(இராஜதுரை ஹஷான்)
“சபாநாயகர் தொடர்பான இரகசிய தகவல்கள் ஊடகங்களில் வெளியானமை குறித்த விசாரணை அறிக்கை” என்று தலைப்பிடப்பட்டு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தால் சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சபாநாயகருக்கு எதிராக 10 ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சபாநாயகரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில விடயங்களை பகிரங்கப்படுத்தப் போவதில்லை. ஏனெனில், அது ஒழுக்கக்கேடானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு பணிப்புரை விடுத்தார்.அதற்கமைய கடந்த ஆண்டு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணை அறிக்கையை பாராளுமன்ற செயலாளர் நாயகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.ஆனால் சபாநாயகர் அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவில்லை. அறிக்கையை பெட்கத்தில் போட்டு பூட்டி வைத்துக் கொண்டுள்ளார்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் அந்த அறிக்கையை கோரி பாராளுமன்றத்துக்கு விண்ணப்பித்தேன். இருப்பினும் சபாநாயகரின் அனுமதியில்லாமல் அந்த அறிக்கையை வெளிப்படுத்த முடியாது என பாராளுமன்ற தகவல் பிரிவு உத்தியோகத்தர் எனக்கு எழுத்துமூலமாக பதிலளித்தார். இந்த தீர்மானத்தை தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்துள்ளேன். ஆனால் இதுவரையில் ஆணைக்குழு துரிதகரமாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் பாராளுமன்றத்தில் சபாநாயகரால் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அறிக்கை தற்போது என் கைக்கு கிடைத்துள்ளது. தபால்மூலமாகவே இந்த அறிக்கை எனக்கு கிடைத்தது. அறிக்கை எவ்வாறு கிடைத்தது என்று சபாநாயகர் ஆராய்ந்து விசாரணை செய்தால் அது மக்கள் விடுதலை முன்னணிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் பாரியதொரு முரண்பாட்டையும் பிளவையும் ஏற்படுத்தும்.
'சபாநாயகர் தொடர்பான இரகசிய தகவல்கள் ஊடகங்களில் வெளியானமை தொடர்பான விசாரணை அறிக்கை' என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையில் சபாநாயகருக்கு எதிராக 10 ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த குற்றச்சாட்டுக்கள் வருமாறு,
தாபன விதிக்கோவையின் பிரகாரம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய மூன்று பிரதான பதவிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை தமது சுய விருப்பத்துக்கு அமைய மாற்றியமைக்க முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தரமுல்லை பகுதியில் மக்கள் வரிப்பணத்தில் சபாநாயகரின் வாசஸ்தலம் பராமரிக்கப்படுகின்ற நிலையில், சபாநாயகர், லோரிஸ் மாவத்தையில் பிறிதொரு இல்லத்தில் வசிக்கிறார். இதற்கும் மக்களின் வரி பணம் செலவழிக்கப்படுகிறது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு என்று சபாநாயகரினால் 8 பணிக்குழாம் சேவையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் வாசஸ்தலத்தில் சேவையாற்றுவதில்லை. ஆனால் இந்த 8 பேருக்கும் மாதாந்தம் சம்பளம் வழங்குவதற்காக குறைந்தபட்சமாக 7 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா ஒதுக்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற இரண்டு அரச உத்தியோகத்தர்கள் சபாநாயகரின் தனிப்பட்ட பணிக்குழாமின் சேவையாளர்களாக சபாநாயகரால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒருவர் 73 வயதுடைய ரூம் போய், இன்னொருவர் 63 வயதுடைய வாசஸ்தல பூங்கா பராமரிப்பாளர்.
அமைச்சரவை அனுமதி இல்லாமல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை ஆராய்ச்சி மையமாக மாற்றுவதற்கு சபாநாயகர் தீர்மானம் எடுத்துள்ளார். இது தாபன விதிக்கோவைக்கு முற்றிலும் விரோதமானது. சபாநாயகர் தற்போது வசிக்கும் லோரிஸ் மாவத்தையில் உள்ள இல்லத்துக்கு அருகில் அவரது தனிப்பட்ட செயலாளருக்கு அரச செலவில் இல்லம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் தனிப்பட்ட இல்லத்தில் பொருந்தப்பட்டிருந்த குளிரூட்டி இயந்திரம் பழுதானவுடன், பாராளுமன்ற உத்தியோகத்தர்களை கொண்டு அந்த குளிரூட்டி இயந்திரம் திருப்பட்டுள்ளது. சபாநாயகரின் ஊடக பிரிவு என்று ஒன்று இல்லை. ஆனால் இல்லாத ஒரு ஊடக பிரிவுக்காக பாராளுமன்றத்தின் ஊடாக ஒரு வேனும், இரண்டு கெமராக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடு தொடர்பில் பாராளுமன்ற முன்னாள் பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அந்த முறைப்பாட்டை தொடர்ந்து கலக்கமடைந்த சபாநாயகர் அமைச்சரவை அனுமதியுடன் இந்த ஊடக பிரிவை அங்கீகரிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நிதியமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த திணைக்களமும் மறுப்பு தெரிவித்துள்ளது. மூன்றாவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளரும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபாநாயகர் பதவிக்கான எரிபொருள் மானியத்தையும், பாராளுமன்ற உறுப்பினருக்கான எரிபொருள் மானியத்தையும் பெற்றுக்கொள்கிறார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில விடயங்களை நான் பகிரங்கப்படுத்தப் போவதில்லை. ஏனெனில் சமூக ஒழுக்கத்தை பேணவேண்டிய பொறுப்பு எமக்கும் உண்டு. அவ்வாறு வெளிப்படுத்தினால் சபாநாயகர் இல்லத்தின் முன்பாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படும்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலஞ்ச ஊழல் திணைக்களம் சபாநாயகரை கைது செய்து பொதுச்சொத்து துஷ்பிரயோகம் சட்டத்தின் பிரகாரம் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்.
இந்த அறிக்கையை எதிர்வரும் வாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவுள்ளோம். பதவியில் இருக்கும்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM