வாக்குறுதியளித்த அரசியல் கலாசாரத்தை அரசு கடைப்பிடிக்க வேண்டும் – முஜிபுர் ரஹ்மான் 

21 Jul, 2026 | 05:20 PM
image

(செ.கவிஷனா)

அரசாங்கத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அதற்குப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலகும் அரசியல் பண்பாட்டை தற்போதைய அரசாங்கம் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியபோது மக்களுக்கு வாக்குறுதியளித்த புதிய அரசியல் கலாசாரத்துக்கு முன்மாதிரியாக, அரசாங்கத்தில் அசம்பாவிதங்கள் நிகழும்போது அதற்குப் பொறுப்பேற்று அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகும் பண்பை தற்போதைய அமைச்சர்கள் வெளிப்படுத்த வேண்டும். 

கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் மத்திய வங்கி விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததையும், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் எழுந்த சந்தேகங்களை அடுத்து விசாரணைகளுக்காக ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்கள் தற்காலிகமாகப் பதவிகளைத் துறந்ததையும் நினைவுகொள்ள வேண்டும்.

இதேவேளை, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் போது நூற்றுக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்ட போது, அன்றைய பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகக் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படாததற்குக் காரணம், அன்று பாராளுமன்றத்தில் தம்மிடம் அதற்குரிய பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்காமையேயாகும். எனினும், பாராளுமன்ற விவாதங்களின்போது அவர் மீதே முழுக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. எனவே, தற்போதைய அரசாங்கம் வெறும் வாய்வார்த்தையாகப் பொறுப்பேற்பதாகக் கூறாமல், நடைமுறையில் பதவி விலகி வாக்குறுதியளித்த புதிய அரசியல் பண்பாட்டை நிரூபிக்க வேண்டும்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள முதன்மைச் சூத்திரதாரிகளையும், தாக்குதலை நடத்திய சஹ்ரான் குழுவுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பின்னணி ஆதரவுகளை வழங்கியவர்களையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவது மிக அத்தியாவசியமானது என்பதில் தமது கட்சி உறுதியாக இருக்கிறது. 2015 முதல் 2019 வரையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பக் கட்டத்தில், தாஜுதீனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் அது படுகொலைதான் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதுடன், லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் சந்தேக நபர்களை அடையாளம் காண்பது வரை பல நேர்மறையான முன்னேற்றங்கள் காணப்பட்டன. 

அன்றைய அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்கள் அனைவரும் இவ்விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் ஒரே குரலாக நின்றபோதிலும், 2018ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளும், அதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மையுமே இவ்விசாரணைகள் பாதியிலேயே முடங்கிப்போனதற்கு முதன்மையான காரணங்களாகும்.

மேலும், நாட்டில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் குற்றங்களுக்கான விசாரணைகளின் முடிவுகளும் மாறுபடுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் அரசாங்கமும் பொலிஸாரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாக இயங்கத் தவறுவதே இத்தகைய நிலைக்குக் காரணம். அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் தேவைகளுக்காக அரச நிறுவனங்களைப் பயன்படுத்துவது நாட்டின் எதிர்காலத்திற்கும் ஜனநாயகப் பண்பாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

இதேவேளை, அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் குறித்து 74.9 சதவீதமானோர் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், 29.4 சதவீதமானோர் மட்டுமே திருப்தி வெளியிட்டுள்ளனர். 

குறித்த ஆய்வானது ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தால் மிகச் சிறிய அளவிலான மாதிரியைக் கொண்டு நடத்தப்பட்ட ஒன்றாகும். இருப்பினும், நாட்டில் நிலவும் உண்மையான அரசியல் நிலவரத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ளும் பொருட்டு, தமது கட்சி சார்பிலும் தனியாக ஒரு பரந்த கருத்துக்கணிப்பை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகள் கட்சியின் பொதுச் செயலாளரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இக்கருத்துக்கணிப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் குறித்து 75.5 சதவீதமானோர் திருப்தியை வெளியிட்டுள்ளனர். இத்தரவுகளை அரசாங்கம் உண்மையென ஏற்றுக் கொண்டால், தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த முன்வர வேண்டும். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான ஆதரவும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் சூழலில், தேர்தலை உடனடியாக நடத்தி மக்களின் உண்மையான தீர்ப்பைப் பார்க்க வேண்டும்.

இறுதியாக, கடந்த காலத் தேர்தல்களில் கட்சி அடைந்த பின்னடைவுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மட்டும் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்க முடியாது, கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அந்தப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். 

தற்போதைய அரசியல் சூழலில் சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு வலுவான கூட்டமைப்பாகச் செயற்பட வேண்டும் என்ற சமூகப் பேச்சும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள நிலையில், சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டுவதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அது விரைவில் நேர்மறையான முடிவை எட்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50