சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா? ; உயர் அதிகாரிகள் மீது கூட்டு எதிர்க்கட்சி கேள்வி

Published By: Digital Desk 3

15 Jul, 2026 | 02:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், எம்.மனோசித்ரா)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை நிலவிய தருணத்தில், சிறைச்சாலை அதிகாரிகளின் உயிர்களை ஆபத்திற்குள்ளாக்கும் வகையில் அந்த அதிகாரிகளை வழிநடத்திய உயர் அதிகாரிகள் மறைமுக நோக்கத்துடன் செயற்பட்டுள்ளார்களாஎன்ற சந்தேகங்கள் எழுவதாக  கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம், இலங்கை சிறைச்சாலை வரலாற்றில் இடம்பெற்ற மிக பயங்கரமான சம்பவங்களில் ஒன்றாகும். இந்த சம்பவத்தில் இதுவரையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதில் 23 கைதிகளும் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவர்.

இந்த சம்பவம் தொடர்பில் நடுநிலையான மற்றும் முறையான விசாரணையொன்றை நடத்துவது இன்றியமையாததாகும். இதற்காக அண்மையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம்.

இருப்பினும் நேரடியான, உண்மையான மற்றும் முழுமையான விளக்கம் தேவை என்று நாம் கருதும் சில விடயங்கள் உள்ளன.

அதாவது, வன்முறை ஜூலை 5ஆம் திகதி ஆரம்பமானதுடன், அது இரண்டு மரணங்களுடன் முடிவுக்கு வந்தது. எவ்வாறாயினும், மாலை வேளையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்ததுடன், அப்போது அமைதியான சூழல் காணப்பட்டது.

நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய மிகத் தெளிவான நடவடிக்கை யாதெனில், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரான கைதிகளையும் சிறைச்சாலை அதிகாரிகளையும் ஒருவரிடமிருந்து ஒருவரைப் பிரிப்பதாகும். ஆனால் அது செய்யப்படவில்லை என்பதுடன், நாம் அறிந்த வரையில், இரவு முழுவதும் நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுப்பதில் சிறைச்சாலை அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 6ஆம் திகதி காலை கைதிகள் காலை உணவை உட்கொண்டிருந்த நேரத்தில், சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்று அவர்கள் இருக்கும் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவிய தருணத்தில், இந்த எதிர்பாராத நடவடிக்கை கைதிகளை தூண்டிவிடுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே தோன்றுகிறது. அதன் விளைவாக, அங்கு பல கொடூரமான கொலைகள் அரங்கேறின. இது ஒட்டுமொத்த கொடூரமான செயல்களின் உச்சக்கட்டமாகும்.

சிறைச்சாலை அதிகாரிகள் அங்குள்ள அதிகாரிகளின் உயிர்களை கடுமையான ஆபத்திற்குள்ளாக்கி  வழிநடத்திய அதிகாரிகளின் மறைமுக நோக்கம் என்ன என்பது குறித்து நியாயமான சந்தேகத்தை இது எழுப்புகிறது.

மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தபோது, சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கதவின் துவாரத்தினூடாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் பெருமளவிலான கைதிகள் காயமடைந்ததுடன் அல்லது உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் பிரயோகத்தை நியாயப்படுத்த முடியுமா அல்லது நிலைமையை முறையாகக் கையாண்டு, இதைவிடக் குறைவான பலத்தைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியிருக்க முடியுமா என்பது குறித்துக் கண்டறிவது அவசியமாகும்.

அத்துடன், ஜூலை 5ஆம் திகதி மாலை முதல் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதிலும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் கிடைக்கவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே பொலிஸார் தலையிடுவார்கள் என்றும், தலையிடுவதற்கான உத்தரவு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பொலிஸார், இந்தத் தீர்மானமிக்க தருணத்தில் தமக்கிருந்த அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறாமல், வெறும் வேடிக்கை பார்ப்பவர்களாக மாறிய துரதிஷ்டவசமான சூழ்நிலையை எதிர்கொண்டனர். இது எவ்வாறு நிகழ்ந்தது?

இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை, அங்குணகொளபெலஸ்ஸ மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு கைதிகளை மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கடுமையான அலட்சியப்போக்கு காணப்படுகிறது:

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கூறுவதன்படி, ஜூலை 7ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் கை, கால்கள் உடைந்து கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 21 கைதிகளுடன் வந்த பேருந்து வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனை வளாகத்தை வந்தடைந்தது. அவர்கள் பேருந்திற்குள்ளேயே அடைபட்டிருந்த நிலையில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் கடுமையாக இரத்தம் வடிந்து கொண்டிருந்த நிலையிலும், அவர்களுள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான ஒருவர் இருந்த நிலையிலும், அப்படியே கைவிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஜூலை 8ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து அதிஉயர் பாதுகாப்புடைய பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும் அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்ப்ட ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

அரசின் பொறுப்பில் உள்ள சிறைக்கைதிகள் மரணமடைவது என்பது இலங்கை அரசியலமைப்பின் 11ஆவது உறுப்புரை மட்டுமன்றி, சர்வதேச சட்டத்தின் கீழும் மிகவும் பாரதூரமானதொரு நிலைமையாகும்.

சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெருக்கடி காரணமாக அதிகாரிகள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும் மறந்துவிடக் கூடாது. தற்போது சிறைச்சாலைகளில் அவற்றின் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானோர் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் குற்றவாளியாகக் காணப்படாதவர்களாவர். இதன் விளைவாக, அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி' என்ற கோட்பாடு பெரும்பாலும் மீறப்படுகிறது. ஊழியர் பற்றாக்குறை மற்றும் போதிய வசதிகள் இன்றி தவிக்கும் சிறைச்சாலை அதிகாரிகளின் நியாயமான தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் உண்மைகளை மூடிமறைக்க அல்லது மறைக்க எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக நாம் உறுதியாக நிற்போம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50