டி.பி.எஸ். ஜெயராஜ்; புலம்பெயர்ந்த சாட்சி

21 Jul, 2026 | 10:52 PM
image

ரூபன் துரைராஜா

டி.பி.எஸ். ஜெயராஜ் கனடாவில் காலமானார் என்ற செய்தி ஒரு முடிவைக் குறிக்கும்  உணர்ச்சிபூர்வமான அறிவிப்பாக அன்றி, பதிவுக்காக அனுப்பப்பட்ட ஒரு தகவல் போன்று வந்து சேர்ந்தது. அதில் நாடகத்தனமாக எதுவுமில்லை. இலக்கியங்கள் விரும்பும் திருப்புமுனைகளோ, உச்சக்கட்ட நிறைவுகளோ அதில் இருக்கவில்லை. அவரது பாரம்பரியத்தை வரையறுத்த தீவிலிருந்து வெகுதொலைவில், ஜெயராஜ் இயற்கை எய்தினார் என்ற தகவல் மட்டுமே சாதாரணமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை, தனது மனிதர்களைப் போலவே தனது மரணங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பழகியதுதான். ஆனால், இவரது விடயத்தில் அந்தப் புவியியல் இருப்பிடம் ஏதோ திட்டமிட்டு அமைந்தது போல் இருந்தது. இலங்கைத் தீவு பிளவுபட்டு, சீரமைக்கப்பட்டு, மறுபெயரிடப்பட்டு வேறு ஒன்றாக மாறிக் கொண்டிருந்த பல தசாப்தங்களாக, டி.பி.எஸ் அதைப் பற்றித் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். 

இறுதியில், அவரும் அந்தப் புலம்பெயர்வின் ஒரு அங்கமாகவே மாறிப்போனார். இதை முரண் என்று விவரிக்கவே மனம் தூண்டுகிறது என்ற போதிலும், 'வழக்கமான முறைமை' (pattern) என்று அழைப்பதே மிகச் சரியானது.

டேவிட் பியூவெல் சபாபதி ஜெயராஜ் 1954ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியைக் கொழும்பு புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையில் பயின்றார். இருப்பினும், அவரது கற்பனைத் திறன் தலைநகரத்தைப் போலவே யாழ்ப்பாணத்தாலும் வடிவமைக்கப்பட்டது. பின்னர், அவர் பழைய புரடஸ்தாந்து கற்றல் நெறிகள் பிற இடங்களை விடச் சற்றுக் கூடுதல் காலம் நிலைத்திருந்த நிறுவனமான யாழ்ப்பாணக் கல்லூரியில் (Jaffna College) பயின்றார். 

அது, ஆரவாரமான உரைகளை விடத் துல்லியத்தையும் வெறும் முழக்கங்களை விட ஆவணங்களையும் ஆணித்தரமான முடிவுகளை விடத் தேடலையும் மதித்த கல்விமுறை. அந்தப் பழக்கங்கள் அவரை விட்டு ஒருபோதும் நகரவில்லை. அவை அவரது பத்திரிகைத் துறையின் மரபணுவாகவே  மாறின.

அவர் பெற்ற உலகம்

இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தின் இறுதிக்கால  கட்டத்தினாலும் சுதந்திரத்துக்கு பின்னரான ஆரம்பக் காலகட்டத்தினாலும்  உருவான தலைமுறையைச் சேர்ந்தவர் டி.பி.எஸ். அப்போது இலங்கை இன்னும் ஒரு சிறிய நிர்வாகச் சமூகத்தின் பழக்க வழக்கங்களைச் சுமந்து கொண்டிருந்தது. அது பரீட்சைகள், சிவில் சேவைக்கான மதிப்பு, அரசியல் சார்பை விடப் படிப்பறிவை எதிர்பார்த்த செய்தித்தாள்கள் மற்றும் ஒரு பாலமாகவும் வேலியாகவும் செயல்பட்ட ஆங்கில மொழி ஆகியவை நிறைந்த ஒரு உலகம்.

1948 – 1956 காலகட்டத்துத் தமிழ் நடுத்தர வர்க்கத்திற்கு கல்வி என்பது வெறும் சமூக முன்னேற்றம் மட்டுமல்ல, அது ஒரு குடிமைத் தத்துவம் (civic philosophy). அரசு குறைபாடுகள் உடையது. ஆனால் அதைச் சரிசெய்ய முடியும் என்று நம்பப்பட்டது. நடைமுறைகள் முக்கியமானவையாக இருந்தன. சட்டம் முக்கியமாக இருந்தது. வாதங்கள் முக்கியமாக இருந்தன. எதிர்காலம் என்று ஒன்று வந்தால், அது நிறுவனங்கள் மூலமாகவே படிப்படியாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நம்பிக்கை அரசியலில் இருந்து ஒரு குறிப்பிட்ட இடைவெளியைக் கோரியது. அது அலட்சியம் அல்ல, மாறாகப் பலத்தை விடக் கட்டமைப்பு முறையின் மீதிருந்த நம்பிக்கை.

சுதந்திரம் உடனடியாக இந்த உலகப் பார்வையை அழித்துவிடவில்லை. அது தனது சொற்களஞ்சியத்தை அப்படியே விட்டுவிட்டு, அதன் அடித்தளங்களை மட்டும் மெல்ல மெல்ல அரிக்கத் தொடங்கியது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை ஒரே செயலில் வீழ்ந்துவிடவில்லை. அது சிறுகச் சிறுகச் சீரழிந்தது.

1956ஆம் ஆண்டின் "சிங்களம் மட்டும் சட்டம்" (Sinhala Only Act) உரிமைகளுக்கான படிநிலையை மாற்றியமைத்தது. 1970ஆம் ஆண்டில், பல்கலைக்கழக அனுமதி தகுதியை அடிப்படையாகக் கொள்ளாமல், இன அடிப்படையிலான ஒதுக்கீட்டை நோக்கி நகர்ந்தது. தனித் தனியாகப் பார்க்கும்போது ஒவ்வொரு மாற்றமும் சமாளிக்கக் கூடியதாகத் தோன்றியது. ஆனால், ஒன்றாகச் சேர்ந்து அவை அரசு இனி நடுநிலையானது அல்ல என்பதை உரக்கச் சொல்லாமல் உணர்த்தின.

தொடர்ந்து வந்த வன்முறைகள் ஒரு குறுக்கீடாக வரவில்லை. அவை முந்தைய மாற்றங்களின் உறுதிப்படுத்தலாகவே வந்தன.

குறிப்பாக,   தமிழர்களுக்கு எதிரான 1983 ஜூலை  இனப் படுகொலைகள் கூட்டு நினைவில் ஆழமாகப் பதிந்தபோது, அந்தப் பிளவு பலராலும் ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருந்தது. எஞ்சியிருந்தது ஆச்சரியம் அல்ல, மாறாகக் கையறுநிலை மட்டுமே. 

சகல சமூகங்களுக்கும் பொதுவான அரசியல் திட்டம் (Political project) என்ற யோசனை ஏற்கனவே காலாவதியாகிவிட்டது.

இந்தச் சோர்வுக்கும் கையறுநிலைக்கும் நடுவேதான் டி.பி.எஸ் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார்.

இலங்கை (Ceylon) 'ஸ்ரீலங்கா'வாக மாறிக் கொண்டிருந்த 1977ஆம் ஆண்டில், அவர் 'வீரகேசரி' தமிழ் தினசரியில் இணைந்தார். பின்னர் ஆங்கிலப் பத்திரிகைத் துறைக்கு மாறிய அவர், 'தி ஐலண்ட்' (The Island) பத்திரிகையிலும், 'தி இந்து' மற்றும் 'புரண்ட்லைன்' இதழ்களின் கொழும்பு நிருபராகவும் பணியாற்றினார். அதே நேரத்தில் பி.பி.சி. தமிழ் சேவையிலும் பங்களிப்புச் செய்தார். அவரது முதன்மையான பொருள் வெறும் போர் மட்டுமல்ல; அந்தப் போரை உருவாக்கிய சமூகம் மற்றும் அதில் சிறைபட்ட மனிதர்களும்தான்.

1987ஆம் ஆண்டு திருப்புமுனையாக அமைந்தது. இந்திய அமைதி காக்கும் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் குறித்த அவரது அறிக்கைகள், எதிரெதிரான பிரச்சாரங்கள் மௌனத்தையே விரும்பிய ஒரு தருணத்தில், சாதாரண மக்களின் துயரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின. இந்திய அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தத்தின் கீழ் அவர் கொழும்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, பின்னர் எந்தக் குற்றச்சாட்டுமின்றி விடுவிக்கப்பட்டார். 

ஆனால், உண்மை என்பது தமக்கு எவ்வித பாதுகாப்பையும் தருவதில்லை என்பதை அவர் கண்டுகொண்டார்.

இலங்கை அரசு அவரைச் சந்தேகக் கண் கொண்டு பார்த்தது. விடுதலைப் புலிகளோ, அவரது அறிக்கைகள் தங்களுக்கு அசௌகரியமாக இருந்தபோது, அவருக்கு மிரட்டல் விடுத்தனர். 1988 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவருக்கு 'நீமன் ஆய்வுப்பரிசில்' (Nieman Fellowship) வழங்கி கௌரவித்தது. டி.பி.எஸ் இதை ஒரு வருட விடுமுறையாகக் கருதினார். ஆனால் அதுவே அவரது நிரந்தர புலம்பெயர்வின்  தொடக்கமாக அமைந்தது.

அவரைத் திரும்பிச் செல்லவேண்டாம் என்று நண்பர்கள் வற்புறுத்தினர். அவரது நண்பரும் சக பத்திரிகையாளருமான ரிச்சர்ட் டி சொய்சாவின் படுகொலை, அவர் ஏற்கனவே அறிந்திருந்ததை உறுதிப்படுத்தியது. நினைவுகளே உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடிய ஒரு இடமாக இலங்கைத் தீவு மாறியிருந்தது.

பின்னர் அவர் கனடாவில் குடியேறினார். இது பாதுகாப்பை வழங்கியதே தவிர விடுதலையை அல்ல. ரொறன்ரோவில் அவர் நிரந்தர "இடைநீக்கத்தில்" இருந்த ஒரு இலங்கைச் செய்தியாளராகவே தொடர்ந்தார். அனைத்துச் சமூகங்களிலிருந்தும் தனது தகவல் தொடர்பாளர்களைப் பேணி வந்தார். 1993ஆம் ஆண்டில் தமிழ் காடையர்களினால்  நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் அவரது இரண்டு கால்களும் உடைந்த நிலையிலும் அவர் தப்பினார். இருப்பினும், உண்மைகள் முக்கியம், துல்லியம் தனக்கென ஒரு தர்ம பலத்தைக் கொண்டுள்ளது, 

மேலும் பொறுமையுடன் செவிமடுத்தால் ஒரு நாட்டை இன்னமும் புரிந்துகொள்ள முடியும் என்ற பழைய நம்பிக்கையினால் உந்தப்பட்டு அவர் தனது பணியைத் தொடர்ந்து செய்தார்.

ஆவணக் காப்பக இதழியல்

அவர் ஒரு காரசாரமான விவாதக்காரராக (polemicist) எழுதவில்லை. ஓர் பேராசிரியராகவும் எழுதவில்லை. அவரது பணி, விபரங்களே (Details) அதிகாரத்தின் வடிவம் என்று கருதிய இதழியலின் பழைய மரபைச் சேர்ந்தது.

அவரது கட்டுரைகள் பெயர்கள், இடங்கள், பிரிவுகள் மற்றும் மறக்கப்பட்ட சம்பவங்களை கிட்டத்தட்ட ஒரு கட்டாயத் துல்லியத்துடன் சேகரித்துப் பதிவு செய்தன. ஒரு தீவிரவாதக் குழுவைக் குறிப்பிடும்போது அதன் தோற்றப்பாட்டைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஒரு அரசியல் தலைவரைக் குறிப்பிடும்போது அவரது முந்தைய தொடர்புகளை குறிப்பிடாமல் கடக்க முடியாது. ஒரு மோதலை விவரிக்கும்போது அதன் முந்தைய துரோகங்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

 உள்நாட்டுப் போரின் ஆண்டுகளில், இந்த நுணுக்கமான விவரங்களே அவரது முதன்மை ஆயுதமாக மாறியது. விவரங்கள் நடுநிலையானவை என்பதால் அல்ல, மாறாக அவை கதையாடலின் எளிமைப்படுத்தலை எதிர்த்ததால்.

இலங்கையின் போர் பெரும்பாலும் பயங்கரவாதம், விடுதலை, பாதுகாப்பு, இறைமை ஆகிய அருவமான (abstractions) சொற்களாலேயே விவரிக்கப்பட்டது. இச்சொற்கள் போரின் உண்மையான தன்மையை அகற்றிவிட்டன. அவரது எழுத்துக்கள் அந்தத் தன்மையை மீண்டும் மீட்டெடுத்தன.

ஒரு இராணுவச் சோதனை நிலையம்  என்பது வெறுமனே ஒரு சோதனை நிலையம்  மட்டுமல்ல, அது பேச்சுவார்த்தை, பயம், தாமதம் மற்றும் அவமானத்தின் இடமாகவும் இருந்தது. ஒரு தீவிரவாதப் பிரிவு என்பது வெறுமனே சித்தாந்த ரீதியானது மட்டுமல்ல, அதில் தனிப்பட்ட பகைமை, உடைந்த நட்புகள், துரோகக் குற்றச்சாட்டுகள் மற்றும் அமைப்பின் உளவியலையே (Organisational Psychology)  மாற்றிய திடீர் மரணங்கள் ஆகியவை அடங்கியிருந்தன.

அவர் இந்த நுணுக்கமான தகவல்களின் மீது பிடிவாதமாக இருந்தார். ஏனெனில் அருவமான சொற்கள் ஏற்கனவே அரசியல் மயமாக்கப்பட்டிருந்தன.

அவரது முழுப் பணிக்கும் கீழாக ஒரு அறநெறிக்  கேள்வி ஓடிக்கொண்டிருக்கிறது. வன்முறையை, அதை மட்டமாக்கும் கண்டனமும் இல்லாமல், அல்லது அதை நியாயப்படுத்தும் அனுதாபமும் இல்லாமல் விவரிப்பது என்றால் அதன் அர்த்தம் என்ன?

அவர் இந்தக் கேள்விக்கு தீர்வு காணவில்லை. அவர் அதனுடன் வாழ்ந்தார்.

அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் அரசியல் வாசகர்கள் எதிர்பார்க்கும் உணர்ச்சிபூர்வமான குறுக்குவழிகளை மறுத்தன. இந்த மறுப்பு சில நேரங்களில் தெளிவின்மையாகப் புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால் அது ஒரு வகையான ஒழுக்கம். விவரிப்பு என்பது அறநெறிச் செயற்பாட்டுக்கு மாற்றாக இருக்கக் கூடாது என்ற நம்பிக்கை. இந்த ஒழுக்கத்திற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. அது அனைத்துத் தரப்பிலிருந்தும் விமர்சனங்களுக்கு அவரை ஆளாக்கியது. 

ஆனால், பல தசாப்த கால மாற்றமடையும் அரசியல் கதையாடல்களுக்கு மத்தியிலும், அது அவரது படைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட நிலையான தன்மையைப் பாதுகாத்தது.

இந்த முறை பெரும்பாலும் அளவுக்கு அதிகமானதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அந்த அதிகப்படியான விவரங்களே வாதத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 

இலங்கை என்பது ஒரு எளிமையான கதையல்ல. அது ஒன்றுக்கொன்று தீர்க்கப்படாத, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட கதைகளின் தொடர்ச்சி.

மறதி என்பது பிறரால் திணிக்கப்படும் ஓர் அரசியல் செயல் என்பதைப் போல அவர் எழுதினார். இந்த வகையில், அவரது இதழியல் வெறும் விவரிப்பு மட்டுமல்ல, அது ஒரு பாதுகாப்பும் கூட (preservative).

நிலைப்பாட்டின் சிக்கலான தன்மை 

டி.பி.எஸ். தமிழ் அரசியல் ஆசைகளின் உணர்ச்சிபூர்வமான மொழியை உள்வாங்கிப் புரிந்துகொண்டார். இருப்பினும் அவர் அதன் சித்தாந்தப் பிடிவாதங்களுக்குப் பலியாகவில்லை. இலங்கை அரசின் தர்க்கத்தை அவர் புரிந்துகொண்டார், அதேவேளை, அதைத் சுயமாகவே தார்மீக ரீதியாக நியாயமான ஒன்றாக அவர் கருதவில்லை. இந்த இரட்டை விழிப்புணர்வு அனைத்துத் தரப்பு வாசகர்களிடையேயும் அசௌகரியத்தை உருவாக்கியது.

சிங்கள தேசியவாத வாசகர்கள் பெரும்பாலும் தமிழ் தீவிரவாதத்துடன் டி.பி.எஸ். மிகவும் நெருக்கமாக இருப்பதாகக் கருதி அவரை நம்ப மறுத்தனர். தமிழ் அரசியல் நினைவின் சில பகுதிகள் அவரைத் தங்களது வீரக் கதையுடன் போதியளவு ஒத்துப்போகவில்லை எனக் கருதின. 

கல்விசார் பார்வையாளர்கள் சில சமயங்களில் பகுப்பாய்வு ரீதியான இடைவெளியைப் பேணுவதற்கு அவர் தனது தகவல் மூலங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதாகக் கருதினர். ஆனால், அந்த விலகி நிற்கும் இடைவெளி ஒருபோதும் அவரது நோக்கமாக இருந்ததில்லை. நிகழ்வுகளுக்கு அருகாமையில் இருப்பதே உண்மையின் ஒரு வடிவம் என்று நம்பிய ஒரு தலைமுறையைச் சேர்ந்தவராக அவர் இருந்தார்.

தோல்விகளின் தொடர்கதையாக ஒரு தீவு

அவரது படைப்புகளை முழுமையாக வாசிக்கும்போது, மீண்டும் மீண்டும் வெளிப்படும் ஒரு கட்டமைப்பைக் காண முடிகிறது. சாத்தியக் கூறுகள் சில கணங்கள் தோன்றுகின்றன. பின்னர் கரைந்துபோகின்றன. பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன, பின்னர் முறிவடைகின்றன. அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன, ஆனால் அவை தங்கள் அர்த்தத்தை இழக்கும் வரை தவறாக வியாக்கியானம் செய்யப்படுகின்றன. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, இலங்கை என்பது ஒரு தேசத்தை விடவும், இடைநிறுத்தப்பட்ட முயற்சிகளின் அமைப்பாகவே தோன்றுகிறது.

இங்குள்ள துயரம் வன்முறை மட்டுமே அல்ல; மிதவாதம் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதில் மீண்டும் மீண்டும் அடைந்த தோல்வியும்தான். மிதவாதத் தமிழ் அரசியல், ஓரங்கட்டப்பட்டதாலும் படுகொலைகளாலும் மறைந்துபோனது. பெரும்பான்மைவாதத்தின் எதிர்பார்ப்பு அழுத்தத்தால் தாராளவாதச் சிங்கள அரசியல் பலவீனமடைந்தது. இவ்விரண்டிற்கும் இடையே, தீவிரவாதமும் பாதுகாப்பு அரசு (Security state) அமைப்பும் உருவான வெற்றிடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. அவை ஒன்றை ஒன்று பிரதிபலித்தன. 

டி. பி.எஸ். இந்த மாற்றத்தை வெறும் பத்திரிகையாளரின் அவதானிப்பாக அல்லாமல், ஒரு தொடர் நிகழ்வாகப் பதிவு செய்தார்.

காணாமல்போன நடுத்தர வர்க்கம்

இலங்கைச் சமூகத்தின் ஸ்திரத்தன்மைக்குரிய அடுக்காகத் தன்னை நினைத்துக் கொண்ட, இருமொழிப் புலமையும் நிறுவனச் சார்பும் கொண்ட தமிழ் நடுத்தர வர்க்கத்தின் மறைவு என்பது அவரது எழுத்துக்களில் காணப்படும் அமைதியான கருப்பொருள்களில் ஒன்றாகும். இந்த வர்க்கம் நிர்வாகத் தொடர்ச்சியை நம்பியது. சர்ச்சைகளை நடைமுறைகள் மூலம் தீர்க்க முடியும் என்று நம்பியது. கல்வி என்பது சமூகங்களிடையே ஒரு பொதுவான உரையாடலை உருவாக்குகிறது என்று நம்பியது. சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியலுடன் ஏற்பட்ட மோதலில் அந்த நம்பிக்கை உயிர் பிழைக்கவில்லை.

அதற்கு பதிலாக வந்தது வெறும் பிளவு மட்டுமல்ல, இடைநிலையாளர்களின் பலவீனமும்தான். தலைசிறந்த அரசியல்வாதிகளின் மொழிகளுக்கு இடையேயுள்ள அர்த்தங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது. சந்தேகத்திற்கு இடமின்றி வெவ்வேறு உலகங்களுக்கு இடையே செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தன்னை உருவாக்கிய அந்த அமைப்பு சிதையத் தொடங்கிய பிறகும் எஞ்சியிருந்தவர்களில் டி.பி.எஸ். ஒருவராக இருந்தார்.

புலம்பெயர்வு வாழ்வும் நினைவுகளின் பாரமும்

கனடாவில் அவரது பிற்கால வாழ்க்கை, அவரது படைப்பின் தொனியை மாற்றியதே தவிர,  அதன் சாராம்சத்தை அல்ல. புலம்பெயர்வு பற்றுதலை  அழித்து விடாது; மாறாக அதை மறுசீரமைக்கிறது.

தூரமானது உடனடித் தன்மையை அகற்றுகிறது, ஆனால் நினைவூட்டலைத் தீவிரப்படுத்துகிறது. சில பிம்பங்கள் விகிதாசாரமின்றித் தெளிவாகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தெரு, கொழும்பில் உள்ள ஒரு செய்தி அறையின் உரையாடல், ஒரு சிறிய கூட்டத்தில் மீண்டும் மீண்டும் கூறப்பட்ட ஓர் அரசியல் வதந்தி, ஊரடங்கு உத்தரவு அறிவிப்புகளின் ஒலி. இந்தத் துண்டுகள் புலம்பெயர் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் வருகின்றன, அவை ஏக்கத்தின் வெளிப்பாடாக அல்ல, மாறாகத் தீர்க்கப்படாதப பொருளாக. 

கடந்த காலம் முழுமையடையாமல் இருப்பதைப் போல டி.பி.எஸ். எழுதினார்.

நீண்டகால மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களிடையே இது ஒரு பொதுவான நிலைமையாகும். நிகழ்காலம் தன் அதிகாரத்தை இழக்கிறது. கடந்த காலம் மட்டுமே ஒத்திசைவுக்கான ஒரே கிடைக்கக்கூடிய கட்டமைப்பாக மாறுகிறது.

கனடாவில் அவரது இறப்பு, பல தசாப்தங்களாக வெளிப்பட்டு வந்த ஒரு புவியியல் வளைவை (Geographical arc) மூடுகிறது. இலங்கை ஒரு குறிப்பிட்ட வகையான அறிவுசார் பாதையை உருவாக்குகிறது. தீவிலிருந்து புலம்பெயர் சமூகத்திற்கு, உடனடித் தன்மையிலிருந்து கடந்த காலக் கூற்றிற்கு, பங்கேற்பிலிருந்து அவதானிப்பிற்கு. டி.பி.எஸ். இந்த பாதையை ஒரு சுயசரிதையாக மாற்றாமல் பின்பற்றி வந்தார். 

கனடாவிலும் கூட, அவருடைய பொருள் மாறவில்லை; தூரம் மட்டுமே மாறியது. புலம்பெயர்வைப் பற்றி எழுதுபவரைக் காட்டிலும், அவர் எப்போதும் இலங்கையைப் பற்றி எழுதுபவராகவே இருந்தார்.

ஆவணக் காப்பகமும் தீவும்

இப்போது அவரிடமிருந்து எஞ்சியிருப்பது ஒரு விவரிக்க முடியாத அடர்த்தி கொண்ட ஆவணக்காப்பகம். நினைவாற்றல் குறித்த இலங்கையின் தொடர்ச்சியான சர்ச்சைகளில் வாசகரின் நிலையைப் பொறுத்து இது பல்வேறு வழிகளில் வாசிக்கப்படும்.

சிலருக்கு, இது சாட்சியமாகச் செயற்படும். வேறு சிலருக்கு, போட்டியிடும் விளக்கமாக. இன்னும் சிலருக்கு, அதிகப்படியான ஆவணமாக. ஆனால் இந்த வாசிப்புகளுக்கு அடியில் ஒரு எளிமையான உண்மை உள்ளது. அவரது படைப்பு, பெரும்பாலும் மறைந்துவிட்ட ஓர் அரசியல் உலகின் இயல்பைப் பாதுகாக்கிறது. அதிகாரப்பூர்வமான கதைகளை அல்ல, மாறாகத் தன் இறுதி வடிவத்தை அறியாமல் மோதல்களின் வழியே நகர்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு சமூகத்தின் வாழ்வியல் சிக்கல்களை அது பதிவு செய்கிறது.

இலங்கை தன்னைப் பற்றிய புதிய வரலாறுகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. முடிவுகள் இன்னும் நிச்சயமற்று, அடையாளங்கள் இன்னும் முழுமையாக உருவாகாத ஒரு முந்தைய கட்டத்தை அவரது எழுத்து பதிவு செய்கிறது. டி.பி.எஸ்.ஸின் இறப்பு இத்துடன் முற்றுப் புள்ளியைக் குறிக்கிறது என்று முடிவு செய்வது எளிது. ஆனால் அது உண்மையல்ல.

இலங்கை அரிதாகவே முற்றுப்புள்ளியை அனுமதிக்கிறது. அதன் மோதல்கள் அவற்றின் பாத்திரங்களை விடக் கூடுதல் காலம் வாழ முற்படுகின்றன. 

மேலும் அதன் கதைகள், அவற்றின் எழுத்தாளர்கள் அமைதியான பிறகும் தொடர்கின்றன. அந்த வகையில், டி.பி.எஸ். ஒரு நபராக அல்லாமல் நினைவுகூரும் ஒரு முறைமையாக இன்றும் தொடர்கிறார். நிகழ்வுகள் எளிமைப்படுத்தப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப விவரிக்கப்பட வேண்டும் என்றும், வரலாறு சுலோகமாகச் சுருக்கப்படாமல் விரிவாகக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், உடைந்த அரசியல் வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதற்கு விளக்கம் தேவை என்றும் அவர் பல தசாப்தங்களாக வலியுறுத்தினார்.

அந்த வலியுறுத்தல் இப்போது அவருக்குப் பிறகும் நிலைத்து நிற்கிறது.

இவ்வாறாக, இலங்கைத் தீவு அதன்  முடிவடையாத கதையின் சாட்சிகளை வழக்கம்போலத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

(ரூபன் துரைராஜா பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் ஒரு பொது நல மருத்துவர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது திருத்தமும் ஜனாதிபதியின் நிலைப்பாடும்

2026-08-16 16:26:43
news-image

பூர்வீக தேசியத்தின் ஓயாத நகர்வுகள்

2026-08-16 16:26:14
news-image

இலங்கை முப்படைகளின் மறுசீரமைப்பு

2026-08-16 16:17:20
news-image

வரி திரட்டலைத் தாண்டி: சூரிய சக்தி...

2026-08-16 15:33:42
news-image

காஸா­வுக்கு அப்பால்: மேற்குக் கரையில் சத்­த­மின்றி...

2026-08-16 15:23:46
news-image

450 மில்லியன் அரபு மக்களை விடுவிக்க...

2026-08-16 15:18:50
news-image

இனவாதம் ஓயாத பூமி

2026-08-16 09:03:27
news-image

மரண தண்டனை தீர்ப்பும் பயமுறுத்தல்களும்

2026-08-16 08:58:33
news-image

சமூகங்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் கவனம்...

2026-08-16 08:58:11
news-image

கேள்விக்குறியாகும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் எதிர்காலம்

2026-08-16 08:57:56
news-image

கல்முனை விவகாரம்: முஸ்லிம்களின் ஆடை சர்ச்சை...

2026-08-16 08:57:23
news-image

தேர்தலை தட்டிக்கழிக்கும் அரசாங்கம்

2026-08-16 08:36:26