தமிழ்ப் பேசும் மக்களின் பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு 6 கட்சிகளின் தலைவர்கள் உடன்பாடு கண்டுள்ளனர். தமிழ்ப்பேசும் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இணக்கப்பாட்டை எட்டியுள்ளன.
கொழும்பில் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை 6 தமிழ்ப் பேசும் கட்சிகளின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தமக்குள்ளான இணக்கப்பாடு குறித்து அறிவித்திருந்தனர்.
அதியுச்ச பகிர்வுக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாண சபைத் தேர்தல் மற்றும் சகல இனத்தவர்களும் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முதற்கட்டமாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கத்திடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைப்பதற்கும், இதன்போது, காணப்படும் அடிப்படைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு பொறிமுறையொன்றை வகுப்பதற்கும் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது கொள்கை, அரசியல் நிலைப்பாடுகளை தனித்தனியாகப் பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக் கொண்ட இந்தக் கட்சிகளின் தலைவர்கள், பொதுவான விடயங்களை இனங்கண்டு, சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தளமாக இந்த இணக்கப்பாடு அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப்பேசும் 6 கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கும் தீர்மானித்துள்ள விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். இந்த உடன்பாட்டுக்கான பின்னணி தொடர்பிலும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தமிழ்ப் பேசும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் செயற்பட முன்வந்தமை தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“நாட்டில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட 6 பிரதான கட்சிகள் உடன்பாடுகளை எட்டியுள்ளமை மற்றும் எதிர்க்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் என்பன அரசாங்கத்தின் பலவீனத்தால் உருவானவையல்ல. எதிர்க்கட்சியினரை ஒன்றிணைத்து வழிநடத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும். இந்தக் கூட்டு முயற்சியின் பின்னணியில் அரசாங்கத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
தமிழ்ப்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு வழங்காது என்றோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பலை உருவாகியதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைகிறார்கள் என்றோ கூறுவது முற்றிலும் தவறான கருத்தாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோன்றே இந்தக் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் கருத்து கூறியிருந்தார். “எத்தனைக் கூட்டணிகளை அமைத்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி என்பது வெறும் கூட்டு சாம்பாராக மாறும். இந்தக் கூட்டணியில் கூடியிருக்கின்ற தமிழ் கட்சிகள் என்றாலும் சரி, முஸ்லிம் கட்சிகள் என்றாலும் சரி அவர்களுடைய பட்டியலை திறந்து பாருங்கள். அனைவரும் குற்றவாளிகள். அனைவருமே இன்றைக்கு தங்களுடைய கடந்தகால வரலாற்றின் ஊடாக குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள்தான். நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு இன்றைக்கு பிணையில் இருக்கின்றவர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர். அவ்வாறு பிணையில் இருக்கின்றவர்களுக்கு நாளை கம்பி எண்ணுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அதனால்தான், சிறைக்கு செல்வதற்கு முதல் எதையாவது செய்து இந்த அரசாங்கத்தை வீழ்த்தலாமா அல்லது அரசாங்கத்தை மாற்றலாமா என்ற முயற்சியில் ஈடுபடுகின்ற ஒரு போக்காகவே இதனை காணக்கூடியதாக உள்ளது” என்றும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறு, தமிழ்ப்பேசும் கட்சிகளின் ஒன்றிணைவை அரசாங்கமானது வெவ்வேறு கோணங்களில் விமர்சித்து வருகின்றது.
தற்போதைய நிலையில் தமிழ்ப்பேசும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது.
இதேபோன்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்றும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் இதற்கான செயற்பாடு மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்துக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவோம் என்றும் தேசிய மக்கள் சக்தி கூறியிருந்தது. தற்போது இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகின்ற போதிலும் தமிழ்ப்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியை முன்னெடுப்பது தொடர்பிலோ அரசியல் தீர்வு குறித்தோ பேசுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக இல்லை.
இந்த நிலைமையில் தமிழ், முஸ்லிம் மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி பொதுவான நிலைப்பாட்டை எட்டுவதற்கான களத்தினை 6 தமிழ்ப் பேசும் கட்சிகள் உருவாக்கியுள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடேயாகும்.
நாட்டில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமானால் சிறுபான்மையின மக்களான தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே இந்த விடயத்தில் இணக்கப்பாடு ஏற்பட வேண்டியதும் அவசியமாகும்.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே அரசியல் தீர்வு விடயத்தில் ஒற்றுமை என்பது அத்தியாவசியமானதாகும்.
இனிமேல் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்று வரும் போது தமிழ், முஸ்லிம் மக்களிடையே இணக்கப்பாடு என்பது தேவையானதாகும். தந்தை செல்வா காலத்திலிருந்து முஸ்லிம் மக்களின் உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியே வந்திருக்கின்றனர். மூன்று தசாப்தகால யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே திட்டமிட்ட வகையில் முரண்பாடுகள் வளர்க்கப்பட்டன. தற்போதும் கூட கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினை, எல்லைப் பிரச்சினை என்று பல்வேறு பிரச்சினைகள் இரு சமூகங்களிடையேயும் காணப்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்ப்பேசும் கட்சிகளின் தலைமைகள் தற்போது பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளமை இத்தகைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன்னேற்பாடாக நிச்சயமாக அமையும்.
அதேபோன்று அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்பு உருவாக்கம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் இந்த தமிழ்ப் பேசும் அரசியல் கட்சியினர் உந்து சக்தியுடன் ஒன்றிணைந்து செயற்படுவது சிறுபான்மை மக்களுக்கு ஏதோவொரு வகையில் நன்மையாகவே அமையும்.
மலையக மக்களது பிரச்சினைகள் தொடர்பிலும் வெளிக்கொண்டுவந்து அவற்றுக்கான தீர்வுகளை தேடுவதற்கு இந்த கூட்டணி நல்லதொரு சந்தர்ப்பமாகவே அமையும்.
தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கு மலையகத்தைப் பொறுத்தவரையில் சிங்கள, பெளத்த பேரினவாதிகளின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் அத்தகைய செயற்பாட்டில் ஈடுபடுகின்றமை வரலாறாகவே மாறியிருக்கின்றது. எனவே, அத்தகைய ஆதிக்கக் கட்டுப் பாடுகளை தகர்ந்தெறிய வேண்டுமானால் தமிழ்ப் பேசும் கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்து ஓரணியில் செயற்பட வேண்டும்.தற்போது உடன்பாடு கண்டுள்ள 6 கட்சிகளுடன் ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெற வேண்டியது அவசியமாகவுள்ளது.
மொத்தத்தில், தமிழ்ப் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு என்பது தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை ஈடேற்றுவதற்கான கருப்பொருளாக அமைய வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM