மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியம் பெற்றது போதும். அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி பிரதமர், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், அலோசியஸ் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (4) பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“மத்திய வங்கி பிணைமுறி விகாரம் நாட்டில் பெரும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.  

“மத்திய வங்கி பிணைமுறி மோசடி பிரதமரின் வழிநடத்தலின் பிரகாரமே இடம்பெற்றுள்ளது. அவரது ஒத்துழைப்பில்லாமல் குறித்த மோசடி இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனத் தொடர்ச்சியாக நாம் தெரிவித்து வந்தோம். 

“ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளிக்கையில், “குறித்த ஏல விற்பனை செயன் முறையை மாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கினார்” எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தின் சூத்திரதாரி பிரதமர் என்பது நிரூபிக்கப்படுகிறது.

“இதன் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறான குற்றச்சாட்டுள்ள ஒருவர் நாட்டின் பிரதமராக தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாது.”

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.