ஜனநாயக மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் இன்று புதன்கிழமை (15) முற்பகல் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்குச் சென்று, ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரூ (Marc-Andre Franche) அவர்களைச் சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்ததுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
சமீபத்தில் இடம்பெற்ற சிறைச்சாலை சம்பவம் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் ஆகிய விடயங்களை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
இந்தக் கலந்துரையாடலில் கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தலதா அத்துகோரள, பிரேமநாத் சி. தொலவத்த, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டதாவது:
"நாட்டில் தற்போது எழுந்துள்ள சில முக்கிய விடயங்கள் குறித்து நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கினோம். குறிப்பாக இரு விடயங்களைக் கூற வேண்டும். முதலாவது, உத்தேச நீதித்துறை சீர்திருத்தங்கள். இலங்கையில் எவரும் இந்த மாற்றத்தைக் கோரவில்லை என்பதை நாம் ஐநா பிரதானியிடம் கூறினோம். சட்டத்தரணிகள் சமூகம், சிவில் சமூகம், நீதவான்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இதற்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அப்படியாயின் இது யாருடைய தேவைக்காகச் செய்யப்படுகிறது?
இரண்டாவது விடயம், இந்த முழு செயல்முறையிலும் எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லை. அரசு இதுவரையில் உத்தியோகபூர்வமாக எதனையும் தெளிவுபடுத்தவில்லை. இதேபோன்றதொரு முயற்சி 2021 இல் ஐக்கிய இராச்சியத்தில் (UK) மேற்கொள்ளப்பட்டபோது, இறுதி முடிவை எடுக்க ஒன்றரை வருடங்கள் எடுத்துக்கொண்டனர்.
பொதுமக்களினதும் சட்டத்தரணிகளினதும் கருத்துக்களைப் பெற்று, சுமார் 1200 பதில்களை ஆழமாக ஆராய்ந்தே அவர்கள் முடிவெடுத்தனர். ஆனால் நம் நாட்டில் அவ்வாறான ஒரு வரைவு கூட சமூகத்தில் இல்லை.
மேலும், நீதிபதிகளுக்கு மட்டுமன்றி சட்டத்தரணிகளுக்கும் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்களால் நீடிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாட்டில் வைத்தியர்கள் பற்றாக்குறையால் அறுவைசிகிச்சைகளைச் செய்ய முடியாத நிலை உள்ளபோது, அவர்களின் சேவிக் காலத்தையும் இவ்வாறு நீடிக்க முடியுமா? இது அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் வரும் சமத்துவக் கோட்பாட்டிற்கு முரணானதாகும். நாட்டில் உள்ள உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காமல், வீணான குழப்பங்களை ஏற்படுத்துவதற்கே அரசு முனைகிறது. இதற்கு எதிரான எமது நிலைப்பாட்டையே ஐநாவிடம் தெளிவுபடுத்தினோம்."
இச்சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டதாவது:
"பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் தலைமையில் நாம் ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளரைச் சந்தித்தபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்து விளக்கினோம். இதன்போது, அவராகவே முன்வந்து நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார்.
நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டமை ஓரளவிற்கு திருப்தியளித்தாலும், சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்தும் இதுவரை இடைக்கால அறிக்கை கூட அரச தரப்பால் வெளியிடப்படவில்லை.
இவ்வாறான ஒரு சம்பவத்தின்போது கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்கள் போன்ற குறைந்தபட்ச பலப்பிரயோக முறைகளையே கையாண்டிருக்க வேண்டும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உயர்கல்வி அமைச்சராகவும், கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தராகவும் இருந்த காலத்தில், வீதிப் போராட்டங்களின் போது நாம் இத்தகைய குறைந்தபட்ச பலப்பிரயோகக் கொள்கையையே பின்பற்றினோம். அப்படியாயின் இங்கு ஏன் அது நடக்கவில்லை?
இந்த வன்முறையில் 10 அதிகாரிகள் உட்பட 33 உயிர்கள் நாட்டுக்கு இழக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நீதிமன்றமும் இவர்களைக் குற்றவாளிகள் என இன்னும் தீர்ப்பளிக்கவில்லை. அப்படியாயின் இவர்களின் வாழும் உரிமையைப் பறித்தது யார்? 'வாழும் உரிமை' (Right to life) என்பது ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை சர்வதேச சட்டமாகும். 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது' என்ற பழமொழி உண்டு.
இந்த அரசு ஒரு முறைமை மாற்றத்தை ஏற்படுத்தும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் என்றே மக்கள் வாக்களித்தனர். ஆனால் நாடாளுமன்றத்தில் இருக்கும் 159 பேரில் 100 க்கும் மேற்பட்டோருக்கு ஒரு பிரதேச சபையில்கூட இருந்த அனுபவம் இல்லை. இத்தகைய அனுபவமின்மையே தற்போதைய அரச நிர்வாகத்தின் முக்கிய பிரச்சினையாகும். எனவே, வன்முறைகளோ, வேலைநிறுத்தங்களோ இன்றி, 21 ஆம் நூற்றாண்டின் கலந்தாலோசனை மற்றும் கூட்டுப் பங்களிப்புடனான ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் நின்றுகொண்டு, எனது நண்பரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு 'இதுவே போதும்' என நாம் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்."என மேலும் தெரிவித்துள்ளார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM