ரஷ்யாவின் மத்தியப்பகுதியில் ரயிலுடன் பஸ் ஒன்று மோதியதினால் ஏற்பட்ட விபத்தில் கைக்குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் கிழக்கு பகுதியிலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விளாடிமிர் நகரத்திலேயே இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் ரயிலில் பயணித்த எவருக்கும் எது வித பாதிப்பும் இல்லை எனவும் பஸ்ஸில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் பஸ் சாரதியின் கவனக் குறைவினாலேயே விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.