கார்மேகங்கள் சூழும் மாகாண சபை தேர்தல்கள் குறித்த பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பிரகடனம்

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 11:13 AM
image

கலாநிதி தயான் ஜயதிலக

'நாட்டின் அரசியல் கலாசாரத்திற்குள் ஊழல் பெருகுவதற்குப் பங்களிப்பு செய்துள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை மாற்றப்பட வேண்டும். தேர்தல் முறைமைக்குள் ஜனநாயகத்துக்கு அவசியமான தகுதிகள் இல்லாதபோது, வெறுமனே தேர்தல்களை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை' என்று 10 ஜூன் 2026 அன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய தேர்தல் சட்டம் இல்லாமல் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது என்றும், அதற்கான காலவரையறை எதனையும் குறிப்பிடாமலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஆபத்தானது.

ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தனது பெரும்பான்மையைக் கொண்டு, 'அரசியல் கலாசாரத்தில் ஊழலுக்கு வழிவகுத்த விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும்' என்ற இதே விடயத்தைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களையும் ஒத்திவைக்க வாதிடலாம்.

நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பிரதமரின் உத்தியோகபூர்வ பதிலில் இருந்தே மேற்படி மேற்கோள் எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்களை பாராளுமன்றம் கொண்டுவரும் வரை, மாகாண சபை முறைமைக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில், தற்போதிருக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் உடனடியாக ஒருமுறை மட்டும் தேர்தலை நடத்துவது உட்பட சில சாத்தியமான பரிந்துரைகளை சட்டமா அதிபர் முன்வைத்திருந்த நிலையிலேயே ரவி கருணாநாயக்கவின் கேள்வி அமைந்திருந்தது.

குறித்த பரிந்துரைகளை திட்டவட்டமாக நிராகரித்த பிரதமர் அமரசூரிய, தேர்தலை காலவரையறையின்றி தள்ளிப்போட்டுள்ளார். தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நீர்த்துப்போகச் செய்து, தொகுதி வாரியான பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டதோடு, இதற்கு எல்லை நிர்ணயம் அவசியமாகும் என்றும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பிரதமரால் முன்வைக்கப்பட்ட 'அநுரகுமார திசாநாயக்க - ஜேவிபி - தேசிய மக்கள் சக்தி' அரசாங்கத்தின் இந்த முடிவு, மூன்று காரணங்களின் சேர்க்கையினால் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கும் ஆபத்தான ஒன்றாக அமைகிறது:

1.இது ஒட்டுமொத்த அரச கட்டமைப்பின் குறிப்பிட்ட மட்டத்தில் நீண்டகாலமாகத் தாமதமாகியுள்ள வாக்குரிமையைப் பயன்படுத்துவதை மேலும் முடக்குகிறது.

2.அதிகாரப்பகிர்வு மூலம் கட்டமைப்பு ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட அமைப்பை மீண்டும் மத்தியமயமாக்குகிறது.

3.இனப்பிரச்சினைக்கான 'மிதவாத-சீர்திருத்த' தீர்வை இடைநிறுத்தி, மீண்டும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்குகிறது.

பிரதமரின் மேற்படி பிரகடனத்தின் அர்த்தம் என்னவென்றால், நாட்டின் நான்கு அடுக்கு அரசியல் அமைப்பில் மிக முக்கியமான மூன்றாவது அடுக்கான மாகாண சபைக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குரிமை உண்மையில் காலவரையறையின்றி முடக்கப்படுகிறது என்பதாகும்.

நிர்வாக ஜனாதிபதி முறையின் கீழ் அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதை ஓரளவிற்குக் குறைத்த இலங்கையின் மிக முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தம் மாகாண சபையாக இருக்கையில் அது இப்போது முடக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இலங்கையின் அரசியல் அமைப்பு 1988ஆம் ஆண்டு மாகாண ரீதியான அதிகாரப் பகிர்வுக்கு முன் இருந்த கடுமையான அதிகார மத்தியமயமாக்கல் நிலைக்கு மீண்டும் சென்றுள்ளது.

இதைவிட மோசமான விடயம் என்னவென்றால், சுதந்திரத்திற்கு முந்தைய 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களுக்குச் செல்லும் நாட்டின் பழமையான அரசியல் பிரச்சினையான 'இனப் பிரச்சினை' விடயத்தில் இது ஏற்படுத்தும் தாக்கமாகும். மாகாண சபை முறை என்பது மையத்திலிருந்து பிராந்தியத்துக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் கொள்கையின் வடிவமாகும்.

இதன் மூலம் தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக அல்லது அதனைத் தணிப்பதற்கான சுயாட்சி வழிமுறை வழங்கப்பட்டது. மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் ஏற்படும் இந்த காலவரையற்ற தாமதம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண மன்றங்களை முடக்கி, மாகாணங்களுக்கும் அதன் மக்களுக்கும் அதிகாரப்பகிர்வை பூச்சியமாக்குகிறது.

1984ஆம் ஆண்டின் அனைத்துக் கட்சி மாநாடு, 1986 நடுப்பகுதியில் நடைபெற்ற அரசியல் கட்சிகள் மாநாடு, 1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் 13ஆவது திருத்தம் ஆகியவற்றின் மூலம் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வு அல்லது சுயாட்சித் தீர்வு இப்போது மௌனிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபை முறைமையால் முப்பது வருட காலப்போரையும், தெற்கின் இரண்டாவது உள்நாட்டுப் போரையும் தாண்டி, ஜனநாயகத்தை விரிவுபடுத்திய ஒரு கட்டமைப்பு-சீர்திருத்தத் தீர்வாக அதிகாரப்பகிர்வு தப்பிப்பிழைத்தது.

அத்துடன் 1983-1984இன் பிற்பகுதியில் இருந்து இந்தியாவினாலும் சர்வதேச சமூகத்தினாலும் இலங்கை அரசுடன் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பகிர்வு தொடர்பான ஒட்டுமொத்த விவாதமும் இப்போது நின்றுபோயுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகள் இல்லாமையானது ஆபத்தான அரசியல் வெற்றிடத்தை உருவாக்குகிறது, குறிப்பாக அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சரால் இலங்கை மற்றும் அதன் தமிழ் பிரஜைகள் குறித்து வெளிப்படுத்தப்படும் கருத்துக்களைக் கவனிக்கும்போது அந்நிலை இன்னும் தீவிரமடைகிறது.

ஜனநாயக ரீதியான தமிழ் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மாகாண சபைகள் நீண்டகாலமாக இல்லாததால், அநுரவின் ஜனாதிபதி பதவிக்கு முன் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் ஓரங்கட்டப்பட்டிருந்த பிரபாகரன் ஆதரவு மற்றும் தமிழீழ ஆதரவு உணர்வுகளின் வெளிப்பாடுகளையும், மக்கள் போராட்டங்களையும் நாம் இப்போது அதிகமாகக் காண்கிறோம்.

மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் வாழும் தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரிவினைவாத ஆதரவு மற்றும் இலங்கை எதிர்ப்பு ரீதியில் குறிப்பிடத்தக்க அரசியல் முன்னேற்றங்களை அடைந்து வரும் இத்தருணத்தில், இலங்கையில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற அமைப்புகளுக்கு கணிசமான மாகாண அளவிலான அதிகாரப்பகிர்வு உள்ளது என்ற 'கேடயத்தை' அநுர அரசாங்கம் இழக்கச் செய்துள்ளது.

இந்த காலவரையற்ற ஒத்திவைப்பு எங்களை பல தசாப்தங்களுக்குப் பின்னோக்கி, மிகவும் குறுகிய அரசியல் கட்டiமைப்புக்குள் அழைத்துச் செல்கிறது, அதாவது அதிகாரப்பகிர்வு இல்லாத ஒற்றையாட்சி மற்றும் கட்டுப்பாடற்ற, சமநிலையற்ற ஜனாதிபதி முறை ஆகியவற்றின் சேர்க்கைக்குத் திருப்புகிறது. அப்படியாயின், நீண்டகாலமாக நிலவும் அடையாளம் சார்ந்த தமிழர்களின் கூட்டு உணர்வுகளை எவ்வாறு கையாள்வது என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

ஜனநாயகம் அல்லது அதிகாரத்துவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, இது எங்களை 1970களுக்கு அழைத்துச் செல்கிறது. அப்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் (தற்போதைய ஜேவிபி-தேசிய மக்கள் சக்தி நிர்வாகத்தைப் போல), மாநகர சபைகள் மற்றும் பிற உள்ளுராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து, பல வருடங்களாக விசேட ஆணையாளரை நியமித்திருந்தது.

எவ்வாறாயினும் தேர்தல் எனும் பாதுகாப்பு அடிப்படையை தடுத்து வைப்பதன் மூலம் இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ எந்தவொரு அரசாங்கமும் பயனடைந்ததாகச்சரித்திரம் இல்லை. அதன் எதிர்விளைவு இன்னும் அதிகமாக இருக்கும்.

பிரிவினைவாத-கூட்டாட்சி

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்பகால சிங்களப் பேரினவாத வெளிப்பாட்டிற்கு எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் கூட்டாட்சிப் பிரகடனம் முதிர்ச்சியற்ற, சிந்திக்கப்படாத எதிர்வினை என்ற எனது விமர்சனம் மிகவும் தாராளமானது என்றும், செல்வநாயகம் சுதந்திரத்திற்கு முன்பே பிரிவினைவாதத்தை - தமிழர்களுக்கான தனி, சுதந்திர அரசை - பகிரங்கமாக ஆதரித்தார் என்றும் சுயாதீன ஆராய்ச்சியாளர் பிரஹர்ஷினி டயஸ்  வாதிட்டுள்ளார்.

பிரஹர்ஷினி டயஸ் 26 நவம்பர் 1947 இல், சோல்பரி அரசியலமைப்பின் கீழ் அரச சபையின் ஆரம்ப அமர்வுகளின்போது, காங்கேயன்துறை தொகுதிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், தனது உரையில் பிரிவினைவாதக் கருத்தை எழுப்பினார். யாழ்ப்பாணத்தமிழர்களுக்கு சிலோனிலிருந்து பிரிந்து செல்லும் உரிமை இருப்பதாகவும், அவர்கள் விரும்பினால் இந்தியாவின் ஆதரவோடுகூட அது நடக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

26 நவம்பர் 1947 இல் சபையில் உரையாற்றிய சி. சுந்தரலிங்கம், செல்வநாயகம் சிலோனிலிருந்து பிரிந்து செல்வது குறித்தும், இந்தியாவின் தமிழ் பேசும் பிராந்தியங்களுடன் கூட்டாட்சியை உருவாக்குவது குறித்தும் யாழ்ப்பாணத்தில் நடந்த பகிரங்கக் கூட்டங்களில் பேசியதை வெளிப்படுத்தினார்.

செல்வநாயகம் ஆரம்பத்தில் இக்கருத்துக்களை மறுத்த போதிலும், அதற்கான ஆதாரங்கள் - குறிப்பாக 17 நவம்பர் 1947 இல் டைம்ஸ் ஒப் சிலோன் இதழில் வெளியான அவரது உரைகள் - முன்வைக்கப்பட்டபோது, அவர் தனது மறுப்பைத் தொடரவில்லை.

செல்வநாயகம் சிலோன் பிரிட்டிஷ் பேரரசிலிருந்து பிரிந்து செல்லும் உரிமையைக் கோரும் போது, தமிழ் மக்கள் ஏன் தாங்கள் விரும்பினால் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டிருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

தற்போது அதிர்ச்சியூட்டும் விதமாக, இதில் செல்வநாயகம் - அநுர - ரணில் - ஹர்ஷ ஆகியோருக்கு இடையில் ஒரு தொடர்ச்சி காணப்படுகிறது

01.எஸ்.ஜே.வி. செல்வநாயகம் திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் பிரதமர் நேருவுக்குப் பரிசாக வழங்குவது குறித்து அன்று அதிகாரபலம் இல்லாமல் பரிந்துரைத்ததை, ஜனாதிபதி அநுர திசாநாயக்க திருகோணமலை-மன்னார் பிராந்தியம் தொடர்பாக இந்தியாவின் பிரதமர் மோடிக்கு தற்போதைய சூழலில் பரிந்துரைத்திருப்பது போல் தோன்றுகிறது.

02.சிலோனிலிருந்து வடக்குத் தமிழர்கள் பிரிந்து சென்று இந்தியாவின் தமிழ் மாகாணங்களுடன் கூட்டாட்சி அமைப்பது என்ற செல்வநாயகத்தின் யோசனையை, அநுர இந்தியாவின் திருகோணமலை-மன்னார் தடம் உட்பட இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள வெளிப்படுத்தப்படாத உடன்படிக்கைகளால் மட்டுமல்லாமல், ரணில் விக்கிரமசிங்க - மிலிந்த மொரகொட - ஹர்ஷ டி சில்வா ஆகியோரின் இலங்கையின் வடக்குப் பகுதியை தமிழ்நாட்டுடன் பொருளாதார ரீதியாகவும் பௌதிக ரீதியாகவும் இணைக்கும் திட்டத்தாலும் எளிதாக்கப்படும்.

பிரஹர்ஷினி டயஸின் ஆய்வின்படி, கூட்டாட்சி முறைக்கு (அது சட்டப்பூர்வமாகவோ அல்லது நடைமுறை ரீதியாகவோ இருந்தாலும்) எனது நீண்டகால எதிர்ப்பை உறுதிப்படுத்துகிறது. அது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் இதர தமிழ்க் கட்சிகளால் முயற்சிக்கப்பட்டாலும் சரி வரதராஜப்பெருமாளின் வட,கிழக்கு மாகாண சபையின் மூலம் தேடப்பட்டாலும் சரி (அதிலிருந்து நான் ஆறு மாதங்களில் ராஜினாமா செய்தேன்); ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் 1995 மற்றும் 1997 'அரசியல் தீர்வுப் பொதிகளில்' காணப்பட்டாலும் சரி; அல்லது நல்லாட்சி அரசாங்கத்தின் போது ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழரசுக்கட்சி தயாரித்த புதிய ஒற்றையாட்சி அல்லாத அரசியலமைப்பு வரைவில் மறைமுகமாக இருந்தாலும் சரி, அது எதிர்க்கப்பட வேண்டியதே ஆகும்.

அதனால்தான், அரசின் வெளிப்படையான ஒற்றையாட்சித் தன்மையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக 'ஒருமித்த' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான தந்திரமான முயற்சிகளை இலங்கை எதிர்க்க வேண்டும். இந்த வார்த்தைக்கு சந்திரிகாவின் சுதந்திரக் கட்சியும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் உடன்படுமாறு தமிழரசுக்கட்சி பிரசாரம் செய்தது.

பின்னர் மங்கள சமரவீர மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் நவம்பர் 2019இல் சஜித்தின் ஜனாதிபதி தேர்தல் தேர்தல் அறிக்கையில் அதனைத் திருட்டுத்தனமாக நுழைத்தனர். (மஹிந்த ராஜபக்ஷ அதன் முதல் அச்சை பகிரங்கப்படுத்திய பின்னரே சஜித்தும் சம்பிக்கவும் அதைக் கவனித்து மீளப்பெற்று பெற்று, திருத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டனர்).

மூலோபாய ரீதியாக நீடிக்கக்கூடிய அரசு

13ஆவது திருத்தம் 1987இன் பிற்பகுதியில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தினால் உடனடியாக விமர்சிக்கப்பட்டது. போருக்குப் பின்னரும் (2011) அவரது வாரிசான ஆர்.சம்பந்தனால் ஒரு தீர்வின் அடிப்படையாக அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இது மாகாண சபைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் எந்த வகையிலும் கூட்டாட்சிக்கு இணையானவை அல்ல என்பதையும், தனி நாடாக மாற்றப்படக் கூடியவை அல்ல என்பதையும் நிரூபிக்கிறது.

13ஆவது திருத்தம் என்பது கூட்டாட்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது சீனா மற்றும் வியட்நாம் முதல் பிலிப்பைன்ஸ் மற்றும் ஸ்பெயின் வரை பரவலாகக் காணப்படும் ஒற்றையாட்சி அரசுக்குள் 'இன் சுயாட்சி அல்லது அதிகாரப் பகிர்வு' என்ற வகையைச் சேர்ந்தது.

இலங்கையைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசின் கீழ் நீடித்த முறையில் நிர்வகிக்க முடியாது என்று எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1926இல் குறிப்பிட்டது சரியானது தான்.

எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் அவர் 1957இல் செய்துகொண்ட ஒப்பந்தம், இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னரான 13ஆவது திருத்தத்தின் வடிவத்தை முன்கூட்டியே காட்டியது, அதாவது கூட்டாட்சி அல்லாத (ஒற்றையாட்சி) அரசுக்குள் பகுதி சுயாட்சி கொண்ட 'பிராந்திய சபைகள்' என்பதாகும்.

பிரச்சினை மூலோபாய, கருத்தியல் ரீதியானது. நாம் வாழும் நாட்டிற்கு நாம் விரும்பும் எல்லைகள் என்ன? இலங்கையின் நலனுக்கு எந்த எல்லைகள் சிறந்ததாக அமையும்? அது நமது இயற்கை புவியியல் எல்லைகளுடன், அதாவது இந்தத் தீவின் முழுமை மற்றும் அதன் கடல் எல்லைகளுடன் ஒத்ததாக தெளிவாக இருக்க வேண்டும்.

இயற்கை எல்லைகளைக் கொண்ட ஒரு அரசை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், அது மொழி, இன-மொழி அல்லது இன-மத எல்லைகளின் கொள்கையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டதொன்று அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

இலங்கையின் கட்டமைப்பு என்பது, நாட்டின் இன-மொழி அல்லது இன-மத பெரும்பான்மைச் சமூகம் தீவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் அமைப்பைக் கொண்டிருக்கவில்லை.

எனவே, தீவு முழுவதையும் ஒற்றை மொழியியல் மற்றும் மதப் பெரும்பான்மைக்கான அரசியலமைப்புச் சலுகையுடன் கூடிய இறுக்கமான ஒற்றையாட்சி வடிவத்தின் கீழ் இயக்க முடியாது. 1956 மற்றும் குறிப்பாக 1972 முதல் அவ்வாறு செய்ய முயன்ற பேரினவாத திட்டமே முப்பது ஆண்டுகால பிரிவினைவாதப் போரைத் தூண்டியது.

புவியியல் இருப்பிடத்தைக் கொண்ட இலங்கை தீவில், வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஒரு கூட்டாட்சி அரசின் அதிகாரங்களை வழங்குவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டிலிருந்து குறுகிய கடல் பகுதியால் மட்டுமே பிரிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பை விட யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாடு நெருக்கமாக இருக்கும் சூழலிலும், கூட்டாட்சி முறைமையானது பிரிவினைக்கு வழிவகுத்து, தீவின் வடக்குப்பகுதி தென்னிந்தியாவுடன் இணைய வழிவகுக்கும். இது ஒட்டுமொத்த தீவின் புவிசார் அரசியல், பொருளாதார சமநிலையை சீர்குலைத்துவிடும்.

தேசிய அளவில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உன்னத அதிகாரமாகத் தொடர்வது இன்றியமையாதது.

இது முதலமைச்சர்களையும் மாகாண சபைகளையும் ஒற்றையாட்சி கட்டமைப்பிற்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியும். உள்ளுர் அடிப்படைகளைக் கொண்ட, தீவிரவாதக் கூறுகளுடன் கூட்டணிகளை ஏற்படுத்தக்கூடிய பாராளுமன்றப் பிரதிநிதிகளின் சபையால் இதைச் செய்ய முடியாது.

புவிசார் அரசியல் காரணங்களால் தமிழ்நாடு அருகாமையில் இருப்பதனால் இலங்கை கூட்டாட்சிக்கு மாறுவதைத் தடுக்க வேண்டியிருப்பது போலவே, தீவின் புவியியல் மற்றும் மக்கள் தொகையமைப்பானது மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசு அதன் இயற்கை எல்லைகளைத் தக்கவைத்துக் கொள்வதைத் தடுக்கிறது. ஏனெனில் வடக்கு, கிழக்கில் தீவின் பெரும்பான்மைச் சமூகம் பேசும் மொழியைப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இல்லை.

இலங்கை அரசின் எல்லைகளை அதன் இயற்கை எல்லைகளுடன் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான ஒரேவழி, கூட்டாட்சியை எதிர்ப்பதாகும். அதேவேளையில், மாகாண அதிகாரப்பகிர்வு கொண்ட ஒற்றையாட்சி வடிவத்தைக் கொண்டிருப்பதாகும். அதுவே 13ஆவது திருத்தமும் மாகாண சபைகளும் வழங்கும் தற்காப்பு அரணாகும்.

இணங்கிப்போகும் இடதுசாரிகள்

1970களின் முற்பகுதியில் இருந்து ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வலதுசாரி மற்றும் அதிகாரத்துவப் போக்கிற்கு எதிராக சுதந்திரமான, கடுமையான, விமர்சன ரீதியான நிலைப்பாட்டை எடுத்த இடதுசாரி அறிவுஜீவி பேராசிரியர் குமாரி ஜயவர்தன போலல்லாமல், தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆதரவு கல்வியாளர்கள் இணங்கிப் போகிறார்கள், ஏனெனில்,

1.மாகாண சபை தேர்தல்களை முடக்கிய பழமைவாத- புதிய தாராளவாத ரணில் விக்கிரமசிங்கவின் 2017ஆம் ஆண்டு சட்ட சூத்திரத்தையே இந்த அரசாங்கமும் பின்பற்றுகிறது.

2.தேசிய இனப் பிரச்சினைக்காக இலங்கை நடைமுறைப்படுத்திய ஒரே கட்டமைப்பு-சீர்திருத்த தீர்வை ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முடக்கி வைக்கிறது.

3.மார்க்ஸ் மற்றும் லெனினின் அரசியல் சிந்தனையின் அடிப்படைக் கோட்பாடு என்னவென்றால், அரசியல் சர்வாதிகாரத்திற்கு எதிராக அரசியல் ஜனநாயகத்தைப் பெறுவதே முதல் மூலோபாய நோக்கம் என்பதாகும். ஜனநாயகத்திற்கான அரசியல் போராட்டமே சமூக-பொருளாதார விடுதலைக்கான போரட்டங்களுக்கு வழிவகுக்கிறது. ஆனால் இந்த அரசாங்கம் அடிப்படை அரசியல் ஜனநாயகத்தின் எல்லையான - வாக்குரிமையைப் பயன்படுத்துவதை சுருக்கியுள்ளது.

இத்தகைய இணங்கிப்போகும் சமகால இடதுசாரி புத்திஜீவிகளால், வளர்ந்து வரும் சமூக பின்னடைவு கருத்தியல் ரீதியாக வலதுசாரி நோக்கியதாக மாறுவதில் ஆச்சரியமில்லை - அது புதிய தாராளவாத மத்திய-வலதாக இருந்தாலும் சரி அல்லது புதிய தாராளவாத-தேசியவாத-வலதாக இருந்தாலும் சரி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயன்படுத்தப்படும் முறையிலேயே தங்கியிருக்கிறது அதிகாரத்தின் மீதான...

2026-08-18 20:15:28
news-image

2029ஆம் ஆண்டு நிச்சயம் ஆட்சியை கைப்பற்றுவோம்...

2026-08-17 16:59:31
news-image

ஏற்றுமதி, இறக்குமதித் தடை மற்றும் வரிக்கொள்கையால்...

2026-08-17 16:28:29
news-image

இலங்கையின் முதலீட்டு பொறிமுறையில் நிலவும் நடைமுறை...

2026-08-17 16:28:11
news-image

22ஆவது திருத்தமும் ஜனாதிபதியின் நிலைப்பாடும்

2026-08-16 16:26:43
news-image

பூர்வீக தேசியத்தின் ஓயாத நகர்வுகள்

2026-08-16 16:26:14
news-image

இலங்கை முப்படைகளின் மறுசீரமைப்பு

2026-08-16 16:17:20
news-image

வரி திரட்டலைத் தாண்டி: சூரிய சக்தி...

2026-08-16 15:33:42
news-image

காஸா­வுக்கு அப்பால்: மேற்குக் கரையில் சத்­த­மின்றி...

2026-08-16 15:23:46
news-image

450 மில்லியன் அரபு மக்களை விடுவிக்க...

2026-08-16 15:18:50
news-image

இனவாதம் ஓயாத பூமி

2026-08-16 09:03:27
news-image

மரண தண்டனை தீர்ப்பும் பயமுறுத்தல்களும்

2026-08-16 08:58:33