கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச மருத்துவ நடவடிக்கைகளை உடனடியாக விரிவுபடுத்துமாறு எல்லைகளற்ற மருத்துவர்கள் அவசர கோரிக்கை

17 Jul, 2026 | 12:33 PM
image

( வீ. பிரியதர்சன் )

கொகாங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா நோய் பரவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் சர்வதேச மருத்துவ நடவடிக்கைகளை உடனடியாக விரிவுபடுத்த வேண்டுமென எல்லைகளற்ற மருத்துவர்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, எபோலா தொற்றால் 2,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 750-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, நோய் பரவலின் மையப்பகுதியாக விளங்கும் இட்டூரி (Ituri) மாகாணத்தில் மட்டும் மொத்த தொற்றுகளில் சுமார் 90 சதவீதம் பதிவாகியுள்ளது.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் அவசரகால திட்டமிடல் முகாமையாளர் ட்ரிஷ் நியூபோர்ட் கூறுகையில், "ஒவ்வொரு தாமதமும் மேலும் பல உயிர்களை காவுகொள்கிறது. தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்பாக அது வேகமாக பரவி வருகிறது. இதை சமாளிக்க வலுவான மற்றும் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கை அவசியம்," என்றார்.

Bundibugyo வகை வைரஸால் ஏற்பட்டுள்ள இந்த எபோலா பரவல், இரண்டு மாதங்களுக்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய எபோலா பரவலாகவும், பதிவானவற்றில் மிக வேகமாக பரவிய தொற்றாகவும் மாறியுள்ளது.

கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 650 இலிருந்து 2,000-ஐ கடந்துள்ளது. உயிரிழப்புகளும் 130 இலிருந்து 700-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.

மருத்துவ சேவைகளை அணுகுவதில் உள்ள சிரமங்கள், நோயாளிகளை கண்காணிக்கும் அமைப்பின் மீதான அதிக அழுத்தம் மற்றும் சிகிச்சை மையங்களில் இடப்பற்றாக்குறை ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

புனியாவில் இயங்கும் 90 படுக்கைகள் கொண்ட Elikiya Ebola Treatment Centre பெரும்பாலும் முழு கொள்ளளவிலேயே இயங்குகிறது. இதனால் பல நோயாளிகள் வீட்டிலேயே காத்திருந்து, உடல்நிலை மிகவும் மோசமடைந்த பின்னரே மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவ திட்ட முகாமையாளர் வைத்தியர் அயோகுன்னு ராஜி கூறுகையில், "மோங்க்ப்வாலுவில் ஒவ்வொரு நாளும் தாமதத்தின் கொடிய விளைவுகளை நேரில் காண்கிறோம். எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு இதுவரை 57 பேரை குணப்படுத்தியிருந்தாலும், 110-க்கும் அதிகமான நோயாளிகளை இழந்துள்ளோம்," என்றார்.

தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சமூக மட்டத்தில் விழிப்புணர்வு, விரைவான பரிசோதனை, தொடர்புடையவர்களை அடையாளம் காணுதல், நோயாளிகளை தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான அடக்க நிகழ்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, எல்லை மூடல்கள், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் மனிதாபிமான பணியாளர்களின் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மருத்துவ உதவிகளை வழங்குவதில் சவால்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா பரவல் நடைபெறும் பகுதிகளில் ஆயுத மோதல்கள், மக்கள் இடம்பெயர்வு, கொலரா, மலேரியா உள்ளிட்ட பல்வேறு சுகாதார நெருக்கடிகளும் ஒரே நேரத்தில் நிலவி வருகின்றன. மேலும், மழைகாலம் நெருங்கி வருவதால் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு, இட்டூரி, வடக்கு கிவு, தெற்கு கிவு மற்றும் ட்ஷோபோ மாகாணங்களில் 7 எபோலா சிகிச்சை மையங்களையும், 15-க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தல் பிரிவுகளையும் நடத்தி வருகிறது. இவை மொத்தமாக 430-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை கொண்டுள்ளன.

தொற்று பரவல் ஆரம்பித்தது முதல் ஜூலை 14 வரை, எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுக்கள் 968-க்கும் மேற்பட்ட நோயாளிகளை அனுமதித்து சிகிச்சையளித்துள்ளன. இதில் 357 பேருக்கு எபோலா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

"தற்போதுள்ள குறைந்தளவான வளங்களுடன் இந்த தொற்றை கட்டுப்படுத்த முடியாது. நிலைமையின் தீவிரத்திற்கு ஏற்ப சர்வதேச மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்," என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08
news-image

இந்தியாவில் சோகம்: பீஹார் அசோக்தாம் கோவிலில்...

2026-08-17 11:35:34
news-image

ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து...

2026-08-16 17:04:23
news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40