பெப்­ர­வரி மாதம் நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்­கையின் சுதந்­திர தினத்தை பகிஷ்­க­ரிப்போம் என வட மாகாண காணாமல் போனோரை தேடும் உற­வி­னர்கள் அமைப்பு நேற்று தீர்­மானம் எடுத்­துள்­ளது. அத்­தோடு காணாமல் போனோர் தொடர்பில் பிர­தமர் மற்றும் சுகா­தார அமைச்­சரின் கருத்­துக்­க­ளையும் வன்­மை­யாக கண்­டிப்­ப­தா­கவும் இவ்­வ­மைப்­பு தெரி­வித்­துள்­ளது.

நேற்று வியா­ழக்­கி­ழமை கிளி­நொச்சி கூட்­டு­ற­வாளர் மண்­ட­பத்தில் இடம்­பெற்ற யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு மாவட்­டங்­களைச் சேர்ந்த காணாமல் போன உற­வி­னர்­களின் அமைப்பு மற்றும் மன்னார் பிர­ஜைகள் குழு, ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­தி­களின் சந்­திப்பின் போதே இந்த தீர்­மானம் எடுக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட பிர­ஜைகள் குழுவின் தலைவர் அருட்­தந்தை செப­மாலை தெரி­வித்­தார்.

அத்­தோடு தாங்கள் மேலும் சில தீர்­மா­னங்­களை எடுத்துள்­ள­தா­கவும் அருட்­தந்தை குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காணாமல் போன­வர்கள் இறந்து விட்­ட­தாக நாட்டின் பிர­தமர் தெரி­வித்த கருத்தை வன்­மை­யாக கண்­டிக்­கிறோம், அப்­படி இறந்­தி­ருந்தால் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த, ஒப்­ப­டைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்­தது அவர்கள் எவ்­வாறு இறந்­தார்கள், மற்றும் முகாம்­க­ளிலும், வீடு­க­ளிலும் வைத்து கடத்திச் செல்­லப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது அவ்­வாறு அவர்கள் இறந்­தி­ருந்தால் அதற்கு கார­ண­மா­ன­வர்கள் யார்? அதற்­கான நட­வ­டிக்கை என்ன? பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதி என்ன? போன்ற பல்­வேறு கேள்­விகள் காணாமல் போனோரை தேடும் உற­வுகள் மத்­தியில் காணப்­ப­டு­கி­றது.

மேலும் காணாமல் போன­வர்­க­ளுக்கு இறப்புச் சான்­றிதழ் வழங்­கப்­ப­டு­வ­தற்கு ஏற்­பாடு செய்­வ­தாக சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­தி­னவின் கருத்­தையும் காணாமல் போனோரை தேடும் உற­வி­னர்கள் அமைப்பு கண்­டிக்­கி­றது. காணாமல் போன உற­வு­க­ளுக்கு எந்த நீதியும் கிடைக்­காது இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை நாங்கள் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என்றார்.

இதேவேளை, பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் கால நீடிப்பை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என்றும் அந்த ஆணைக்­கு­ழுவை உட­ன­டி­யாக கலைத்­து­விட்டு சர்­வ­தேச செஞ்­சி­லுவை சங்­கத்தின் பங்­க­ளிப்­புடன் காணாமல் போன­வர்­களின் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் எனவும் வட மாகாண காணாமல் போனோரை தேடும் உற­வி­னர்கள் அமைப்பு தீர்­மா­னித்­துள்­ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்பைச் சேர்ந்த தலைவர், செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.