சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகள்

Published By: Vishnu

14 Jul, 2026 | 08:47 PM
image

(நெவில் அன்தனி)

ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நான்கு அணிகள் பீபா உலகக் கிண்ண அரை இறுதிகளுக்கு முன்னேறியுள்ளதால் சாத்தியமான நான்கு இறுதிப் போட்டிகளுக்கு வாய்ப்பு இருப்பதுடன் அவை அனைத்தும் விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்து கதைகளைக் கொண்டிருக்கும்.

இந்த நான்கு அணிகளும் அரை இறுதிகளில் விளையாடுவதால் 23ஆவது பீபா உலகக் கிண்ண அத்தியாயத்தில் புதிய ஓர் அணி சம்பியனாகும் வாய்ப்பை காணக்கிடைக்காது.

1962க்குப் பின்னர் முதல் தடவையாக சம்பியன்  பட்டத்தை   ஆர்ஜன்டீனா தக்கவைத்தால் அவ்வணி நான்காவது உலக சம்பியன் பட்டத்தை சூடிக்கொள்ளும். அதேவேளை, பிரான்ஸ் 3ஆவது தடவையாக சம்பியனாவதற்கு முயற்சிக்கும்.

மறுபுறத்தில் இங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகிய இரண்டு நாடுகளும் இரணடாவது தடவையாக சம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கின்றன.

நியூ யோர்க், நியூ ஜேர்ஸி விளையாட்டரங்கில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப் போட்டிக்கு முன்பதாக இந்த நான்கு அணிகளுக்கும் கடுமையான சோதனையும் சவாலும் காத்திருக்கின்றன.

ஓர் அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸும் ஸ்பெய்னும் மோதவுள்ளன. மற்றைய அரை இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவும் இங்கிலாந்தும் விளையாடவுள்ளன.

இந் நிலையில், சாத்தியமான நான்கு இறுதிப் போட்டிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.

இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இறுதிப் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது.

கத்தார் 2022 இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜன்டீனா, பிரான்ஸ் அணிகள் மீண்டும் ஒரு பரபரப்பான இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.

2024இல் ஐரோப்பிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்தும் ஸ்பெய்னும் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் இல்லை.

நடப்பு உலக சம்பியன் ஆர்ஜன்டீனாவும் நடப்பு ஐரோப்பிய சம்பியன் ஸ்பெய்னும் மோதுவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.

ஆர்ஜன்டீனா எதிர் பிரான்ஸ்

ஆர்ஜன்டீனாவும் பிரான்ஸும் இறுதிப் போட்டியில் மோதினால், அப்போட்டி கத்தார் இறுதிப் போட்டியின் மீள் பதிவாக அமையும்.

லூசெய்ல் விளையாட்டரங்கில் மூன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது அந்த ஆட்டம் பரபரப்புக்கு மத்தியில் 3 - 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இறுதியில் ஆர்ஜன்டீனா 4 - 2 என்ற பெனல்டிகளில் வெற்றிபெற்று 3ஆவது தடவையாக உலக சம்பியனானது.

இந்த இரண்டு அணிகளும் கால்பந்தாட்டத்தின் மிக உயரிய விருதை வென்றெடுக்க முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆர்ஜன்டீனா மீண்டும் சம்பியனாகும் பட்சத்தில் 1958இலும் 1962இலும் சம்பியனான பிரேஸிலுக்கு பின்னர் 64 வருடங்கள் கழித்து உலக சம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதலாவது நாடு என்ற பெருமையை பெறும்.

இங்கிலாந்து எதிர் பிரான்ஸ்

ஆர்ஜன்டீனாவை இங்கிலாந்தும் ஸ்பெய்னை பிரான்ஸும் வெற்றிகொண்டால் இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் இறுதிப் போட்டி நியூ ஜேர்சியில் நடைபெறும். அப்படி நடைபெற்றால் அமெரிக்க மண்ணில் இரண்டாவது தடவையாக ஐரோப்பிய நாடொன்று சம்பியனாவது உறுதி ஆகும். பிரேஸில் தேசத்தில் 2014இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் ஆர்ஜன்டீனாவை மேலதிக நேரத்தில் 1 - 0 என வெற்றிகொண்டு ஜேர்மனி சம்பியனாகி இருந்தது.

இதற்கு முன்னர் 1966இல் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கிண்ண அத்தியாயத்தில் மாத்திரமே இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி மேலதிக நேரத்தில் ஜேர்மனியை 4 - 2 என வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டிருந்தது.

அரை இறுதியில் ஸ்பெய்னை பிரான்ஸ் வீழ்த்தினால் 3ஆவது தொடர்ச்சியான தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதபெறும்.

இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால், முதல் தர கழகங்களில் ஒன்றாக விளையாடும் வீரர்கள் எதிரும் புதிருமாக விளையாட வேண்டிவரும்.

ரியல் மெட்றிட் கழகத்துக்காக விளையாடும் கிலியான் எம்பாப்பே, ஜூட் பெலிங்ஹாம் ஆகியோரும் பயர்ன் மியூனிச் கழகத்துக்காக விளையாடும் ஹெரி கேன், மைக்கல் ஒலிஸ் ஆகியோரும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடுவதைக் காணக்கூடியதாக இருக்கும்.

ஸ்பெய்ன் எதிர் இங்கிலாந்து

பிரான்ஸை ஸ்பெய்னும் ஆர்ஜன்டீனாவை இங்கிலாந்தும் வெற்றிகொண்டால் 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதிய இரண்டு அணிகளுக்கு இடையிலான மீள் இறுதிப் போட்டியாக உலகக் கிண்ண இறுதிப் போட்டி அமையும்.

ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் 1 - 2 என ஸ்பெய்னிடம் அடைந்த தோல்வியை நிவர்த்திக்க இங்கிலாந்து முயற்சிக்கும்.

இந்த இரண்டு அணிகளும் தலா ஒரு தடவையே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளன. இங்கிலாந்து 1966இலும் ஸ்பெய்ன் 2010இலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சம்பியனாகி இருந்தன.

இந்த இரண்டு ஐரோப்பிய நாடுகளும் தமது கண்டத்துக்குள் 26 போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. ஆனால் உலகக் கிண்ணத்தில் இரண்டு தடவைகளே ஒன்றுடன் ஒன்று விளையாடியுள்ளன.

சிநேகபூர்வ சர்வதேச போட்டிகள் உட்பட 13 வெற்றிகளை இங்கிலாந்து ஈட்டியுள்ளதுடன் ஸ்பெய்ன் 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

உலகக் கிண்ணத்தில் 1950இல் ஸ்பெய்ன் 1 - 0 என இங்கிலாந்தை வெற்றிகொண்டிருந்தது. 32 வருடங்கள் கழித்து 1982இல் நடைபெற்ற இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உலகக் கிண்ணப் போட்டி 0 - 0 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. அப் போட்டி முடிவுடன் இரண்டு நாடுகளும் முதல் சுற்றுடன் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறின.

இப்போது 42 வருடங்கள் கழித்து இரண்டு அணிகளும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகலாம்.

ஆர்ஜன்டீனா எதிர் ஸ்பெய்ன்

ஆர்ஜன்டீனாவும் ஸ்பெய்னும் அரை இறுதிகளில் முறையே இங்கிலாந்தையும் பிரான்ஸையும் வெற்றிகொண்டு நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஒன்றையொன்று எதிர்த்தாடினால், அப் போட்டி ஸ்பானியை மொழியை பேசும் இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியாக அமையும். உலகக் கிண்ண வரலாற்றில் இது ஓர் அபூர்வ நிகழ்வாகும்.

அப்படி இரண்டு அணிகளும் மோதினால் 60 வருடங்ளுக்குப்  பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பாக இப் போட்டி அமையும்.

இந்த இரண்டு அணிகளும் 1966 உலகக் கிண்ண முதல் சுற்றில் மோதிக்கொண்டபோது ஆர்ஜன்டீனா 2 - 1 என வெற்றிபெற்றிருந்தது.

இதில் இன்னும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், உலக சம்பியனும் ஐரோப்பிய சம்பியனும் மோதும் முதலாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டியாக இது அமையும்.

ஸ்பெய்ன் வெற்றிபெற்றால் உலகக் கிண்ண வரலாற்றில் தலா இரண்டு தடவைகள்  சம்பியனான   அணிகள் பட்டியலில் உருகுவே, இத்தாலி ஆகியவற்றுடன் இணைந்துகொள்ளும்.

ஆர்ஜன்டீனா வெற்றிபெற்றால் தலா நான்கு தடவைகள் சம்பியனான ஜேர்மனி, இத்தாலி ஆகியவற்றுடன் இணைந்துகொள்ளும்.

இந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும் போது இரண்டு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்து நட்சத்திர வீரர்களான அனுவம்வாய்ந்த லியோனல் மெஸ்ஸியும் இளம் வீரரான லாமின் யமாலும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடுவதை பார்க்கும் பாக்கியம் ரசிகர்களுக்கு கிடைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46