நீரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்களின் சாப்பாட்டு ஆசையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். பலர் பலவகையினதான இனிப்புகள், சொக்லேட்டுகள் சாப்பிட்டாலும் இவர்கள் அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்ப்பார்களேத் தவிர அதனை தொடக்கூட மாட்டார்கள். ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல இதய பாதிப்புள்ள  நோயாளிகளும் சொக்லெட்டை சாப்பிடலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த சொக்லேட் பால் கலக்காத டார்க் சொக்லேட் வகையினதாக இருக்கவேண்டும்.

அது என்ன டார்க் சொக்லேட் என்று கேட்கிறீர்களா..? பால் கலக்காத சொக்லேட்டுகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு கிடையாது. இவ்வகையினதான சொக்லேட்டுகளில் 70 சதவீத அளவிற்கு கோகோ என்ற பொருள் இருப்பதால் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்காது. அதற்காக தினமும் அதிகளவிலான டார்க் சொக்லேட்டுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அமிர்தமேயானால் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகிவிடும் அல்லவா.?

டார்க் சொக்லேட் சாப்பிடுவதால் தோலில் எங்கேனும் வீக்கங்கள் இருந்தால் அதனை குறைய உதவுகிறது. புற்றுநோய் மற்றும் டிமென்ஸியா எனப்படும் நோயை வராமல் பாதுகாக்கிறது. மன அழுத்தத்தையும், இதய பாதிப்பையும் தடுத்து ஆரோக்கியமாக இயங்க உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் இதனை சுவைக்கலாம். உடலில் உள்ள கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.  அதனால் இனிமேல் சொக்லேட் சாப்பிட ஆசை ஏற்பட்டால், பால் கலக்காத டார்க் சொக்லேட்டை சுவைக்கலாம்.

டொக்டர் பத்மா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்