நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம்: 287 பேரிடம் வாக்குமூலம் பதிவு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு

Published By: Vishnu

14 Jul, 2026 | 08:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது,  சிறைச்சாலைகள் அவசர நிலமைகளை கையாளும் படையணி குழுவை சேர்ந்த 10 உத்தியோகத்தர்கள் (சிறைச்சாலை காவலாலர்கள்) மற்றும் 21 கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 287 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் செவ்வாய்க்கிழமை (14) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (14) நீர்கொழும்பு  நீதிவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக்க நீதிமன்றில்  விளக்கமளிக்கையில்,  மோதல் சம்பவம் சந்தரப்பத்தில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற வேண்டியுள்ளது. தற்போது இக்கைதிகள் நாடுமுழுவதும்  உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதனை பரிசீலித்த நீதிவான் ஷிலனி பெரேரா, கைதிகளிடம் வாக்குமூலம் பெற தேவையான வசதிகளை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வணிக  குற்றப் பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் களுஆராய்ச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நீதிமன்றில் மேலதிக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

தொடர்ந்து மன்றில் விடயங்களை முன்வைத்த வணிக குற்றப்பிரிவழனர்,  இக்கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்படும் அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக கொலைக் குற்றம், கைத்துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடரப்படும் என குறிப்பிட்டனர். தண்டனைச் சட்டக்கோவையின் 102, 113, 146, 186, 300, 315, 316, 317, 344 ஆகிய பிரிவுகளின் கீழும் ஏனைய சட்டங்களின் கீழும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மனித படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், தோட்டாக்கள் அடங்கிய 60 துப்பாக்கிகள் வழக்குப்பொருளாக  குறிப்பிடப்பட்டு,  வழக்குப்பொருள்  களஞ்சியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  அதற்கமை வழக்கு விசாரணைக்கு அவசியமான சந்தரப்பங்களின்  போது அவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும் விடயங்களை முன்வைத்த அதிகாரிகள், கைதிகள் சிறைச்சாலை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின்  டிவிஆர் இயந்திரங்களை சேதப்படுத்தியுள்ள போதிலும், அதிலிருந்த இரண்டு கணினி வன்வட்டுக்களை   அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவற்றை  இரச இரசாயனபகுப்பாய்வுக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினிப் பிரிவுக்கு  அனுப்பி வைக்குமாறு அதிகாரிகள்   இதன்போது நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை  முன்வைத்திருந்ததுடன், நீதிவான்  அதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில்  சட்ட வைத்திய  அதிகாரியால் வழங்கப்பட்ட 3 சுருக்கமான பிரேத பரிசோதனை அறிக்கைகளும்  மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. கொடூரமான தாக்குதல்கள், துப்பாக்கிச் சூட்டு காயங்கள் மற்றும் திறந்த அறிவிப்புகள்  குறித்து அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இந்த  மோதல் குறித்து நீதிமன்றில் தெரிவிக்கையில்,  கனம் நீதிவான் அவர்களே, கடந்த 5 ஆம் திகதி காலையிலேயே இந்த சம்பவத்திற்கான ஆரம்பப் புள்ளி உருவானது. சிறைச்சாலையின் 'A1' அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஷ் புஷ்பகுமார எனப்படும் 'கடுவெல்லேகம சுரேஷ்' என்ற கைதிக்கு, உடற்பயிற்சி செய்ய வழங்கப்பட்ட நேரம் போதாது எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலவரம் செய்துள்ளார்.

இதனால் அவர் 'L' வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அவர் மோதலில் ஈடுபட்டதால் மீண்டும் 'A1'  அறைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு ஏற்பட்ட கடுமையான மோதலில் ஆரம்பத்தில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன் 36 பேர் காயமடைந்தனர். இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயன்றபோது, கைதிகள் முழு சிறைச்சாலையின் கட்டுப்பாட்டையும் தமது கைகளுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அதிகாரிகள் நீர்கொழும்பு பொலிஸாருக்கும், நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கும் அவசர தகவல் வழங்கினர். எனினும், சம்பவ இடத்தை சோதனையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை கைதிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.

மறுநாள் வரை சிறைச்சாலை கைதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதனால் சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பிலிருந்து 89 சிறைச்சாலை பொலிஸ் உத்தியோகத்தர்களை வரவழைத்தனர். அக்காலப்பகுதியில் சிறைச்சாலையில் மொத்தம் 2,417 கைதிகள் இருந்தனர். 162 தண்டனை பெற்ற கைதிகள், 2,255 விளக்கமறியல் கைதிகள், இதில் பெண்கள் 161 பேர் அடங்குவர். அத்துடன் 161 சிறைச்சாலை ஊழியர்கள் கடமையில் இருந்தனர். மொத்தம் 16  கைதிகள் அறைகள் காணப்படுகின்றன.

கடந்த 6 ஆம் திகதி காலையுணவு வழங்கச் சென்ற போது, 'அதிகாரிகளே உள்ளே வர வேண்டாம், உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்கள்' என கைதிகள் எச்சரித்துள்ளனர். அன்றைய தினம் காலை 10.30 மணிக்கும் 10.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.  இதன்போது கைதிகள் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கத் தொடங்கினர். அதிகாரிகள் ஓடிவந்து இரும்பு வலைக் கதவு வழியாக தப்பித்துக் கொண்டனர்.

ஆனால், மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்ற  சிறைச்சாலைகள் அவசர நிலமைகளை கையாளும் படையணி குழு உத்தியோகத்தர்களுக்கு வலைக் கதவுப் பக்கமாக ஓடிவந்து தப்புவது குறித்து போதிய பரிச்சயம் இல்லாததால், அவர்கள் உள்ளேயே மாட்டிக்கொண்டனர். அங்கே கைதிகள் அவர்களை  கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.  கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து, துப்பாக்கிகளைத் எடுத்து சுடத் தொடங்கிய பின்னரே, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  பதில் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டனர்.

சிறைச்சாலைக்குள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ரி-56 ரக தோட்டாக்கள் மற்றும் 9 எம்எம் ரக தோட்டாக்கள் உட்பட 271 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது 3 விசாரணைக் குழுக்களைச் சேர்ந்த 40 அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சந்தேகநபர்கள் பெயரிடப்படவுள்ளனர். சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பிட மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறும், இராணுவத்தினரால் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் நிகழ்நிலை பதிவுகளைப் பெற்றுக்கொள்ள இராணுவ சமிக்ஞை படையணிக்கு உத்தரவிடுமாறும் பொலிஸார் கோரியிருந்த நிலையில்,  நேற்றைய தினம் பொலிஸார் விடுத்திருந்த அனைத்து  கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை  நீதிவான் பிறப்பித்திருந்தார்.

மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்ச்சியங்களைப்  பரிசீலித்த நீதிவான், விசாரணை  முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் 16 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும், மரண விசாரணைகள் தொடர்பில் இதுவரை சாட்சியங்கள் அழைக்கப்படாத மரணங்கள் குறித்து சாட்சியங்களை அழைக்கத் தயார்படுத்துமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம்...

2026-08-19 15:09:39
news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26