இந்தியாவில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பில் எழுந்த பல்வேறு சர்ச்சைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களுக்கு எதிராக பொலிஸார் எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் பல பகுதிகளில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அருகில் காங்கிரஸ் தரப்பினர் நடத்திய போராட்டத்தின்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லி முழுவதும் படையினர் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த இந்த மாபெரும் போராட்டத்தின் பின்னணி
காரணம் : நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அதனால் ஏற்பட்ட மாணவர் தற்கொலைகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆர்ப்பாட்டம்: கடந்த ஜூன் 20ஆம் திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யினரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்
மாணவர்களுக்கு ஆதரவாக, நீட் தேர்வு விவகாரத்தை சுட்டிக்காட்டி, டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யினரால் கடந்த மாதம் முதல் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது மிகப் பிரபலமாகி வரும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யின் நிறுவனர் அபிஜித் தீப்கே இந்தப் போராட்டத்தில் பிரதான அங்கமாகியிருக்கிறார்.
“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party)
இந்தியாவில் உள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், தான் கையாண்ட ஒரு வழக்கு விசாரணையின்போது நாட்டின் இளைஞர்களைப் பற்றி மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தார்.
போலிச் சான்றிதழ்களைப் வைத்துக்கொண்டு வேலையின்றிச் சுற்றித் திரியும் இளைஞர்களை அவர் “கரப்பான் பூச்சிகள்” என்றும் “ஒட்டுண்ணிகள்” என்றும் விமர்சித்தார்.
மேலும், தற்போதைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விமர்சனங்களை மட்டுமே முன்வைப்பதாகக் கூறி, அவர்களைக் கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டார்.
இந்த சர்ச்சையான கருத்து இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
நீதிபதியின் விசித்திரமான ஒப்பீட்டைக் கண்டிக்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள பொஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவரான அபிஜித் தீப்கே, கடந்த மாதம் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" (Cockroach Janta party) என்ற நையாண்டி அமைப்பைத் தொடங்கினார்.
சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த கட்சி பற்றி அறிவிப்பு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீ போலப் பரவியது.
இளைஞர்களின் குரலாக உருவெடுத்த இந்த அமைப்பு, இணையத்திலும் நாட்டின் இளைஞர் வட்டாரத்திலும் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளதன் பயனாக, தற்போது டெல்லியில் இக்கட்சியினர் தீவிரமாக நடத்திவரும் போராட்டத்தில் பெருமளவு இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.
பாராளுமன்றப் பேரணி
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அறிவித்திருந்தார். பின்னர் உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், திட்டமிட்டபடி நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இப்பேரணியில் திரண்டனர்.
தடியடி மற்றும் வன்முறை மோதல்
மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேரணியைத் தடுக்க, பொலிஸார் அமைத்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றதால், பொலிஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். பதிலுக்குப் போராட்டக்காரர்கள் தரப்பிலும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலில் காயமடைந்த பல இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள RML மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்துக் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மாணவர்களுக்கு ஆதரவாகப் களமிறங்கியுள்ளதால், போராட்டம் அரசியல் ரீதியாகவும் சூடுபிடித்துள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லியில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் அங்கு மத்திய ரிசர்வ் பொலிஸ் படை எனும் CRPF படைகள் பாதுகாப்புக் கடமைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
சி.ஆர்.பி.எப் படைகளை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்த நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு உள்துறை அமைச்சு உத்தரவிட்டதையடுத்து, இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
டெல்லியில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறவும் மத்திய உள்துறை அமைச்சு பாதுகாப்பு விடயங்களில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.
20 கூடுதல் CRPF படைகள்
தற்போது மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காகக் கொல்கத்தாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 சி.ஆர்.பி.எப் படைகள் உடனடியாக விமானங்கள் மூலம் டெல்லிக்கு வரவழைக்கப்படுகின்றன.
படைபலம்
ஒரு படையணிக்கு சுமார் 100 வீரர்கள் வீதம், இதன் மூலம் சுமார் 2,000 மேலதிக வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே 30 CRPF படையணிகளும், விரைவு அதிரடிப் படைகளும் (RAF) டெல்லி பொலிஸாரின் உதவிக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 20 படையணிகள் களத்தில் இறக்கப்பட்டிருப்பதானது தலைநகரை முழுப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது.
கண்டனங்கள்
மாணவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கும் இதன்போது அவர்கள் அத்துமீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் முகங்கொடுத்ததை சுட்டிக்காட்டி, இந்தியா முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பல்வேறு தரப்பினர் கண்டனம் வெளியிட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம், “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என கருத்து தெரிவித்துள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM