அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள் கொந்தளிப்பு ஏற்படும் - முன்னணி சிவில் அமைப்பு எச்சரிக்கை !

15 Jul, 2026 | 07:30 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கு நீதித்துறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், இதன் காரணமாக நாட்டில் நீதியின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து சமூகத்தில் பாரிய கொந்தளிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் முன்னணி சிவில் அமைப்பு எச்சரித்துள்ளது.

இலங்கையின் முன்னணி சிவில் அமைப்பு உள்ளிட்ட சில சிவில் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (14) தலகொடுவ கார்டன்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னணி சிவில் அமைப்பின் பிரதம செயலாளர் வைத்தியர் செனெத் கஜசிங்க மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியின் சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கக்கூடாது. அது மக்கள் மத்தியில் தெளிவாகப் புலப்பட வேண்டும். 1920 ஆம் ஆண்டுகளில் இருந்து இங்கிலாந்தில் பின்பற்றப்பட்டு வரும் அடிப்படைத் தத்துவத்தின் பிரகாரம், நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாது, அது முறையாக வழங்கப்படுவதை மக்கள் கண்கூடாகக் காண்பது அவசியமாகும். இத்தகைய சூழல் சிதையும் போது, மக்கள் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழப்பார்கள். இது சமூகத்துக்கு தேவையற்ற கொந்தளிப்புகளுக்கும் பாரிய கிளர்ச்சிகளுக்கும் வித்திடும்.

தற்போதைய அரசாங்கம் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் தரப்பினர் முன்வைக்கும் யோசனைகள் குறித்து எமக்கு பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. சுமார் 10 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், 333 நீதிமன்றங்கள் மூலமாகவே நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்படுவதாகவும் அரசாங்கம் காரணங்களைக் கூறுகிறது.

இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்களும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்களும் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அதிகரிப்பதற்கான அவசரத் தேவை என்ன?

இந்த விடயம் தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு அஜித் மான்னப்பெரும தலைமையிலான பாராளுமன்றக் குழுவினால் ஆராயப்பட்டு, தீர்வுகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் அந்தப் பரிந்துரைகளை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு, அதற்குப் பொருத்தமற்ற புதிய யோசனைகளை முன்வைப்பது ஏன்?

கனடா, இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்படும்போது, அவை எதிர்கால நியமனங்களுக்குப் பொருந்தும் வகையிலேயே அமைகின்றனவே தவிர, பதவியில் இருப்பவர்களுக்குச் சாதகமாக அமைவதில்லை. ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனையானது, சில நீதிபதிகள் ஓய்வுபெறவிருக்கும் நிலையில் அவர்களுக்கே சாதகமாக அமையும் என்பதால், இது நீதித்துறையின் நம்பகத்தன்மையைச் சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.

சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம், சுதந்திரமான விசாரணை, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதிகாரப்பிரிவினை ஆகிய நான்கு முக்கிய தூண்கள் சட்டத்தின் ஆட்சியைத் தீர்மானிக்கின்றன. இதில், சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற தத்துவமும், விசாரணை முறைகளின் சுதந்திரமும் ஏற்கனவே மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சூழலில், அரசாங்கத்தின் இப்புதிய நகர்வுகள் எஞ்சியிருக்கும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மற்றும் அதிகாரப்பிரிவினைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

எனவே, மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்குமாயின், அது ஒட்டுமொத்த அரச சேவைக்கும் பொதுவான ஒரு கொள்கையாகவோ அல்லது எதிர்காலத்துக்குப் பயனளிக்கும் வகையிலோ அமைய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50
news-image

மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் அரசாங்கம்...

2026-08-19 02:19:58
news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21