபையிலும், மனித உரிமைகளை பேணும் நாடுகளிடமும் எடுத்துக்கூறுவோம் என்று தூதுவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் துணைநிற்கும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சுயாதீன விசாரணை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய 12பக்கத்திலான மகஜர் பதிக்கப்பட்டவர்களின் சார்பில் தூதுவர்களிடத்தில் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிட்ட கனகரஞ்சினி, எங்களுக்கு எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது, என தெரிய வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை தான் நடந்தது என்பதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதனூடாக சர்வதேச நீதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.. உள்ளகப் பொறிமுறைகளையோ, உள்ளக விசாரணைகளையோ அல்லது காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலக மாதிரி இலங்கை அரசால் அமைக்கப்படுகின்ற அலுவலகங்களையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் எங்களுக்கான நீதியை தரப்போவது இல்லை. நாங்கள் எத்தனையோ ஆணைக்குழுக்களை சந்தித்திருக்கிறோம், ஆட்சி செய்கின்ற அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்திருக்கின்றோம். அது எதுவும் எமக்கு எதனையும் பெற்று தரவில்லை என்ற பிற்பாடு தான் நாங்கள் சர்வதேசத்தின் ஊடான ஒரு விசாரணையை கோரி நிற்கின்றோம்.
நாம் சர்வதேச விசாரணையை கோரி நிற்கிறோம் என்றால், சர்வதேசம் எங்களுக்கு ஒரு சரியான நீதியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் தான் சர்வதேச தரப்புக்களிடம் கோரிக்கையையும் மனுக்களையும் கையளித்துக் கொண்டிருக்கிறோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் இதுவரையில் 450 பேருக்கு மேல் எங்களோடு இருந்தவர்கள் மரணித்து விட்டார்கள். அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். எங்களுடைய உறவுகளுக்கான நீதி கிடைக்க வேண்டும்.
கொடூர யுத்தமும் இன அழிப்பும் நடந்த பிற்பாடு கையளித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம் தான் தகவல்களை பெற்று வெளிப்படுத்த வேண்டும். கொலையாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
எத்தனையோ விசேட தூது குழுக்கள், பிரதிநிதிகள் இங்கே வந்து போயிருக்கின்றார்கள். ஆனால் இதுவரைக்கும் எங்களுக்கு எந்தவிதமான ஒரு நல்லதொரு வார்த்தைகளை அவர்கள் எங்களுக்கு தெரிவிக்கவில்லை.
ஆகவே, நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவாக இங்கே வந்திருக்கிறீர்கள். ஐநா மன்றத்தில், மனித நேயங்களை நேசிக்கின்ற நாடுகளில் எங்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து, எங்களுக்கான சர்வதேச நீதிக்கான விசாரணையை நீங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும் என்று கூறி, அறிக்கை எமது அறிக்கையை கையளித்தோம்.
எமது இந்த அறிக்கை, அறிக்கை மட்டுமல்ல எங்களுடைய உயிரை உங்களுடைய கையிலே ஒப்படைத்திருக்கின்றோம் என்று கூறி அதனை கையளித்தோம் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM